என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து போராட்டம்
- ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது
- இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.ஆலங்குடி அருகே உள்ள ஆவுடானிக்குளத்தின் பல பகுதிகள் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் செரியலூர் கிராம மக்கள் சார்பில் அன்புச்செல்வன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றகிளையில் வழக்குத்தொடுத்திருந்தார்.இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உடனடியாக அளவீடுகள் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாமல் ஆலங்குடி வருவாய்துறையினர் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதாக செரியலூர் கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வலியுறுத்தியும், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரியும் செரியலூர், கரம்பக்காடு-இனாம், ஜெமீன்ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில் நாயகி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எதிர் தரப்பினர் உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக குறிப்பிட்ட நாட்களுக்கு தடை வாங்கியுள்ளதாகவும், அந்த தடை உத்தரவு முடிந்த உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவோம் எனவும் கூறினார். இதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், போராட்டத்தைத் தொடர்ந்தனர், சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் செந்தில்நாயகி ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் தீபக்ரஜினி ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை, மற்றும் அன்புச்செல்வன் குழசண்முகநாதன் உள்ளிட்டோர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அடுத்த மாதம் 4ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி தீர்வு காண்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.






