என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே தென்னதி ரயன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது70).
இவரை அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது சின்னப்பொண்ணு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சின்னப்பொண்ணு மகன் செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. எழுச்சி அடைந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கட்ட மைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் அந்த தகிடு தத்தங்களை புரிந்து கொண்டு விட்டனர்.
விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலமாக நேரடியாக உதவிகளை வழங்கி வரும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது வேதனைக்குரியது. இதில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
தி.மு.க. பொய் பித்தலாட்டத்தை கட்டமைத்து தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மொழி ரீதியான பன்முகத்தன்மையை எதற்காக தி.மு.க. எதிர்க்கிறது. மொழி ரீதியாக பிளவுப்படுத்துவது தேச துரோகம். அதை தி.மு.க. செய்கிறது. தி.மு.க. தமிழ் விரோதி. தமிழனுக்கு விரோதி. தேசியம்தான் பாஜவின் இலக்கு.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். தமிழகத்தில் ஆட்சி அமைவதில் ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக பா.ஜ.க. உள்ளது. எந்த கூட்டணி அமைத்தாலும் பா.ஜ.க. இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். நீட் தேர்வை புறக்கணிப்பது என்பது மாணவர்களின் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,510 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை கட்டியவயல் அருகே பாரதிநகரை சேர்ந்தவர் முத்து (வயது 45). இவர் கடந்த 20-ந் தேதி தனது தம்பியின் மகள் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று விட்டு மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள், பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகைகளும் திருடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக முத்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதில் முத்து வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு போனதாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் அவரது வீட்டின் அருகே மற்றொரு வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்திருந்தது. அதில் நகை, பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை.
இந்த சம்பவங்களுக்கிடையே புதுக்கோட்டை அபிராமி நகர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பெண் அதிகாரி ஒருவரது வீட்டில் 50 பவுன் நகைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் அதிகாரி திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கணவர் இறந்த பிறகு தனிமையில் வசித்து வரும் அந்த பெண் அதிகாரியின் வீட்டிற்கு உறவினர்கள் அவ்வப்போது சென்று வந்துள்ளனர். பீரோவில் லாக்கர் மற்றும் ஆங்காங்கே வைத்திருந்த நகைகள் மாயமானதாக தெரிவித்தார். அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த உறவினர்கள் தான் கைவரிசையை காட்டியிருக்கலாம் என தெரிகிறது. அவர்களும் தாங்களாகவே பேசி முடிவெடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். நகைகள் மாயமானது தொடர்பாக அவர்கள் இதுவரைக்கும் புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை”என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கைக்குளயான்வயல் ஊராட்சி கரையப்பட்டியில் அரசு ஆரம்ப பள்ளி 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி கடந்த 2 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமால்பாண்டியன், உதவி ஆசிரியர் விஜயராஜ் ஆகியோரின் முயற்சியே ஆகும். மேலும் கரையப்பட்டி, அம்புராணி, கப்பத்தான்பட்டி ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இதனால், இந்த பள்ளி தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் கூடுதல் வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கரையப்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் செயல்படும் இப்பள்ளியை சீரமைக்க நிதி திரட்டப்பட்டது. அந்தவகையில் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் மூலம் ரூ.4 லட்சத்து 21 ஆயிரம் சேர்ந்தது. அதில், பள்ளியின் 2 கட்டிடங்கள் மராமத்து செய்யப்பட்டு 49 இன்ஞ் எல்.இ.டி. டி.வி., புரோஜெக்டர், லேப்-டாப், இன்வெட்டர், யு.பி.எஸ், ஆடியோ சிஸ்டம் போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், மாணவர்களை கவரும் பொருட்டு பள்ளி கட்டிட சுவர்களில் பலவகை கலர்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தரைத்தளங்களிலும் பெயிண்டு அடிக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள் அமர பெஞ்சுகள் மற்றும் கழிப்பிட வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019-20-ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 25 மாணவ-மாணவிகளுடன் செயல்பட்டு வந்த இந்த பள்ளி, 2020-21-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்தது. அதற்காக எடுக்கப்பட்ட தீவிர முயற்சியின் காரணமாக மேற்கண்ட 3 கிராமங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளில் படித்து வந்த 15 மாணவர்கள் மற்றும் 2 புதிய மாணவர்கள் என 17 பேர் சேர்ந்துள்ளனர். அதன்படி, ஏற்கனவே உள்ள மாணவர்களையும் சேர்த்து தற்போது 36 பேர் உள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இந்த அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கு இங்குள்ள பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இங்கு ஆங்கில வழி கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை போன்று பெல்ட், அடையாள அட்டை, ஷீ, டை மற்றும் சீருடைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளியில் பெரிய திரை மூலம் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் அரசு வழங்கி உள்ள பல்வேறு கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு செய்முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 49 இன்ச் எல்.இ.டி. டி.வி. மூலம் நேரலை வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி கம்ப்யூட்டர் வகுப்பு, பாடல், நடன வகுப்புகள், யோகா, ஆங்கிலத்தில் எழுத, பேச பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் குழு ஆரம்பிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் பள்ளி செயல்பட்டு வந்தாலும், சாலையின் ஓரத்தில் குளத்திற்கு அருகாமையில் செயல்படும் இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், பள்ளிக்குள் ஆடு, மாடுகள் நுழைந்து அசுத்தம் செய்து விடுகின்றன. ஆகவே, மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதி அல்லது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.






