என் மலர்
ராமநாதபுரம்
- கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 182 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாக ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூத் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி மின்னியல் துறைத்தலைவர் மேஜர் நாகராஜன் வாழ்த்தி பேசினார். முன்னாள் வேலைவாய்ப்பு அதிகாரி மரியதாஸ் வரவேற்றார்.
வேலைவாய்ப்பு முகாமில் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம், காளையார்கோவில் செயின்ட் மைக்கேல், ராமநாதபுரம் செய்யது அம்மாள், கீழக்கரை முகமது சதக் ஆகிய பொறியியல் கல்லூரி மாணவர்களும், பரமக்குடி முத்தாலம்மன், வேம்பார் தேவநேசன், காளையார்கோவில் செயின்ட் மைக்கேல், ராமேசுவரம் உதயம், கீழக்கரை முகமது சதக் ஆகிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் துணை மேலாளர் சங்கர் தங்களது நிறுவனத்தை அறிமுகப்படுத்தி நேர்முகத் தேர்வை நடத்தினார். ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரிவு மேலாளர் வேல்மணி மற்றும் உதவி பொது மேலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் நேர்முக தேர்வுகளை நடத்தினர். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாணவர் களுக்கு பணிநியமன ஆணை களை வழங்கினர். இதில் 182 மாணவர்கள் ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் கல்லூரி வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூத் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
பரமக்குடி
பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் சி.பி.எஸ்.சி. பப்ளிக் பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.
பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், அறிவியல் விஞ்ஞானி இங்கர்சால் செல்லதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கையை முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் வாசித்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக முதன்மை அலுவலர் ஜெயசுதா செய்திருந்தார்.
கவுன்சிலர்கள் அப்துல் மாலிக், ஜீவரத்தினம், வாசன் பள்ளியின் தாளாளர் வாசன், புது நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜவேலுச்சாமி, அரசு வழக்கறிஞர் கேசவன், தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
- ராமநாதபுரத்தில் வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழா நடந்தது.
- தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடந்தது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ராமநாதபுரம் அரண்மனை மேற்குத்தெரு பகுதியில் உள்ள திருமண அரங்கத்தில் வள்ளலார் என்ற ராமலிங்க சுவாமிகள் இந்த உலகத்திற்கு வந்து 200-வது ஆண்டு தொடக்கம், தர்மச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் தந்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். வள்ளலார் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவராம்குமார், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சுப்புராயலு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், வள்ளலார் உயர்மட்ட குழுவினர்கள் உமாபதி சிவம், அருள்நந்தி சிவம், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழக்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம்-கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கீழக்கரை அருகே முள்ளுவாடி தனியார் ஆசிட் கம்பெனி அருகில் சென்றபோது பொது இடத்தில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது 16 பேர் 3 குழுக்களாக அமர்ந்து பணம் வைத்துசீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் தப்பி ஒட முயற்சித்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 300 ரொக்கம், 2 கார்கள், 106 பிளாஸ்டிக் டோக்கன், 12 செல்போன்கள், வெள்ளை மற்றும் சிமெண்ட் கலர் தரை விரிப்பு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சதக் நிஜாம் (38), அப்பாஸ் அலி (52), ஆர்.எஸ்.மங்கலம் சனவெளி கலைச்செல்வன் (31), கீழக்கரை லெப்பை தெரு ஹசன் (42), ஓ.கரிசல்குளம் ராஜு (32), கீழக்கரை ஆடறுத்தான் தெரு இஸ்மாயில் (50), பருத்திக்கார தெரு உசேன் (50) சாயல்குடி சத்துரவல்லி நகர் நாகராஜ் (41), மண்டபம் ரெயில்வே தெரு முத்துராமன் (53), வேதாளை தெற்கு தெரு முகமது அலி ஜின்னா (42), ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ராமர் (33), ஆர் எஸ் மங்கலம் நிஜந்தன் (26), உச்சிப்புளி வேலுச்சாமி (43), கடலாடி ராஜாங்கம் (42), சுந்தரமடையான் குமரேசன் ஆகிய 16 பேரை ஏர்வாடி தர்கா போலீசார் கைது செய்தனர்.
- பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர். பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ள பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளிகளில் சேர தகுதி தேர்வு நடந்தது.
