என் மலர்
புதுக்கோட்டை
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க புதுக்கோட்டை கலெக்டர் அறிவுறுத்தினார்
- புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக அரசு உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோவிட் சிகிச்சைக்குத் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார். மேலும் கோவிட் பாதிப்பு அதிகம் தென்படும் நாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைத்தரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கோவிட் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யவும், பரிசோதனைகள் முடிவுகள் வரும் வரை அவர்களை தொடர்ந்து கண்காணித்திடவும் கலெக்டர் கவிதா ராமு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வட்டார அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தேவையான இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பரிசோதனை முடிவுகளை விரைவில் வெளியிடவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்திடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கவிதா ராமு ஆலோசனை நடத்தி மேற்கொண்டார். எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றவும், கைகளை சோப்புப் போட்டு கழுவவும், முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, ஊரக நலப்பணி இணை இயக்குநர் ராமு, சுகாதாரப்பணி துணை இயக்குநர் இராம்கணேஷ், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- ஆலங்குடியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
- சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லாலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு நோய் தொற்று இன்றி கால் நடைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஆலங்குடி உதவி மருத்துவர் பரமேஸ்வரி மற்றும் ஆய்வாளர் ஆனந்தன், ஆலங்குடி கால்நடை உதவியாளர் ரெங்கசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது
- நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பசுமாடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான கழிவு நீர் தொட்டியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பசு மாடு தவறி விழுந்தது. பொதுமக்களால் மீட்க முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பசுமாடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை வீரர் பாண்டி செல்வன் கழிவு நீர் தொட்டியில் இறங்கி கயிறு கட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை கயிற்றில் பிணைத்தார்.பின்னர் கழிவு நீர் தொட்டியில் இருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தூக்கி வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- ஆலங்குடியில் சரக்கு ஆட்டோ திருட்டு போனது
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆலங்குடி:
ஆலங்குடி நம்பன்பட்டி சாலையில் உள்ள சர்வீஸ் கடையில், கந்தர்வகோட்டை தாலுகா வெள்ளாள விடுதி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 47) என்பவர் தனது சரக்கு ஆட்டோவை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக விட்டு சென்றுள்ளார். வாட்டர் சர்வீஸ் முடிந்து விட்டதாக சர்வீஸ் செய்த சேகர், தெரிவித்துள்ளார். ஆனால் மாரிமுத்து தனக்கு வேலை இருப்பதால் மறுநாள் வருவதாக தெரிவித்து உள்ளார். சரக்கு ஆட்வாடோவை கொட்டகையில் நிறுத்திவிட்டு சேகர் அவரது வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறப்பதற்கு வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆலங்குடியில் நாளை மின்தடை ஏற்படும்
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி
ஆலங்குடி மற்றும் மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மின் விநியோகம் செய்யப்படும் பாச்சிக்கோட்டை களப ம் ஆலங்குடி, ஆலங்காடு, வெட்டன்விடுதி , அரசடிப்பட்டி, மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர் வம்பன், கே.ராசியமங்கலம், மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, துவார் ஆத்தாங்கரைவிடுதி ஆகிய பகுதிகளில் டிசம்பர் 28ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஆலங்குடி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது
- இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.ஆலங்குடி அருகே உள்ள ஆவுடானிக்குளத்தின் பல பகுதிகள் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் செரியலூர் கிராம மக்கள் சார்பில் அன்புச்செல்வன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றகிளையில் வழக்குத்தொடுத்திருந்தார்.இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உடனடியாக அளவீடுகள் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாமல் ஆலங்குடி வருவாய்துறையினர் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதாக செரியலூர் கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வலியுறுத்தியும், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரியும் செரியலூர், கரம்பக்காடு-இனாம், ஜெமீன்ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில் நாயகி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எதிர் தரப்பினர் உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக குறிப்பிட்ட நாட்களுக்கு தடை வாங்கியுள்ளதாகவும், அந்த தடை உத்தரவு முடிந்த உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவோம் எனவும் கூறினார். இதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், போராட்டத்தைத் தொடர்ந்தனர், சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் செந்தில்நாயகி ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் தீபக்ரஜினி ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை, மற்றும் அன்புச்செல்வன் குழசண்முகநாதன் உள்ளிட்டோர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அடுத்த மாதம் 4ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி தீர்வு காண்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
- கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்றது
- இதில் 9 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
ஆலங்குடி:
