என் மலர்
புதுக்கோட்டை
- ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மோதல்: 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
- நிகழ்ச்சி நீதிமன்ற அனுமதியுடன் நடந்தது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 2-ந் தேதி நள்ளிரவில் நடைபெற்றது. அப்போது ஆலங்குடி அருகே மணவிடுதி ஊராட்சி பெருங்கொண்டான் விடுதி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் முருகன் (வயது 26) இந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது புதுக்கோட்டை விடுதி வேலு மகன் அருண்(24), ஆலங்குடி ஆண்டிகுளத்தை சேர்ந்த சரவணன் மகன் பிரகதீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த முருகன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து, முருகனை தாக்கிய அருண், பிரகதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்
- வெல்டராக வேலை பார்த்து வந்தார்.
புதுக்கோட்டை:
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சிதம்பர நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் ஜோசப் (வயது 30). இவர் மாத்தூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஜோசப் மாத்தூரில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து களமாவூருக்கு தவளைமேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜ்குமார் (30) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஜோசப் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் இருவரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜோசப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பெண்ணை தாக்கிய வாலிபர் கைதானார்
- தலைமறைவான 2 பேரை ேபாலீசார் தேடிவருகின்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் நான்கு ரோடு கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை (வயது47). மகன் ராஜசேகர். இவரும், கீழகொத்தக்கோட்டை ரா மையா மகன் முருகேசன் (வயது 36 ) ஆகிய இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்ததாக கூற ப்படுகிறது. இதனால் அஞ்சலை, தனது மகனை முருகேசனுடன் சேர வேண்டாம் என்று கண்டித்ததாக கூறப்ப டுகிறது.
இதனை அறிந்த முருகேசன், தனது நண்பர்களான புதுக்கோட்டைவிடுதியை சேர்ந்த விஜய், வீரமுத்து ஆகியோருடன் சேர்ந்து அஞ்சலையை அடித்தும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இச்சசம்பவம் தொடர்பாக அஞ்சலை, ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். மற்ற இருவர்களை தேடிவருகின்றனர்.
- நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது
- தென்னம்பாளைகளை சுமந்தவாறு பெண்கள் ஊர்வலம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாடியம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னிட்டு மது எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. ஆலங்குடியில் உள்ள நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மதுஎடுப்பு திருவிழா நடைபெறும். அதன் படி இந்த ஆண்டிற்கான விழாவிற்கு ஆனி மாதம் கடைசி செவ்வாய்யன்று அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.
அன்று முதல் நாள்தோறும் லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது அதனை தொடர்ந்து மண்டகப்படியும் சிற ப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆலங்குடி குற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
- விவசாய பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
- தொடர் மழை காரணமாக நடைபெறுகிது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதையடுத்து, விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனையடுத்து ஜூன் மாதம் 12-ம் தேதி திறக்க வேண்டிய தண்ணீரை, தமிழக முதல்வர் அதற்கு முன்பாகவே திறந்து வைத்தார்.
இதனால் கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி விவசாயிகள் கடந்த மாதமே தங்களது விவசாய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மானாவாரி விவசாயிகள் போதிய மழை இல்லாமல் விவசாய பணிகளை மேற்கொள்ளாமல் காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மானாவாரி பகுதி விவசாயிகளும் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். முன்பொரு காலத்தில் மானாவாரி பகுதியாக இருந்தாலும் ஏரி, கண்மாய்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, அதன் மூலம் நாற்று விடும் முறையில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உரிய காலத்தில் மழை பெய்யாததால், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையை கையாண்டு வருகின்றனர்.
இந்தாண்டு உரிய காலத்தில் மழை பெய்யத் தொடங்கினாலும் பள்ளத்திவயல், பாக்குடி, செட்டிவயல், ஊர்வணி உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையிலேயே விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர்.
- வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்
- உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோலேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு 20 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இவர் அமரடக்கியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சங்கர் மற்றும் ராணி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், ராணி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.
