என் மலர்
நீலகிரி
- தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
- லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரவேணு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக கேரட், உள்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயி கள் கேரட்டை அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று கழுவி, அதனை மூட்டைகளில் நிரப்பி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட கேரட் கிலோவு க்கு ரூ.70 வரை காய்கறி மண்டிகளில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் ரூ.40 முதல் ரூ.50 வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.45 ரூபாய் முதல் ரூ.60 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது.
கொள்முதல் விலை வீழ்ச்சியடை ந்துள்ளதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாவிட்டாலும், லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டில் உள்ள குழிகளில் சிக்கி கீழே விழும் அபாயமும் உள்ளது.
- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே அருவங்காடு -ஜெகதளா போக்குவரத்து சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் பாலாஜிநகர், காந்திநகர், ஒசட்டி, ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்வதை பார்க்க முடிகிறது.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டில் உள்ள குழிகளில் சிக்கி கீழே விழும் அபாயமும் உள்ளது. அதுவும்தவிர ரோட்டில் ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளும் சரிவர மூடப்படவில்லை.
அருவங்காடு - ஜெகதளா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.20 கோடி செலவில் ரோடு போடப்பட்டது.
அதன்பிறகு அங்கு பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இதனால் அது தற்போது சிதலம் அடைந்து அனைவரையும் பயமுறுத்தும் சாலையாக மாறி உள்ளது.
எனவே ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில்உடனடியாக தலையிட்டு அந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து பேருராட்சி அதிகாரிகள் கூறுகையில், அருவங்காடு-ஜெகதளா சாலை பணிக்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. நிதி பற்றாக்கு றையால் பணிகள் துவங்காமல் உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
- தேயிலை தோட்டங்கள், கரடிகளின் குடியிருப்பாக மாறி வருகின்றன.
- அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை பிடிக்க வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளூ நுகர்வோர் அமைப்பின் தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம் ஆகியோர் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோத்தகிரி பகுதியில் கூலித்தொழிலாளிகள் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்கள் அங்கு உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதிகளில் தற்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இங்கு உள்ள தேயிலை தோட்டங்கள், கரடிகளின் குடியிருப்பாக மாறி வருகின்றன. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.
நீலகிரியில் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு பண்டக சாலைகளிலும் அரசு நிர்ணயித்த விலையின்படி, ஒரு கிலோ ரூ.60க்கு தக்காளி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- குன்னூா் கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு 5 பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் வந்தன.
- கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக நாவல் பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த மரங்களில் தற்போது நாவல்பழம் கனிய தொடங்கி உள்ளது. எனவே நாவல் பழங்களை ருசிப்பதற்காக கரடிகள் கூட்டம், கூட்டமாக தேயிலைத் தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே வரத்தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் குன்னூா் கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு 5 பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் வந்தன. அவை அங்கு உள்ள நாவல் மரங்களில் இருந்து கீழே விழுந்து கிடந்த பழங்களை ருசித்து தின்றன.
அதன்பிறகு நீண்ட நேரம் அந்த பகுதியில் சுற்றி திரிந்தன. இதற்கிடையே கோடேரி கிராமத்தினர் தேயிலை பறிப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் தோட்டத்துக்குள் நின்ற கரடிகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-கோடேரி கிராமத்தில் நாவல்ப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், தற்போது கரடிகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. அங்கு தரையில் விழுந்து கிடக்கும் நாவல் பழத்தை ருசித்து விட்டு செல்கின்றன.
இது தேயிலை தோட்ட தொழிலாளா்களை அச்சப்பட வைத்து உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக இந்தக் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என
வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஆப்பிள் பி பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
- சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், பாட்டில், பிளாஸ்டிக் வாழை இலைகள், தோரணம்-கொடிகள் உள்ளிட்ட 19 வகை பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் இதனை பெரும்பாலான வியாபாரிகள் மதிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக புகார்கள் வந்தன.
எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு சிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார். தலைமையில் வட்டாட்சியர் கனிசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர், ஆப்பிள் பி பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவை இருப்பது தெரிய வந்தது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கவோ பயன்படுத்தவோ கூடாது. அப்படியான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
- போலீசார் செல்போன் சிக்னலை வைத்து வாலிபரை மடக்கி பிடித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி சேட்லைன் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஆசிரியர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 23 சவரன் நகை கொள்ளை போனது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அறிவுறுத்தலின்படி டி.எஸ்.பி குமார் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு சிக்னல்களை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் ஒருவரின் அலைபேசி உரையாடல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே போலீசார் அந்த நம்பரை ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் அவிநாசியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் உடனடியாக அவிநாசிக்கு புறப்பட்டு சென்று அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கோத்தகிரி ஜக்கனார் பகுதியை சேர்ந்த முத்துவேல் என்கிற சிவா (வயது 45) என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கோத்தகிரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து முத்துவேல் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நான் அவிநாசியில் இருந்து சம்பவத்தன்று காலை கோத்தகிரி பகுதிக்கு வந்தேன். அங்கு நாள் முழுவதும் தங்கி இருந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டேன். இதில் கோத்தகிரி அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் இருந்த வீட்டை தேர்வு செய்தேன்.