ஆலங்குடி தாலுக்காவில் 9 கிராம உதவியாளர் பணி இடத்திற்கான நேர்காணல் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 31 கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதில் 9 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, கடந்த 04-12-2022 அன்று போட்டித் தேர்வு நடைபெற்றது. உதவியாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 689 பேரில் நேற்று முதல் நாள் 80 பேருக்கு ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களை ஆலங்குடி வட்டாட்சி யர் செந்தில்நாயகி தலைமையில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலகோபாலன் மற்றும் தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் நட த்தும் அலுவலர் பழனியப்பன் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரை கண்ணு மற்றும் அலுவலர்கள் நேர்காணலில் உடனிருந்தனர். மேலும் நேற்றிலிருந்து நேர்காணலானது தொடர்ந்து சுமார் 9 நாட்க ள் நடைபெற்று விரைவில் பரீசீலனை செய்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
- மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 511 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- நியாயவிலை கடைகளில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்
- நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கிய பிறகு முறையாக செல்போனில் தகவல் அனுப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யபட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினார். 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அலுவலர்களால் நாடு முழுவதும் சுமார் 5,000 நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டினை ஆய்வு செய்தும், அதன்மூலம் நியாயவிலைக் கடைகளை மேம்படுத்தவும், ஒரு நாடு ஒரு ரேசன் அட்டை மற்றும் பிரதம மந்திரியின் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தினையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், சரிபார்ப்பு பட்டியலின்படி ஆய்வு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளின் விவரங்களை உரிய இணைய முகப்பில் பதிவு செய்தல் தொடர்பாக, கலெக்டர் கவிதா ராமு திருமயம் வட்டத்தில் நகரத்துப்பட்டி மற்றும் கும்பங்குடி ஆகிய இரண்டு நியாயவிலைக் கடைகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிரடி ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கிய பிறகு முறையாக செல்போனில் தகவல் அனுப்படுகிறதா என்பது குறித்தும், நியாயவிலைக் கடைகளில் முதலுதவிப்பெட்டி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உள்கட்டமைப்பு தேவைகள், பயனாளிகள் அடிப்படை வசதிகள், நியாய விலைக் கடைகளில் அடிப்படையாக இருக்க வேண்டிய அத்தியாவசிய தளவாடங்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டணமில்லா எண், ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு திட்டம், கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் பட்டியல் போன்ற விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆர்.கணேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்
- ஆலங்குடியில் அய்யப்ப சுவாமி வீதியுலா நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அய்யப்பன் கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகை, புரட்டாசி, சித்திரை மாதங்களில் இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொள்வார்கள். கார்த்திகை மாதத்ததை முன்னிட்டு மாலை அணிந்து விரதமிருந்து வரும் பக்தர்கள் சார்பில் அய்யப்பன் வீதி உலா நடைபெற்றது. அலங்க ரிக்கப்பட்ட ரதத்தில் மேளதாளம் மற்றும் வான வேடிக்கை முழங்க அய்யப்பன் வீதியுலா நடைபெற்றது. அய்யப்பன் கோயிலில் புறப்பட்ட இந்த வீதி உலாவானது சந்தைப்பேட்டை பேருந்து நிலையம், அரசமரம் பஸ்ஸ்டாப், வடகாடு முக்கம் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அய்யப்பனின் வீதியுலா நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி கா வல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
- மது போதையில் வாலிபர் அரிவாளால் நண்பரை வெட்டிய சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிலன்தெரு பகுதியை சேர்ந்தவர் அம்சத் அலி(வயது 32). அதே பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (33). இவர்கள் இருவரும் நண்பர்களாவார்கள். இந்த நிலையில் அம்சத் அலியும், ஷாஜகானும் மணிவிலன் தெரு பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.இதில் போதை தலைக்கேறியதும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஷாஜகான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அம்சத் தலையை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது தலை, தொடை , கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் அம்சத் அலிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் ஷாஜகான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அம்சத் அலியின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே ஷாஜகான் உடைத்து நொறுக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் சமரசமாகி நட்பை தொடர்ந்தனர். இந்த நிலையில் போதையில் ஷாஜகான் தனது மோட்டார் சைக்கிளை உடைத்தது தொடர்பாக அவரிடம் கேட்டு தகராறு செய்திருக்கலாம்.இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பெண்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
- 2 வீடுகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடந்துள்ளது.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து இருந்தனர்
புதுக்ேகாட்டை:
புதுக்கோட்டையில் நாரிமேடு பகுதியில் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. 42 பிளாக்களில் 1920 வீடுகள் உள்ளது. இங்கு தற்போது சிறிது சிறிதாக பயனாளிகள் குடியிருக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் காவல் சூப்பிரெண்டுக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.இதை ஏற்றுக்கொண்டு காவல் சூப்பிரெண்டு வந்திதாபாண்டே இரவு நேரத்தில் திருக்கோகர்ண போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பிளாக் எண்.17ல் தனியார் கடையில் வேலை பார்க்கும் கணேசன் என்பவர் தனது சென்சார் பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை காலையில் பார்க்கும் போது காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இதே போல் எதிரே உள்ள பிளாக் எண்.18ல் வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான பைக் நிறுத்தி வைக்கப்பட்டதும் காணாமல் போயுள்ளது. ஒரே இரவில் அடுத்தடுத்த பிளாக்குகளில் இருச்சக்கர வாகனங்கள் காணாமல் போனது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் அதே பகுதியில் இருச்சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள் காட்டு பகுதியில் போட்டு விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் மாவட்ட காவல் நிர்வாகம் தனிகவனம் செலுத்தி குற்றவாளிகளை பிடித்து இப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.






