என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 45). இவர், திருநெல்வேலியில் குடும்பத்தினருடன் வசித்து வந்ததோடு அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அம்மா மற்றும் குடும்பத்தினரை பார்ப்பதற்காக தீபக் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபக், குடிபோதையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
    விளை நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க.,முன்னாள் எம்.பி., ராஜா பரமசிவம் மரணமடைந்தார். ஆலங்குடியில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜா பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க.வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது. 

    மேலும் ஹைட்ரோ கார்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்கக்கூடாது. இது போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும், தமிழிசை பேச்சு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, மதுரை இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன். அங்கு இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
    ஆலங்குடியில் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகள் 2 பேர் ஒரே நாளில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகினறனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திராநகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் நதியா(வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி எலி மருந்தை தின்று விட்டு வீட்டில மயங்கி கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நதியாவை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நதியா இறந்தார்.

    இதே போல் அதேதொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து வந்த கரும்பிரான்கோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் சண்முக பிரியா (18) என்பவரும் கடந்த 10-ந் தேதி எலி மருந்தை தின்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து நதியாவின் தந்தை பழனியப்பன், தனது மகள் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஆலங்குடி போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நதியாவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவியும் தோழிகள் என்பதும், இவர்கள் 2 பேரும் செல்போனில் நீண்ட நேரமாக பேசி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்திற்கு காதல் விவகாரம் காரணமா? 2 மாணவிகளும் ஒரே நாளில் ஏன் வி‌ஷமருந்தை சாப்பிட்டார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதியில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் உள்ள பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சலீம். இவர் அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.

    இதனையடுத்து அந்த பெண்ணின் தரப்பினர் சலீம் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் பெண்ணை கிண்டல் செய்த சலீம் (33) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் சலீமை தாக்கியதாக வெற்றி செல்வன்(24), பன்னீர்(27) ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
    அன்னவாசல்:

    இலுப்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கிடைத்த தகவலின் பேரில், இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவனங்கள், உணவு விடுதி, இறைச்சி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகளில் திடீர் ஆய்வு செய்த அலுவலர்கள் அங்கிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனூர் கோப்பைகள், பிளாஸ்டிக் தூக்கு பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    இதேபோல் பொன்னமராவதியில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவின்படி, பேரூராட்சி பணியாளர்கள் பஸ் நிலையம், சந்தை விதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. 
    அறந்தாங்கி அருகே ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில், சுகாதார ஆய்வாளர் சேகர் முன்னிலையில் நேற்று இரவு அறந்தாங்கி பகுதியில் உள்ள ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது குறித்து திடீரென ஆய்வு செய்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 230 கிலோ ஓட்டல்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 
    ஆலங்குடி அருகே சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கட்ராம்பட்டி  காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அசோக்ராஜ் (வயது 20). இவர் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 வாரமாக அசோக்ராஜ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் அசோக்ராஜை கண்டித்தனர். 

    ஏன் செல்லவில்லை என்று கேட்டபோது, அசோக்ராஜ் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் கிண்டல் செய்வதாக கூறினார். இந்நிலையில் நேற்றும் அவர் படிக்க செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அவரை மீண்டும் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அசோக்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் பெற்றோர் தடுத்து விட்டனர். பின்னர் நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டனர். 

    அதிகாலையில் எழுந்த அசோக்ராஜ் மண்எண்ணெய் கேனுடன் வீட்டின் அருகே உள்ள நாடியம்மன் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புனித ரமலான் நோன்பிற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 88 பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் 1,21,330 கிலோ பச்சரிசி அரசால் சலுகை விலையில் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புனித ரமலான் நோன்பிற்காக ஒவ்வொரு வருடமும் நோன்பு கஞ்சி வழங்க பள்ளி வாசல்களுக்கு அரசால் சலுகை விலையில் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல நடப்பாண்டும் தொடங்க உள்ள புனித ரமலான் நோன்பிற்காக நேற்று 5-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 88 பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் 1,21,330 கிலோ பச்சரிசி அரசால் சலுகை விலையில் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நோன்பு கஞ்சிக்காக அரிசி கோரி விண்ணப்பிக்காத பள்ளி வாசல் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பித்து அரசால் வழங்கப்படும் சலுகை விலை அரிசியினை பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலில் இருந்து டம்ளர் திருடிய போலீஸ்காரர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதி இளைஞர்கள் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக அங்கு தண்ணீர் பந்தல் அமைத்திருந்தனர். பானையில் தண்ணீரும், டம்ளர்களும் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த டம்ளர்கள் அடிக்கடி காணாமல் போனது. இதனால் அதனை எடுத்து சென்ற மர்ம நபர்கள் யாரென்று கண்டறிய அங்கு பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை இளைஞர்கள் பார்த்தனர்.

