search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    பாக்கி தொகையை வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் 20-ந் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    பாக்கி தொகையை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் 20-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு கூட்டுறவு சங்கங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்து வந்தது. தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகியும் பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பால் பணத்தை கூட்டுறவு சங்கங்கள் வழங்குவதில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் தங்களது பசு மாடுகளுக்கு தீவனம் கூட வாங்க முடியாமலும், குடும்பம் நடத்த முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    பால் பாக்கி தொகையை உடனடியாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, மாநில செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு பாக்கித் தொகை, ஊக்கத் தொகை, உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு பால் விற்பனை விலையை குறைத்ததால் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பாக்கி தொகை வழங்கப்படாமல் உள்ளது. அந்த பணத்தை உடனே கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசு வருகிற 20-ந்தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் 20-ந்தேதி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வழங்கினர்.
    Next Story
    ×