என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் தோப்புசாலையை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி ராணி (வயது 48). துரைசாமி சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்ததால் ராணி விரக்தியாக இருந்து வந்தார். மேலும் தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் ராணி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராணியின் மகன் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    வேப்பந்தட்டை அருகே தாய் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 28). விவசாயி. இவரை, இவரது தாய் சரோஜா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாதபோது பருத்தி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூரில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் அனப்புடையான் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு சூர்யபிரகாஷ் (வயது 31), குருபிரசாத் என 2 மகன்கள் உண்டு. தற்போது தேவராஜ் பெரம்பலூர் மதரசா ரோடு மேட்டுத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சூர்யபிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தார். குருபிரசாத் சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு விழுப்புரத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யபிரகாஷ் வேலை கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வதாகவும், அதுவரை தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியதாக தெரிகிறது. ஆனாலும் பல இடங்களில் தேடியும் சரியான வேலை கிடைக்காததால் சூர்யபிரகாஷ் விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை 7 மணி வரை சூர்யபிரகாசின் படுக்கை அறையின் கதவு திறக்கப்படவில்லை. தேவராஜ் கதவை தட்டியும் திறக்கப்படாததால் மகன் தூங்கி கொண்டிருப்பான் என்று நினைத்து சென்றுள்ளார். பின்னர் காலை 9 மணி ஆகியும் சூர்யபிரகாஷ் வெளியே வராததால் சந்தேகமடைந்த தேவராஜ் அறையின் கதவை வேகமாக தள்ளியதால், கதவு திறந்தது.

    இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது சூர்யபிரகாஷ் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யபிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தேவராஜ் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் மருமகன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பழைய ஆஸ்பத்திரி சாலையில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி மகாலட்சுமி(வயது 28). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, வாலிபர் ஒருவர் முகவரி கேட்பதுபோல் வீட்டிற்கு வந்தார். அவர் திடீரென மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மகாலட்சுமி அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    அதன் அடிப்படையில் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இப்ராஹிம்(வயது 20) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மகாலட்சுமியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றது அவர்தான் என்பதும், தங்கச்சங்கிலியை அரும்பாவூரில் உள்ள அவரது மாமியார் அஞ்சலை(37) என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்கச்சங்கிலியை மீட்ட போலீசார், இப்ராஹிம், அஞ்சலை ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    பெரம்பலூர் நகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து நெடுவாசல் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராம மக்கள் நேற்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராம பகுதியில் பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கும், பாதாள சாக்கடை மூலம் வரும் கழிவு நீரை சுத்திகரிக்க நிலையமும் உள்ளது.

    ஆனால் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தற்போது எங்கள் கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிணற்றின் அருகே அதிகளவு கொட்டி வருகின்றனர். இதனால் குடிநீர் துர்நாற்றம் வீசுவதோடு, கலங்களாக வருகிறது. மேலும் பாதாள சாக்கடை மூலம் வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படாமல், அப்படியே வெளியே திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாய விளை நிலங்களும் பாதிக்கப்படுகிறது.

    மேலும் குப்பைகள், கழிவுநீரால் கிராம பகுதியில் தொற்று நோய் பரவி வருகிறது. எனவே கிராமத்தில் நகராட்சி குப்பைகள் கொட்டுவதை நிறுத்தவும், கழிவுநீரை சுத்திகரிக்கவும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும், என்றனர். இது தொடர்பாக அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணியிடம் மனு கொடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நெடுவாசல் கிராம மக்கள் கூறுகையில், நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என்றனர். மேலும் நெடுவாசல் கிராம எல்லைக்கு உட்பட்ட மலையில் சட்ட விரோதமாக கல் உடைப்பவர்களையும், கல் திருடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் பெரம்பலூர் ஒன்றியம், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுவாசல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தற்போது வழங்கி வரும் குடிநீர் விநியோக கால அவகாச இடைவெளியை குறைத்து பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கிடும் வகையில் பெரம்பலூர் நகராட்சியில் பரிசோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கும் முக்கிய ஆதாரமான கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