அப்போது விழித்துக் கொண்ட அவர்கள், மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் அவர்களை த ாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த தம்பதியர் உடனடியாக மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை-பணம் கொள்ளை நடந்துள்ளது
- குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணி முதல் தெருவில் வசித்து வருபவர் முகமது ஹனிபா (வயது66). இவர் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை ப ார்த்து அதிர்ச்சியானர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 47 பவுன் நகை மற்றும் ரூ.40 திருடுபோயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் ேபரில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிதாக மின்மாற்றி அமைக்க எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு அளித்தனர்.
- அடிக்கடி பழுது ஏற்படுகிறது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணி பகுதியில் குறைந்த மின்அழுத்த விநியோகம் இருப்பதால் உடனடியாக அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கவேண்டும் என எஸ்டிபிஐ கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தி மின்வாரியத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில், பொன்னமராவதி இந்திராநகர், ஈஸ்வரமூர்த்தி, ஊரணி அருகே அமைந்துள்ள மூன்று தெருக்களிலும் குறைந்த மின் அழுத்தம் இருப்பதால் மாலை நேரங்களில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் தொலைக்காட்சி, குடிநீர் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்கள் இயக்க இயலவில்லை. அவ்வாறு இயக்கினாலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே குறைந்த மின் அழுத்த விநியோகத்தை சீரமைக்கும் வகையில் உடனடியா இப்பகுதியில் புதிதாக மின்மாற்றி அமைக்கவேண்டும் என்று ெ தரிவித்திருந்தனர்.
- கோவில் பணியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
- காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேர் ஆடிப்பூரத்தன்று கவிழ்ந்தது. 8 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண் வழங்கிய சுற்றுச்சூழல இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தேர் விபத்து தொடர்பாக இரண்டு தற்காலிக பணியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கைக்கு பின் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவாரூரில் ஒஎன்ஜிசி நிறுவனம் பதித்த குழாயில் 2021-ம் ஆண்டு எற்பட்ட கசிவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதே நிலை தொடர்ந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த பிரிவை நிரந்தரமாக மூடத்தான் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. வேறு எந்த திட்டத்தை தொடங்குவதற்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை.
தமிழக விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் செயல்படுத்தப்படும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் சொந்த நாட்டில் இருப்பது போல உணரும் வகையில் தேவையான அனைத்து வித அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர்.
- 100 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது
- திருக்கை மீன் மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய சுமார் 100 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் விற்பனைக்கு வந்தது. புள்ளி திருக்கை என்று அழைக்கப்படும் இந்த மீன் கிடைப்பது மிகவும் அரிது. இந்த திருக்கை மீன் மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது.
5 பேர் சேர்ந்து தூக்க கூடிய இந்த திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் போனது. மீனவர் ஒருவர் கூறியதாவது :- மற்ற நாட்களில் இந்த திருக்கை மீன் ரூ.12 ஆயிரத்துக்கு விலை ேபாகும். ஆனால் ஆடி மாதமாக இருப்பதால் மீன் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் குறைவாக விலை போனது. சந்தையில் இந்த திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார். ராட்சத திருக்கை மீனை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
- ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றவர்களை விரட்டிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
- பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ரேகா. இவர் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது இருசக்கரவாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். நெடுவாசல் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ரேகா அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ரேகா கூச்சலிட்டதை தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். எனினும் கிராம மக்கள் விரட்டி சென்று 2 பேரையும் பிடித்து, வடகாடு காவல் நிலையத்தில் ப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் விருதுநனர் மாவட்டம் வளையன்குளத்தை சேர்ந்த மலைசாமி மகன் செல்வேந்திரன் (வயது 29), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் ரஞ்சித்(34) என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாட்டரி டிக்கெட் விற்ற 4 பேர் கைது செய்தனர்.
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
புதுக்கோட்டை:
அறந்தாங்கி நகருக்குட்பட்ட அவுலியாநகர், எல்என்புரம், பாரதிதாசன் நகர் ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அறந்தாங்கி காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, கான்முகமது (வயது39), ராஜேந்திரன் (53), சம்சுதீன் (42) நாராயணன் (40) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ1200 ரொக்கப்பணம், லாட்டரி சீட்டுகள் மற்றும் நோட்டு பேனா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.