- இதில் 240 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் அரசு மாதிரி பள்ளி ஏற்படுத்த ஆணையிடப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 9-வது வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளில் கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 240 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான தகுதி தேர்வு ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது.
இது குறித்து மாவட்ட அரசு மாதிரி பள்ளியின் முதல்வர் ரவி கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தற்போது 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்கள் 240 பேர் தேர்வு செய்யப்பட்டு தகுதி தேர்வில் கலந்து கொள்கின்றனர்.
இவர்களில் தமிழ் மற்றும் ஆங்கில பிரிவில் தலா 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் அனைவரும் 2023-24 கல்வியாண்டில் அரசு மாதிரி பள்ளியில் 10-வது வகுப்பில் சேர்க்கப்பட உள்ளனர். தேர்வை கண்காணிப்பதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் பங்களிப்பு திட்டத்தில் சேரலாம்.
- ஒரு விவசாயி அனுமதிக்கப் படாத இடுபொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து நீக்கப்படுவார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் குழுக்கள் அமைத்து உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர். ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் அங்ககச் சான்று பெறலாம்.
இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டு அளவில் மட்டும் விற்பனை செய்யலாம். குறைந்த பட்சம் 10 விவசாயிகள் முதல் 50 விவசாயிகள் வரை இணைந்து குழுவாக அமைத்து அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் விவசாயிகள் உறுதிமொழி படிவம், பண்ணை விபரங்கள், ஆதார் நகல், சிட்டா ஆகியவற்றை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும். குழு உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். 3-ம் நபர் ஆய்வு இல்லை. உற்பத்தி செய்யப்படும் விளை பொருள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா? என உறுதி செய்ய உபயோகிப்பாளர் ஒருவரை ஆய்விற்கு அமைத்துக கொள்ளலாம்.
ஆய்வு முடிவுகள் குழுவின் ஒப்புதலுக்கு வைக்கப்படும். உள்ளூர் குழுவின் முடிவு திருப்திகரமாக இருந்தால் சான்று வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் சான்று பெற்றவுடன் 2 வருட காலத்திற்குள் ஏதாவது ஒரு குழுவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறான தகவல்கள் இருந்தால் குழு இடை நீக்கம் செய்யப்படும்.
குழுவில் யாரேனும் ஒரு விவசாயி அனுமதிக்கப் படாத இடுபொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து நீக்கப்படுவார். இந்த திட்டத்தில் கட்டணமின்றி எளிமையான முறையில் பதிவு செய்வதால் விவசாயி களுக்கு பயனுள்ளதாகவும், அதிக அளவில் விவசாயிகள் அங்ககச் சான்று பெற முடியும். மேலும் விவசாயிகள் உள்ளூரை சேர்ந்த நபர் என்பதால் இயற்கையில் விளைந்த பொருள் என்ற நம்பகத்தன்மை வாங்குபவர்களுக்கு ஏற்படும். நுகர்வோர்கள் இடைதரகரின்றி பண்ணையிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
எனவே ஒரே ஊரில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் குழுவாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளிகளில் பரிசளிப்பு விழா நடந்தது.
- பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் பங்கேற்றார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் 25-ம் ஆண்டு பரிசளிப்பு விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் எஸ்.முகம்மது இக்பால் தலைமையில் நடந்தது.
பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ்.அகம்மது பசீர் சேட் ஆலிம், துணைத் தலைவர்கள் இக்பால், அ.காதர் முகைதீன், முன்னாள் பேரூராட்சி உதவி சேர்மன் பாசில்அமீன், வாவா ராவுத்தர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிவாசல் மழலையர் பள்ளி தாளாளர் எம்.செய்யது அபுதாஹீர் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், பேருராட்சி சேர்மனுமான ஏ.ஷாஜஹான் பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில் முன்னாள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எஸ்.லியாகத் அலி, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் காதர் முகைதீன், ஆசிரியை பொன்னா மீனாள் பேகம், தொடக்கப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.எம் சீனி முகம்மது மற்றும் கல்வி குழுவினர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் பட்டிமன்றமும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
- கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
தமிழக டி.ஜி.பி. சைலேந் திரபாபு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கள் தங்கதுரை (ராமநாதபுரம்), செல்வராஜ் (சிவகங்கை) உள்ளிட்ட போலீஸ் அதிகா ரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள 146 பவுன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.