அதன்பிறகு அந்த பள்ளிக்கூடத்தில் நுழைந்து நள்ளிரவு வரை பதுங்கி இருந்தேன். அதன்பிறகு சுவரேறி குதித்து வீட்டினுள் புகுந்தேன்.
ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. எனவே அதே பகுதியில் உள்ள இன்னொரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகையை திருடினேன். அதன்பிறகு அதே அரசு பள்ளிக்கு வந்து தூங்கினேன். அதிகாலை நேரத்தில் எழுந்து திருடிய தங்க நகைகளுடன் அவிநாசிக்கு சென்று விட்டேன். இவ்வாறு முத்துவேல் வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.
கோத்தகிரி வீட்டில் 23 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு அவிநாசியில் பதுங்கி இருந்த குற்றவாளியை தனிப்படை போலீசார் சாதுரியமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்இன்ஸ்பெக்டர் ரகுமான்கான், பப்பிலா ஜாஸ்மின், காவலர் முஜாஹூர், சுரேந்தர், அலி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ், ஏட்டு ரமேஷ், பாட்ஸா, காவலர் அஜித், பழனிசாமி ஆகியோருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- காய்கறி கழிவுகளை கால்நடைகள் மேய்வதால், சாலை முழுவதும் கழிவுகள் பரவி கிடக்கின்றன.
- ரோட்டில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ராம்சந்த் செல்லும் ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் நடந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அங்கு கடை வைத்திருக்கும் ஒருசிலர் சாலையின் ஒரு பகுதியில் காய்கறி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் குளம் போல் தேங்கி கிடக்கின்றன. அவற்றில் இருந்து துர்நாற்றமும் வீசுகிறது.
சாலையோர காய்கறி கழிவுகளை கால்நடைகள் மேய்வதால், சாலை முழுவதும் கழிவுகள் பரவி கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாசில்தார் ரோட்டில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- குன்னூரில் இருந்து புறப்பட்ட மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
- தண்டவாளத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினார்கள்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பயணம் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த மலை ரெயில் இன்று காலை குன்னூரில் இருந்து புறப்பட்டது. அப்போது வெலிங்டன் பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தது.
இதனை தற்செயலாக பார்த்த ரெயில்வே ஊழியர்கள், உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். எனவே குன்னூரில் இருந்து புறப்பட்ட மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மீட்புபடை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தண்டவாளத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு மலைரெயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிறார்.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்து, தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை தொடர்ந்து படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடந்த மாதம் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பொம்மன், பெள்ளி ஆகியோர் சந்தித்து, முதுமலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அதனை ஏற்று வருகிற 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிறார்.
அங்கு பாகன் தம்பதி மற்றும் யானை பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் பலர் மசினகுடியில் உள்ள தற்காலிக ஹெலிபேட், தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் போது பல்வேறு ஆலோசனைகளையும் அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் அம்ரித், முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், துணை இயக்குனர்கள் வித்யா, அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுமலை, மசினகுடி உள்ளிட்ட இடங்களில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ஏற்கனவே யானைகள் முகாம் மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் முதுமலையில் செயல்பட்டு வரும் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும் மூடப்பட்டன. மேலும் அங்கு அறை முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தாய்மடி அருங்காட்சியகத்தை பிரதிபலிக்கும் வகையில் சுடுமண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- மண்பாண்டங்கள் செய்யவும், கலைப் பொருட்களை வடிவமைக்கவும் கற்று தேர்ந்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அழிந்து வரும் பாரம்பரிய மண்பாண்ட தொழில்கள் மற்றும் கீழடி தமிழரின் தாய்மடி அருங்காட்சியகத்தை பிரதிபலிக்கும் வகையில் சுடுமண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது தமிழரின் பழங்கால சிற்பக்கூடத்தை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும், சுடுமண் களிமண் தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு மண்பாண்டங்கள் செய்யவும், கலைப் பொருட்களை வடிவமைக்கவும் கற்று தேர்ந்தனர்.
குன்னூர்,
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வருகிற 5-ந்தேதி குன்னூர் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு அவர் பொதுமக்களை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும் பெறப்பட உள்ளது.
எனவே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் குறை மற்றும் தேவைகளை மனுக்களாக எழுதி, குன்னூர் அய்யப்பன் கோவில் அருகில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நேரடியாக வந்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சாம்பாரில் பூச்சிகள் கிடக்கிறது. வேகாத முட்டைகள் தரப்படுகிறது.
- இனிவரும் காலங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படாது
அரவேணு,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பாக்கியநகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பள்ளியில் கடந்த சில வாரங்களாக தரமற்ற முறையில் மதிய உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் சாம்பாரில் பூச்சிகள் கிடக்கிறது. வேகாத முட்டை கள் தரப்படுகிறது. போதிய குடிநீர் இல்லை, குடிநீர் தொட்டிகள் குப்பையாக உள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியை வசந்தா, சத்துணவு அமை ப்பாளர் லட்சுமி, சத்துணவு சமையலர் பிச்சாயி ஆகியோரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். அதன்பிறகு இனிவரும் காலங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படாது. தவறு செய்தவர்கள் மீது நடவடி க்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.கோத்தகிரி பள்ளியில் தரமற்ற உணவுகள் வழங்குவதாக கூறி மாணவர்களின் பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