    தற்போது வழங்கி வரும் குடிநீர் விநியோக கால அவகாச இடைவெளியை குறைத்து பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கிடும் வகையில் பெரம்பலூர் நகராட்சியில் பரிசோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் அனைவரும் இந்த பரிசோதனை பணிக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இதில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் இவ்வலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04328 225 285-ல் மற்றும் நகராட்சி ஆணையர் கைபேசிஎண் 7397389959 மற்றும் நகராட்சி பொறியாளர் கைபேசி எண் 7397389958 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அறிவிக்கப்படுகிறது.

    இத்தகவலை பெரம்பலூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 6 கடைகளில் இருந்து 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி ஆலோசனையின்பேரில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா? என்று சுகாதார ஆய்வாளர் சாம்கர்ணல் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ், மணிகண்டன் மற்றும் பரப்புரையாளர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் பயன்பாட்டில் இருந்த சுமார் 50 கிலோ பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.3,600 வசூலிக்கப்பட்டது. மேலும் கடைக்காரர்களிடம் பாலித்தீன் பைகள் மற்றும் கப்புகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
    குன்னம் அருகே வீடு, கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (வயது 55). விவசாயி. இவருக்கு வயலப்பாடி கிராமத்தில் அரியலூர்-திட்டக்குடி மெயின் ேராடு அருகே வீடு உள்ளது. ஆனால், ராமன் 10 வீடுகள் தள்ளியுள்ள மற்றொரு வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மெயின் ரோடு அருகே உள்ள ராமன் வீட்டின் பின்புற கதவை உடைத்து கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

    ஆனால், அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் அருகே உள்ள ரமேஷ் (45) என்பவரது மளிகைக் கடையின் முன்பக்க இரும்பு கதவு மற்றும் மரக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    அப்போது கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு சுப்பிரமணியன் என்பவர் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றதை கண்டு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரது கூச்சலை கேட்டு அருகில் உள்ளவர்கள் எழுந்து ஒன்று கூடினர். பொதுமக்களை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் வயலப்பாடி முழுவதும் தேடியும் சிக்கவில்லை.

    இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குன்னம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர் அருகே கோவில் உண்டியல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேருராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் திரு.வி.க. நகரில் உள்ள மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை இந்த கோவிலில் உண்டியல் இருந்த இடம் பெயர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்து உண்டியலை தூக்கி சென்றது தெரியவந்தது. இந்த உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை அருகே பச்சிளம் குழந்தையின் தாய் திடீரென இறந்தார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் கவுசல்யா(வயது 22). இவருக்கும் கொட்டாரக்குன்று கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(27) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து கர்ப்பமாக இருந்த கவுசல்யாவிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கவுசல்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கவுசல்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மேல் விசாரணை நடத்தி வருகிறார் பச்சிளம் குழந்தையின் தாய் இறந்த சம்பவம் தொண்டமாந்துறை மற்றும் கொட்டாரக்குன்று கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 25). நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருக்கும், 17 வயது வயது சிறுமிக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. தற்போது அந்த பெண்ணுடன் பிரபாகரன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார்.

    இது குறித்து அந்த பெண் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து ஐ.ஜி. உத்தரவின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக இரு குடும்பத்தினரை சேர்ந்த 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூரில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கப்பட்ட 103 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வடமாநிலத்தை சேர்ந்தவரை கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தல், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி எச்சரித்திருந்தார். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனைக்காக பெரம்பலூரில் ஜமாலியா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாக போதை பொருள் விற்பனை தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 103 கிலோ போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் ராஜஸ்தான் மாநிலம், ஜாலூர் மாவட்டம், நியர் பட்வர் பவன் பகுதியை சேர்ந்த கான்சிங் (வயது 39) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கான்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போதை பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தி வந்த மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×