என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் இன்று மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,193 ஆக அதிகரித்துள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 047 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,193 ஆக அதிகரித்துள்ளது.



    விராலிமலை அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் வேலூரை சேர்ந்தவர் நல்லுசாமி(வயது 70). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரோஜா(65). இவர்களுடைய மகன் சுந்தரம். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக நேற்று முன்தினம் மாலை அவர்களுடைய வீட்டில் நல்லுசாமியும், சரோஜாவும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை பார்த்த உறவினர்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே நல்லுசாமி பரிதாபமாக இறந்தார். மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரோஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த விராலிமலை போலீசார் நல்லுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி(வயது 54). இவர், அரிமளத்தில் இருந்து மொபட்டில் பேரையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

    வடக்குநல்லிபட்டி அருகே சென்றபோது எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரிமளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அகற்றப்பட்டது.
    புதுக்கோட்டை:

    இன்று(சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி ஆகும். வழக்கமாக பொது இடங்களில் போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தேதியில் அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மாறாக, அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபட அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் தடை உத்தரவை தொடர்ந்து எங்காவது விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக என்று அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி புதுக்கோட்டை அன்னச்சத்திரம் பகுதிக்கு சென்றபோது அங்கு சிறுவர்கள் சிலர், கொட்டகை அமைத்து அதில் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கிருந்த சிறுவர்களை எச்சரிக்கை செய்ததோடு, விநாயகர் சிலையை அகற்றி எடுத்து சென்றனர்.
    ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே உள்ள கடல் பகுதியில் ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கோட்டைப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே உள்ள கடல் பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டு அந்த இடம் மேடாகி விட்டது. மேலும், சில நேரங்களில் கடல் நீர் உள் வாங்குகிறது. இதனால், கரையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும், இந்த மணல் திட்டு காரணமாக பிடித்து வரப்பட்ட மீன்களை மீன்பிடி தளத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல முடியாமல் நாட்டுப்படகு மூலம் விசைப்படகு இருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கரைக்கு வரும் நிலை உள்ளது.

    கடல்நீர் அடிக்கடி உள்வாங்குவதால் மணல் திட்டு தெரிகிறது. இதனால், கடலுக்கு படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். ஆகவே, ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே கடலை ஆழப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் கடல் பகுதியில் உள்ள மணல் திட்டை அகற்றி அந்த பகுதியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் முத்தமிழ் செல்வனுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

    இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் சராசரியாக 100-ஐ தாண்டி வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று வெளியான பட்டியலில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 130 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 142 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.

    அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜநாயகத்தித்திற்கும், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் பலியானார். இதனால் இறப்பு எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

    கறம்பக்குடியில், கடலை மில் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கடலை மில் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கறம்பக்குடியில் ஏற்கனவே, 3 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4-ஆக அதிகரித்து உள்ளது.

    மேலும், கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் 30 வயது ஊழியர் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதால் மின் வாரிய அலுவலகம் மூடப்பட்டது. முன்னதாக, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    அரிமளம் ஒன்றியம், கே.செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால் அவர், புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரும்பாநாடு கிராமத்தில் நேற்று 53 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஆதனக்கோட்டையில் 24 வயது ஆண் ஒருவருக்கும், கூத்தாட்சிப்பட்டியில் 60 வயது மூதாட்டிக்கும், எம்.ஜி.ஆர். நகரில் 24 வயது ஆண் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
    அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாய் பாலம் உடைந்தது. இந்த பாலத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே ஆயிங்குடி வடக்கில் கல்லணை கால்வாயில் பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 1935-ம் ஆண்டு கட்டப்பட்டது. மேற்பனைக்காடு, ஆயிங்குடி வடக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூண் நேற்று முன்தினம் திடீரென்று இடிந்து விழுந்தது.

