என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செம்பையன். இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு வசந்த்(வயது 10) என்ற மகனும், வைஷ்ணவி(8) என்ற மகளும் உண்டு.
சில்லக்குடியில் உள்ள அரசு பள்ளியில் வசந்த் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் வைஷ்ணவி 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வசந்த் வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில் நேற்று வசந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து சில்லக்குடி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குட்டையில் குளிக்கச் சென்றான். அங்கு குளித்தபோது நீச்சல் தெரியாத நிலையில் வசந்த் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து குன்னம் போலீசில் நந்தினி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர்:
இலங்கையில் இருந்த அகதியாக வந்த வேலாயுதம்பிள்ளை மகன் ஸ்ரீகாந்த் ராஜா (வயது 44) என்பவர் பெரம்பலூர் இலங்கை அகதிகளில் முகாமில் தங்கி வசித்து வருகிறார். டிவி மெக்கானிக்கான இவர் 2009 -ம் ஆண்டு எறையூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகள் தனலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு 2011-ம் ஆண்டு வரை பெண் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
அப்போது எறையூரில் தங்கியிருந்த வீட்டின் முகவரியை வைத்து வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பான்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ளார். இந்த ஆவணங்களை பயன்படுத்தி கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி தான் இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்துள்ளார்.
இதேபோல் இலங்கையில் இருந்த அகதியாக வந்த சுப்பையா மகன் சூனிக் கண்ணன் (எ) சுதர்சன் (40) என்பவர் பெரம்பலூர் இலங்கை அகதி முகாமில் தங்கி வசித்து வந்தார். அதே முகாமைச் சேர்ந்த தவராசா மகள் மிதுனரூபி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பெரம்பலூர் பாலக்கரையில் தள்ளு வண்டியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
2011-ம் ஆண்டு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட காரணத்தினால் இலங்கை அகதிகள் முகாம் பதிவேட்டிலிருந்து இவரது பெயர் நீக்கப்பட்டு பெரம்பலூர் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2011-லிருந்து 2018 வரை திருச்சி பொன்மலைப்பட்டியில் தங்கியிருந்தார். தற்போது சுதர்சன் பார்க்கவன் தெரு, நெடுவாசல் சாலை, துறைமங்கலம், பெரம்பலூர் என்ற முகவரியில் தங்கியுள்ளார்.
ஏற்கனவே திருச்சி பொன்மலைப்பட்டி தங்கியிருந்த வீட்டின் முகவரியை வைத்து பெற்றிருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேசன் கார்டு ஆகியவற்றை பெரம்பலூர் முகவரிக்கு மாற்றம் செய்து அந்த ஆவணங்களை பயன்படுத்தி சுதர்சன் என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி தான் இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்துள்ளார். சூனிகண்ணன் (எ) சுதர்சன் மீது திருச்சி மாவட்டம், பொன்மலை, உப்பிலியபுரம், தாரபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இது குறித்து பெரம்பலூர் கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிந்து இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்த ஸ்ரீகாந்த்ராஜா, சுதர்சன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு கூட்டுறவு சங்கங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்து வந்தது. தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகியும் பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பால் பணத்தை கூட்டுறவு சங்கங்கள் வழங்குவதில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் தங்களது பசு மாடுகளுக்கு தீவனம் கூட வாங்க முடியாமலும், குடும்பம் நடத்த முடியாமலும் தவித்து வருகின்றனர்.
பால் பாக்கி தொகையை உடனடியாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, மாநில செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு பாக்கித் தொகை, ஊக்கத் தொகை, உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு பால் விற்பனை விலையை குறைத்ததால் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பாக்கி தொகை வழங்கப்படாமல் உள்ளது. அந்த பணத்தை உடனே கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசு வருகிற 20-ந்தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் 20-ந்தேதி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 55). இவர், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து திருச்சி - சென்னை புறவழிச்சாலை செல்லும் பிரதான சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி ராணியை பிரிந்து சுமார் 15 ஆண்டுகளாக தனியாக செல்வராஜ் வாழ்ந்து வந்தார்.
இவருக்கு கார்த்தி, கண்ணதாசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த மகனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக உறவினரிடையே ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக செல்வராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நேற்று காலை செல்வராஜ் கடைக்கு டீக்குடிக்க வந்தவர்கள் கடையின் கதவு பாதி திறந்தும், மீதி திறக்காமலும் இருந்ததை கண்டனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், அங்கு வந்து கடைக்குள் பார்த்தபோது செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்ததாக தெரியவந்தது. பின்னர் செல்வராஜின் உடலை கைப்பற்றி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசாா் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது தந்தை அண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