    அப்போது கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் அய்யப்பன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வடிவழகன் ஆகியோர் திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

    டம்ளரை திருடி சென்றது போலீஸ்காரர்கள் என்று தெரிந்ததும் இளைஞர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தன. அதனை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் டம்ளர் திருடிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் அய்யப்பனை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ் இன்று உத்தரவிட்டார். மேலும் ஊர்க் காவல்படை வீரர் வடிவழகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    என்ஜினீயரிங் சேர்க்கைக்காக செயல்படுத்தப்படும் சேவை மையத்தை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டு வரும் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான மாவட்ட சேவை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 2019-ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு உயர்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான புதுக்கோட்டை மாவட்ட சேவை மையமாக அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த சேவை மையத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு (பதிவு கட்டணம் செலுத்தி) சேவை விலையில்லாமல் நேற்று முன்தினம் முதல் வருகிற 31-ந் தேதி வரையில் நடக்கிறது. அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலும், பொது கலந்தாய்வு பணிகள் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. மாணவர்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான கலந்தாய்வில் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் தடையில்லா மின் வினியோகம் வழங்கவும், சுகாதாரத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தவும், காவல்துறையின் சார்பில் போதுமான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாணவ, மாணவிகள் என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விலையில்லாமல் செயல்படுத்தப்படும் சேவை மையத்தை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவக்குமாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முகம்மது பரூக் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    புதுக்கோட்டையில் ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்துவின் உடல் மணல்மேல்குடியில் கண்டெடுக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி ராணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் புதுக்கோட்டை கீழ 5-ம் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் இவர் சொந்தமாக கார் வைத்து உள்ளார்.

    இந்நிலையில் மாரிமுத்து கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து தனது காரில் சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனக்கூறி மாரிமுத்துவின் மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவிற்கு சொந்தமான கார் வல்லத்திராக்கோட்டை பகுதியில் உள்ள தைலமர காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த காரில் கவரிங் வளையல்கள் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமான மாரிமுத்துவின் உடல் மணல்மேல்குடியில் போலீசார் கண்டுபிடித்தனர். மாரிமுத்துவின் உடல்தான் என அவரது மனைவி ராணி அடையாளம் காட்டினார். மாயமான நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமானது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் நூல்கள் அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சீருடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தயாரிக்கப்பட்ட நூல்கள், எந்திரங்கள் இருக்கும் அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதிகமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று என்று அந்த அறையிலிருந்து தீப்பிளம்பு வெளியேறியது. உடனடியாக அங்கிருந்த காவலாளி மற்றும் அதிகாரிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    நேற்று மே தினம் என்பதால் ஆலை ஓடாமல் விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில், தீ எவ்வாறு பரவியது என்று தெரியவில்லை. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். பின்னர் அவர்கள் தெரிவிக்கையில் வெப்பத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் மேலும் நூற்பாலை இயங்காத காரணத்தினால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது

    எனவே மின்கசிவு இதற்கு ஒரு காரணம் இல்லை என்றும் தெரிகிறது. வெப்ப அழுத்தத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது வேறு நபர்கள் சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது எரிந்த நூல்களின் பாதிப்பு ரூ.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்றும் எந்திரங்களின் நிலை என்ன என்றும் தெரியவில்லை என்று நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் முழுமையாக எவ்வளவு எடையுள்ள நூல்கள் அங்கே வைக்கப்பட்டு இருந்தது என்ற புள்ளி விபரங்கள் தெரியவில்லை. அதனை கணக்கிடும் பணி தற்போது நடந்து வருகிறது. நூல்கள் தயாரிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இருப்பிலேயே வைத்திருந்தது வெப்ப அழுத்தத்திற்கு ஒரு காரணமாக ஊழியர்களால் சொல்லப்படுகிறது.

    நூல்களை இருப்பில் வைக்காமல் உடனடியாக அனுப்பி இருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருக்காது என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தீயை அணைப்பது மட்டுமின்றி மேலும் பரவாமல் தடுப்பதற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், கீரமங்கலம் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.



    ×