என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வரும் எம்.பி. தேர்தலில் பெரம்பலூரில் துரை.வைகோ போட்டியிட வலியுறுத்தப்பட்டது
    • மாவட்ட செயற்குழு கூட்டம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் எம்.எல்.ஏ.வுமான சின்னப்பா தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார்.

    மாநில துணை பொதுசெயலாளர் முருகன், மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா, திருச்சி மாநகர் மாவட்ட செயயலாளர் சோமு, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில், 2024 எம்.பி. தேர்தலில் ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளர் துரை.வைகோ பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படும் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மிளகாய் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தும், வேளாண் அங்காடிகளை அரசே ஏற்றும் நடத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் வழியாக கரூருக்கு ெரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொலைதூர மாவட்டங்களுக்கும் பேருந்துகள் சென்று வரும் வகையில் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

    திருச்சி காவிரியில் தருப்பணை கட்டி கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு காவிரி உபரி நீரை கொண்டு வந்து ஏரி, குளம்போன்ற நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்லகதிர்வேல், சுப்ரமணி, சரவணன், காமராஜ், ரபியுதீன், மணிவண்ணன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
    • கண்காணிப்பு அலுவலர் மேற்கொண்டார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஏற்கனவே நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9,847 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 2,394 விண்ணப்பங்களும், திருத்தம் செய்தல் தொடர்பாக 3,926 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11,179 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 2,475 விண்ணப்பங்களும், திருத்தம் செய்தல் தொடர்பாக 2,988 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பணிகளின் உண்மை தன்மை குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், இரூர் ஆகிய பகுதிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி, கோப்பிலியங்குடிகாடு ஆகிய பகுதிகளிலும் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் அவர் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் நடந்த சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி, அவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை தாசில்தார்கள் தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திட தேவையான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றார். அப்போது மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் உடனிருந்தனர்."

    • புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5,100 கற்போர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • 2022-27' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பெரம்பலூர்

    மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5,100 கற்போர்கள் கண்றியப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள எழுத படிக்க தெரியாத கற்போர்களுக்கு கல்வி தன்னார்வலர்களை கொண்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளி வளாகம், பணிபுரியும் இடங்களில் கற்போர் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத, படிக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இதில் முதல் கட்டமாக 250 கற்போர் மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் ஏற்கனவே தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் ஒன்றியத்தில் கண்டறியப்பட்டுள்ள எழுத படிக்க தெரியாத 1,202 கற்போர்களுக்கு பயிற்சி அளிக்க முதற்கட்டமாக 64 கற்போர் மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்து பயிற்சியின் அவசியம் மற்றும் அதன் நோக்கத்தை விளக்கி கூறினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதனகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடந்தது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்

    மதனகோபால சுவாமி கோவிலில் நேற்று கோ பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து பசுவிற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், பசுவையும் வழிபட்டனர். மேலும் இளம்பெண்கள் பஞ்சபாண்டவர் சன்னதியில் உள்ள ஆண்டாள் சிலை முன்பு திருப்பாவை பாசுரங்களை பாடி, தங்களது வேண்டுதல் நேர்த்தி வழிபாட்டை தொடங்கினர்.

    • புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் நேற்று முன்தினம் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். குன்னம் அருகே பெரம்பலூர்-அரியலூர் சாலையில் கீழமாத்தூர் செல்லும் பிரிவு சாலையில் சென்றபோது, அப்பகுதியில் ஒரு கார் நிற்பதை கண்டு சந்தேகப்பட்டு, அருகில் சென்று பார்த்தனர். அப்போது 2 பேர், காரின் பின் பக்கத்தில் இருந்து ஒரு மூட்டையை தூக்கி, முன்பக்கத்தில் வைத்து கொண்டிருந்தனர்.

    இதையடுத்து போலீசார், அவர்களை பிடித்ததோடு, அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் போலீசார் நடத்தி வசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(வயது 37), குன்னம் அருகே உள்ள வேப்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் செல்வமணி(27) என்பதும், குட்கா பொருட்களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக பெரம்பலூர் கொண்டு வந்து, பின்னர் அரியலூர் சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

    இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டினார்.

    • மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • விவசாய கூலி வேலை செய்து வந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). மாற்றுத்திறனாளியான இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுசிலா(35) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சுசிலா வீட்டை விட்டு வேறு நபருடன் சென்றதால் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விளையாட்டு விடுதி மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் தற்காப்பு பயிற்சியில் (டேக்வாண்டோ) ஈடுபட்டு வரும் மாணவிகள் சிலரிடம், தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மது போதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவித்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது தொடர்பாக சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார். மேலும் தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜனும் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த புகார் தொடர்பாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி நேற்று வருவாய்த்துறையினர், போலீசாருடன் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும், அரசு மகளிர் விளையாட்டு விடுதிக்கும் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு அவர்கள் விசாரணை அறிக்கையை கலெக்டரிடம் சமர்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதி, மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்குவித்தல் பயிற்சி நடந்தது.
    • 2 நாட்கள் அளிக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 50 அங்கன்வாடி பணியாளர்களுக்கு அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலமாக பணி ஊக்குவித்தல் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்கள் அளிக்கப்பட்டது. இதில் உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரமான உணவுகள் குறித்தும், மனித உறவுகள் மேம்பாடு குறித்தும், மனநலம் மற்றும் மன அழுத்தம் போக்குதல் குறித்தும், குழு உணர்வு மேம்பாடு குறித்தும், தகவல் தொடர்பு கலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை திருச்சி மண்டல மைய துணை கலெக்டரும், இளநிலை நிர்வாக அலுவலருமான சக்திவேல் ஆய்வு செய்தார். இப்பயிற்சி நிறைவு நாளான நேற்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியை சேர்ந்த உதவி கணக்கு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலியானார்
    • டிரைவரை கைது செய்து விசாரணை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது ரஞ்சன்குடி கிராமம். இங்குள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஜாபர் (வயது 63). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷேக் ஜாபர் அங்குள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்தவாறு கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற சொகுசு கார் ஷேக் ஜாபர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஷேக் ஜாபர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சென்னை நந்தனத்தை சேர்ந்த மாதவன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • மார்கழி மாத பிறப்பையொட்டி

    பெரம்பலூர்:

    மார்கழி மாதம் நேற்று தொடங்கியதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வைணவ கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் நகரில் உள்ள மதன கோபால சுவாமி கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடி சுவாமியை வழிபட்டனர். இதே ேபால, மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் வழிபாடுகள் நடைபெற்றன.

    • ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்
    • காவலர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்

    பெரம்பலூர்:

    திருச்சி சரக டிஐஜி சரவனசுந்தர் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, ஆயுதப்படை காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள், காவல் நிலையங்களில் பயன்படுத்தி வரும் வாகனங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 8 பேரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் காவலர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்

    • ஓடையில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
    • ஓடையில் இறங்கியபோது நடந்த சம்பவம்

    பெரம்பலூர்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 55), தொழிலாளி. இவர் கால்நடைகளுக்கு தீவனம் அறுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அதிகளவில் தண்ணீர் சென்ற ஓடையில் இறங்கியபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்தநிலையில் பாலையா வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்தநிலையில், ஓடையில் உள்ள முட்புதரில் பாலையா பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×