என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் அம்புகோவில் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், அன்பு கோவில் ஊராட்சி மன்றம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. முகாமை அம்பு கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமன் காளிதாஸ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அகமது ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமை துவக்கி வைத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் இந்த மழை காலங்களில் மக்கள் எவ்வாறு உடல் நலத்தை காக்க வேண்டும் என்றும் அதேபோல் பகுதியில் கண்புறை நோய் மற்றும் கண் சம்பந்தமான வியாதிகளுக்கு இது மாதிரியாக நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முகாமில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருந்து மாத்திரைகள், சொட்டு மருந்து மற்றும் கண்புரை நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச லென்ஸும் வழங்கப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • வேளாண் துறை சார்பில் நடைபெற்றது
    • விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி கிராமத்தில் நெல் பயிரில் பச்சை வண்ண இலை அட்டை குறித்த செயல் விளக்கத்தை, வேளாண் கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விவசாயிகளுக்கு நெற்பயிரில் பச்சை வண்ண இலை அட்டை பூச்சி குறித்த பயன்பாடு செயல் விளக்கம் அளித்தனர். கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வர் நக்கீரன் வழிகாட்டுதல் படியும், கந்தர்வகோட்டை வேளாண் உதவி இயக்குனர் அன்பரசன், மற்றும் வேளாண் உதவி அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலையிலும், விவசாயிகளுக்கு நெற்பயிரில் பச்சை வண்ண இலை அட்டை உபயோகிக்கும் முறையை பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும், திருந்திய நெல் சாகுபடியின் முக்கியத்தை பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


    • கறம்பக்குடியில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
    • அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மற்றும் நகர அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு கரம்பக்குடி சீனி கடை முக்கத்திலிருந்து ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், கணேசன் மற்றும் நகர செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று மீன் மார்க்கெட்டில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சாகுல் ஹமீது, தீத்தானிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், குபேந்திரன், பல்லவராயன், முருகேசன், பந்துவக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், வாண்டான விடுதி ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் பழனியப்பன், புது விடுதி சுலைமான் தகவல் தொடர்பு செயலாளர் முத்துசாமி, சேகர் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.




    • தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணி–ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டது

    புதுக்கோட்டை :

    முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, ஆணைப் பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஆணைப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். தற்போது நிலவி வரும் கொரனோ நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைகளை அணுகி முறையான பரிசோதனை செய்து நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணியவும், போதுமான அளவு சமூக இடைவெளிவிடவும் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூர்யபிராகாஷ் அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். இம்முகாமில் ரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் நன்றி கூறினார்.


    • மதுபான கடை அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி செல்லும் சாலையில் அரசு புதிய மதுபானக் கடை அமைக்க இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில் இந்த சாலையை பயன்படுத்தும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் கல்லுப்பட்டி மடம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.க. ஒன்றிய தலைவர் சித்திரவேல் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    • கந்தர்வகோட்டையில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், தெற்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் கலையரசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது.


    • நாகர்கோவில்-தாம்பரத்திற்கு 26-ந் தேதி இயக்கப்படும் புதுக்கோட்டையில் நிற்காமல் செல்லும் வகையில் ரெயில்வே நிர்வாகம் புறக்கணித்துள்ளதாக பயணிகள் குமுறுகின்றனர்.
    • இந்த சிறப்பு ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை :

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசித்து வேலைபார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது உண்டு. அதேபோல் பண்டிகை முடிந்து ஊருக்கும் திரும்புவார்கள். இதையொட்டி தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தெற்கு ரெயில்வே சார்பிலும் சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதில் புதுக்கோட்டை வழியாகவும் ஒரு சில ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 06042) ரெயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்வதற்கான அறிவிப்பு இடம் பெறவில்லை. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை கடந்து தான் இந்த ரெயில் திருச்சி செல்ல வேண்டும். ஆனால் இந்த ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் கூட நின்று செல்லாமல் இயக்கக்கூடிய வகையில் ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இந்த பயண நேர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் புதுக்கோட்டையை ரெயில்வே நிா்வாகம் புறக்கணித்ததாக பயணிகள் குமுறுகின்றனர். மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள், தெற்கு ரெயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த சிறப்பு ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சிறப்பு ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டால் பயணிகள் இதில் பயணிக்க முடியும். பயணிகளும் பயன் அடைவார்கள். கடந்த காலங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட போது புதுக்கோட்டை ரெயில் நிலையம் அதிக வருவாயை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. எனவே புதுக்கோட்டை பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த ஊரை கடந்து செல்லக்கூடிய ரெயிலை ஒரு நிமிடம் நிறுத்தி இயக்கினால் ரெயில்வே நிர்வாகத்திற்கு வருமானத்தோடு, பயணிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.


    • கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொற்பனைக்கோட்டை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த காமராஜபுரத்தை சேர்ந்த ஜெகன் (வயது 32) என்பவரை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர்

    புதுக்கோட்டைஇலுப்பூரை சேர்ந்தவர் ஜனா என்கிற ஜானகிராமன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர் 21 வயது இளம்பெண்ணுடன் நட்புடன் பழகி வந்தார். பின்னர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜானகிராமனிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தன்னை திருமணம் செய்ய அந்த இளம்பெண் ஜானகிராமனிடம் மீண்டும் கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர். ஆயுள் தண்டனை இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ஜானகிராமனுக்கு தகாத வார்த்தைகளால் திட்டிய பிரிவில் 3 மாதம் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், திருமணம் செய்யாமல் மோசடி செய்ததற்கு ஓராண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நிவாரணமாக வழங்க தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து ஜானகிராமனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

    • சித்தன்னவாசல் பூங்காவில் சிறுவனிடம் செல்போனை பறித்த 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சிறுவன் சித்தன்னவாசலுக்கு சுற்றி பார்க்க சென்றுள்ளான்

     புதுக்கோட்டை :திருமயம் அருகே உள்ள ஊனையூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் சித்தன்னவாசலுக்கு சுற்றி பார்க்க சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் சித்தன்னவாசல் பூங்காவில் நின்ற போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த சிறுவன் வைத்திருந்த செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுவன் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கல்லூரி மாணவர்களான போயத்தான்நல்லூர் பகுதியை சேர்ந்த அஜய் (வயது 19), அரசன்கரை பகுதியை சேர்ந்த அதிபதி (19), கோனாவயல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (19) மற்றும் கைவேலிப்பட்டியை சேர்ந்த காந்தி, மேலவிடுதியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் செல்போனை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கல்லூரி மாணவர்களான அஜய், அதிபதி, மாரிமுத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பழனியப்பன் தனது பிறந்த நாளை தாய் மற்றும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
    • வீட்டில் நகைகள் ஏதும் இருந்ததா? அவை கொள்ளை போய் உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணையை போலீசார் உடனடியாக தொடங்கினர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சிகப்பி (வயது 75). ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகன் பழனியப்பன் (55). என்ஜினீயரான இவர் வீடு கட்டுமான தொழில் மற்றும் சொந்தமாக மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா ஈரோட்டில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் பழனியப்பன் நேற்று தனது பிறந்த நாளை தாய் மற்றும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இதை அடுத்து வழக்கம்போல் இரவில் தனது தாயாருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றவர் பின்னர் மீண்டும் அவர் வெளியே வரவில்லை.

    இன்று காலை வழக்கம் போல் கட்டிட வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பழனியப்பன் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு மரப்பட்டரையின் விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டு இருந்தன.

    பின்னர் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்தபோது அங்கு கண்டகாட்சி அவர்களை உறைய வைத்தது. பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர்.

    இதை அடுத்து அவர்கள் உடனடியாக பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலிஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன் இருவரும் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்கள். மேலும் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவின் வயர்கள் அனைத்தும் அறுக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்அறையில் இருந்த சிசிடிவி கேமராவும் திருடு போயிருந்தது.

    ஆனால் வீட்டில் நகைகள் ஏதும் இருந்ததா? அவை கொள்ளை போய் உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணையை போலீசார் உடனடியாக தொடங்கினர். அதேபோல் நகை பணத்திற்காக இந்த கொடூர கொலை சம்பவம் நடந்ததா அல்லது முன் விரோதம் காரணமா மற்றும் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • விவசாய சங்க மாநில செயலாளர் கோரிக்கை

    புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட செய்யானம்,மஞ்சக்குடி, பாலையூர், குமரப்பன்வயல், கொடிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் விவசாயம் செய்து 100 நாட்களை கடந்த நிலையில் போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகி காணப்படுகிறது.இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் நெற்பயிர்களில் மாடுகளைவிட்டு மேய்க்கவிட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சின்னத்துரை, பாதிகப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த அவர், மணமேல்குடி செய்யானம், மஞ்சக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் விவசாயம் முற்றிலும் பொய்த்து விட்டது. இதனை அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.அதனை தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில் வீட்டிலிருந்த நகைகளை வைத்தும், கடன் வாங்கியும் விவசாயம் செய்தோம், ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது மழையில்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டது. உலகில் உள்ள ஜீவராசிகள் வாழ விவசாயிகள் நாங்கள் பாடுபடுகிறோம், ஆனால் எந்த ஜீவனும் எங்களை ஏரெடுத்து கூட பார்ப்பதில்லை. எனவே தமிழக முதல்வர் அதிகாரிகளை கொண்டு உரிய கணக்கெடுத்து நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, கண்மாய்களை தூர்வார உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    ×