முன்னதாக ராமநாத புரம் வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ெ தங்கதுரை, செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சைலேந்திரபாபு சிறப்பாக பணியாற்றிய 30 போலீசாருக்கு சான்றிதழ் களை வழங்கினார்.
தொடர்ந்து டி.ஜி.பி. நிருபர்களிடம் கூறியதா வது:-
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போல் கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற மாநிலத்தவர் தாக்கப்படுவது போல் பொய்யான தகவலை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இவ்வாறு 2 வீடியோக்களை முகம்மது ரஸ்பி என்பவர் பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில் ஒன்று பிற மாநிலத்தவர் அவர்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவம், மற்றொன்று கோவையில் உள்ளூர்காரர்கள் மோதிக்கொண்டது. இதுபோன்ற தவறான வீடியோ வெளியிட்ட முகம்மது ரஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று தவறான செய்திகள் வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் போலீஸ் அதிகாரிகளை தாக்கினால் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும் கைது செய்ய தயங்கமாட்டார்கள். ராமநாதபுரத்தில் 1200 போலீசார் பணியாற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் விரைவில் வரவுள்ளது.
காவல்நிலைய துன்பு றுத்தல்கள் இந்தாண்டு ஏதும் நடைபெறவில்லை. சென்ற ஆண்டு 4 நிகழ்வுகள் நடைபெற்றன. தற்போது பொதுமக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளிடம் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதால் துன்புறுத்தல்களுக்கு வேலை இல்லை. 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அபிராமம் பகுதியில் இரை தேடி சரணாலய பறவைகள் வருகின்றன.
- வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சித்தி ரங்குடி கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் போதிய பருவமழை பெய்யாததால் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பறவை கள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப் பட்டது.
பெரும்பாலும் இங்கு வரும் பறவைகள் 150 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இரைதேடும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் இரை கிடைக்காததால் கொக்கு உள்ளிட்ட பறவைகள் இங்கு அறுவடை முடிந்த வயல்களில் பருத்தி, மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது புழு, பூச்சிகளை இரையாக தின்று வருகின்றன. அபிராமம் பகுதியில் உள்ள வயல்களிலும் கொக்குகள் கூட்டம், கூட்டமாக வந்து இரை தேடி வருகின்றன.
- பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டியளித்தார்.
- கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதா வது:-
தேவேந்திர குல வேளாளர் மக்கள் 99 சதவீதம் பேர் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற விரும்புகின்றனர். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், மரியாதை கிடைத்தால் போதும். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோல்வியடைந்து, பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது.
மக்களை அடைத்து வைத்து மது, பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு ஜனநாயக படு கொலை செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026-ல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் வாக்குகள் இல்லை. திமுக, காங்கிரசை தூக்கிப்பிடித்து திரிகிறது.
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். எல்லாவற்றிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒதுக்குகின்றனர். இங்குள்ள மக்கள் காட்டுக்கருவேல மரம் வெட்டி கரிமூட்டம் போட்டுத்தான் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழக த்தில் தி.மு.க. அரசால் நல்லதும் நடக்கவில்லை, கெட்டதும் நடக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடி யிருப்பு பகுதியில் குடி நீரில் மலக்கழிவுகளை கலந்தவர்கள் யார் என்று அரசுக்கு தெரிந்தும் இதுவரை உண்மை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
ஓட்டு வங்கி அரசிய லுக்காக தி.மு.க. அரசு இப்படி செயல்படுகிறது. ராமநாதபுரம் நகராட்சி இந்திரா நகர் பகுதியில் 800 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு நகராட்சி மின் மயானம் அமைக்க முயற்சிக்கிறது. இதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் த.ம.மு.க. சார்பில் பெரிய போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் சேகர், கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
- இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடி பேரூராட்சியில் சேர்மன் மாரியப்பன் தலைைமையில் செயல் அலுவலர் சேகர் முன்னிலையில் செல்ல பிராணிகளுக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பேரூராட்சி தலைவர் மாரியப்பன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் நேரு குமார், கால்நடை மருத்துவர் அரவிந்தன், மணி, கால்நடை ஆய்வாளர்கள் இளமதி, கோதை நாயகி கால்நடை பராமரிப்பு உதவியாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