    அப்போது, பாலத்தில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இதையடுத்து முன்எச்சரிக்கையாக பாலத்தில் யாரும் செல்லாத வகையில் பாலத்தில்மரங்களை போட்டு தடுப்பு அமைத்துள்ளனர். இதன்காரணமாக வயல்பகுதிக்கு உழவு பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதைஅறிந்த ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி சண்முகநாதன் நேற்று உடைந்த பாலத்தை பார்வையிட்டனர். அப்போது, இந்த பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேமங்குடி கிழக்கு பகுதியில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்த போது பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. விவசாயிகள் நீண்ட நேரம் போராடி அந்த உடைப்பை சரி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கறம்பக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது, நரிக்குறவர்களுக்காக 37 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலனி வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து, அவ்வப்போது விழுந்தது. இதில் பலர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மாலை கணேஷ் என்பவரின் வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

    அப்போது, கணேஷ், அவரது மனைவி ரேகா மற்றும் 3 குழந்தைகள் வெளியில் அமர்ந்திருந்ததால், அந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    அப்போது, அங்கு 37 வீடுகளை சேர்ந்தவர்களும் தங்களது வீட்டின் பரிதாப நிலையை காண்பித்தனர். மேலும், ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு வேறு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வீட்டை இழந்த கணேஷ் குடும்பத்திற்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை தாசில்தார் வழங்கினார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விற்ற 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,000 மது பாட்டில்கள் மற்றும் ரூ.17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.
    புதுக்கோட்டை:

    சுதந்திர தின விழாவையொட்டி நேற்று முன்தினமும், முழு ஊரடங்கையொட்டி நேற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து சட்டவிரோதமாக விற்கும் நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த தனிப்படை போலீசார் நேற்று மாவட்டத்தில் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தினர். அறந்தாங்கி பகுதியில் வெவ்வேறு இடங்களில் மது விற்ற துரைமாணிக்கம் (வயது 45), ஈச்சங்குடி உடையார் கோவில் பகுதியை சேர்நத சத்யராஜ் (27) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல ஆவுடையார்கோவில் பகுதியில் மது விற்ற ராஜமாணிக்கத்தை (50) கைது செய்தனர்.

    அன்னவாசல் பகுதியில் ஒரு இடத்தில் மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்து விற்ற குளத்தூரை சேர்ந்த அழகர் (60), மாங்குடியை சேர்ந்த தங்கராஜ் (39) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 822 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல திருமயம், ஏம்பல் பகுதியில் மது விற்ற அழகுசுந்தரம்(50), பெரியய்யா (60) ஆகியோர் சிக்கினர். மேற்கண்ட சம்பவத்தில் கைதான 7 பேரிடம் இருந்து மொத்தம் 908 மது பாட்டில்களும், ரூ.16 ஆயிரத்து 960 கைப்பற்றப்பட்டன.

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கறம்பக்குடி சீனீக்கடை முக்கம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த செந்தில்குமார் (40), தளபதி (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 87 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல, மாத்தூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆவூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மது விற்ற செங்களாக்குடியை சேர்ந்த சின்னராசு (32), மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே மறைவான இடத்தில் வைத்து பிடாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக கொரோனா தொற்றால் இறந்தவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கொரோனா பரவல் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  அதன்பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 

    கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக வேகத்தில் பணியாற்றி வருகிறோம். இதுவரை 36 லட்சம் பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. 2.72 லட்சம் பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1.29 லட்சம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இறப்பு எண்ணிக்கை குறித்த பீதி தேவையில்லை. இப்போது வெளியிடப்படும் இறந்தவர்களின் பட்டியலில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடி கொரோனா தொற்றால் இறந்தவர்கள். மற்றவர்கள் இணை நோய்களையும் கொண்டவர்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதல்களின்படி இவர்களையும் கொரோனா இறப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அதேநேரத்தில் லேசான அறிகுறிகள் தென்படும்போதே அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும்.

    ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அரசு மருத்துவர்கள் சவால் இன்றி சிகிச்சை அளிக்க முடியும். இதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். அதேபோல, குணமடைந்து வீடு திரும்பியோருக்கு வேறு எந்த நோயும் தொற்றாமல் இருப்பதற்கான ஆலோசனைகளை வழங்க தனி மருத்துவப் பிரிவு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

    புதுக்கோட்டை மாவட்டத்திலும் கூட இறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 59 பேரில், 51 பேருக்கு இணை நோய்கள் உள்ளன. 8 பேர் மட்டுமே வேறு எந்த இணை நோயும் இல்லாமல் கொரோனா தொற்றால் மட்டுமே உயிரிழந்தவர்கள் என தெரிவித்தார்.
    கொரோனா மையங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவிற்கு பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா மையங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவிற்கு பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந் தேதி வரை கொரோனா மையங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் 18 பேர் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். 15 பேர் பெண்கள் ஆவார்கள். பஸ் வசதி இல்லாத நிலையில் பணிக்கு வந்து செல்ல சிரமமாக இருக்கும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
    ×