என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளியில் நடைபெற்றது
    • பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

    பெரம்பலூர், 

    தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளிகளின் பாத பூஜை விழா நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த பாத பூஜை விழாவில் நடப்பு கல்விஆண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களும் அவர்களது பெற்றோர்க ளும் பங்கு பெற்றனர். மேல்நிலைப்பள்ளியின் முதல்வர்டாக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார் . அதனைப் பின்தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், மற்றும் செயலர், முதல்வர்களும் மாணவ பிரதிநிதிகள், பெற்றோர்கள் என சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றினர்.தமிழ்வழி பள்ளியின் முதல்வர் கோவிந்தசாமி பாதபூiஐ இனிதே நடைபெற வழிநடத்தினார்.மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களை அமர வைத்து அவர்களுக்கு பாதபூஜை செய்து அவர்க ளிடமிருந்து ஆசிர்வாதத்தை பெற்று மகிழ்ந்தனர்.பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் அவர் மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டினை வழங்கினார்.வேந்தர் சீனிவாசன் பேசும்போது, இந்த பாதபூஜை மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். பொது த்தேர்வுகளை தயக்கம் இன்றி சந்திக்க, வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோர்களின் அன்பும் ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தவும் குருவை எப்போதும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தவும் இந்த பாதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றதாக அவர் பேசினார். தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளிகளின் முதன்மை முதல்வர் சாம்சன் மாணவர்களை வாழ்த்தி, நீட், ஜே.இ.இ போன்ற போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார் . அவ்வப்போது பெற்றோர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்க மளித்தார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.ஓவ்வொரு மாணவரும் தாய் தந்தையரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர் . ஆசிரியை மேரி சுவாகின் பீகா இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் .துணை முதல்வர் திருமதி பிரியதர்சினி நன்றியுரை வழங்கினார். 

    • 3 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நடைபெற்றது
    • பெரம்பலூர் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் சாலை கவுல்பாளையத்தில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய(குடிசை மாற்று வாரியம்) குடியிருப்பு உள்ளது. இங்கு 504 வீடுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சப்ளை சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக முற்றிலுமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து பல அரசு அலுவலகங்களில் பொது மக்கள் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று காலை ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அங்கு வந்த அரசு அலுவலர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு, பெரம்பலூரில் இருந்து அரியலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். 

    • அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டு
    • இந்த ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்று ஆசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்கள் காப்பியடிக்க அனுமதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டம், ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் முதலிடங்களை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய ஆணையர் நந்தகுமார், பெரம்பலூர் ஆட்சியராக இருந்தபோதும், இதே போன்று நெருக்கடி கொடுத்து மாணவர்களை பார்த்து எழுத அனுமதித்ததாகவும், இந்த ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அறிக்கை, பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாசி மக திருவிழாவையொட்டி குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையான வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, திருவட்டத்துறை என 7 துறைகள் உள்ளது. இதில் 3-வது துறையாக விளங்குகிற சு.ஆடுதுறை கிராமத்தில் குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் மாசி மக திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மக திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி பஞ்சமுர்த்திகளுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18-வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சாமி திருத்தேருக்கு கொண்டுவரப்பட்டார்.

    பின்னர் திருஷ்டி பூஜைகள் நடத்தப்பட்டு, வாண வேடிக்கையுடன் ராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் பக்தி கோஷத்துடன் பக்தி பாடல்கள் பாடியபடி தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். இந்த தேரோட்ட விழாவில் ஆடுதுறை, ஒகளுர், பெண்ணக்கோனம், அத்தியூர் கிராமங்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    • பெரம்பலூர் துறைமங்கலத்தில் சி.ஐ.டி.யூ. பேரவை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த பேரவை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் டெய்சி, மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் அகில இந்திய மாநாடு மற்றும் மாநில, மாவட்ட குழு முடிவுகளை விளக்கி பேசினர்.சிஐடியூ, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10 மற்றும் 11ம்தேதிகளில் மாவட்ட முழுவதும் கிராமபுற மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார நடைபயணத்தை நடத்துவது,

    சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி வரும் 15ம்தேதி தெருமுனை கருத்தரங்கினை நடத்துவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கிடவும், பொதுத்துறை நிறுவன ங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ம்தேதி முதல் 30ம்தேதி வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மணிமேகலை, ரெங்கராஜ், சிவானந்தம், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





    • விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 60). விவசாயி. இவருக்கு குடல் இறக்க நோய் ஏற்பட்டு வயது முதிர்வு காரணமாக குணப்படுத்த முடியவில்லையாம். நோயை குணப்படுத்த பல மருத்துவமனைகளில் காண்பித்தும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் மணமுடைந்த அசோகன் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த உறவினர்கள் அசோகனை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அசோகன் மகன் கோதண்டராமன் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அசோகன் 2 திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது."

    • காப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
    • வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் 2-ம் கட்டமாக ஈடுபட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில், பெரம்பலூர் வனச்சரகர் பழனிகுமரன் தலைமையில், பறவைகள் ஆராய்ச்சியாளர் சிவக்குமார் முன்னிலையில், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரநிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில் 2-ம் கட்டமாக ஈடுபட்டனர். இதில் பெரம்பலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுவாச்சூர், வேலூர், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், எளம்பலூர், மயிலூற்று அருவி ஆகிய பகுதிகளில் காப்பு காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து முடிந்தது.




    • மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகன் முருகன் (வயது 29). இவர் கடந்த 2-ந் தேதி இரவு பல் வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்வதற்காக பஸ்சுக்காக நிறுத்தத்தில் காத்திருந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது முருகன் அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி வந்து இதுகுறித்து செல்போன் மூலம் தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கைதான முருகன் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
    • சமையல் கியாஸ் சிலிண்டருக்கான உரிய மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

    பெரம்பலூர்,

    சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னபொண்ணு தலைமை தாங்கினார். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அதன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு, அதனை பாடையில் வைத்து ஊர்வலமாக தூக்கி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் கண்டனம் தெரிவித்து பேசினார். பின்னர் மாதர் சங்கத்தினர் சமையல் கியாஸ் சிலிண்டரை சுற்றி வந்து ஒப்பாரி வைத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கான உரிய மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    • அரசு மருத்துவமனையில் பரிதாபம்
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    பெரம்பலூர்,

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மேலக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி அஞ்சலை (வயது 60). கலியன் ஏற்கனவே இறந்து விட்டதால், அஞ்சலை தனியாக வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி அஞ்சலைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை அவருடைய மகள் தவமணி வேப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அஞ்சலை மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மருத்துவமனையில் படுக்கையில் இருந்து அஞ்சலை தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஞ்சலை நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது

    குன்னம், 

    கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா முதன் முறையாக நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் நிறுவனர் ஆர்.பரமசிவம், இயக்குனர் தனலட்சுமி முருகேசன், திருச்சி உறையூர் தயாநிதி மெமோரியல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சுதர்சன், அந்நிறுவனத்தின் முதல்வர் நர்மதா சுதர்சன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.பள்ளியின் துணை முதல்வர்கள் உமா, ஜாய், ஒருங்கிணைப்பாளர்கள் ஹபிபுனிஷா, குமரவேல் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஆராதனா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில், பேச்சு, இசை, நடனம், நாடகம் என்று மாணவ-மாணவிகளின் வண்ணமிகு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • குன்னம் அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் மருது மகன் முத்து ராஜா (வயது28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கூலி வேலை செய்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலியும், மஞ்சள் காமாலையும் இருந்து வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னரும் இவருக்கு மஞ்சள் காமாலை மற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த முத்துராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து முத்துராஜாவின் தந்தை மருது மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் முத்துராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×