search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திரவுபதி முர்மு 5-ந் தேதி வருகை: முதுமலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை
    X

    திரவுபதி முர்மு 5-ந் தேதி வருகை: முதுமலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிறார்.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்து, தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

    இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை தொடர்ந்து படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கடந்த மாதம் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பொம்மன், பெள்ளி ஆகியோர் சந்தித்து, முதுமலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    அதனை ஏற்று வருகிற 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிறார்.

    அங்கு பாகன் தம்பதி மற்றும் யானை பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் பலர் மசினகுடியில் உள்ள தற்காலிக ஹெலிபேட், தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் போது பல்வேறு ஆலோசனைகளையும் அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் அம்ரித், முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், துணை இயக்குனர்கள் வித்யா, அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முதுமலை, மசினகுடி உள்ளிட்ட இடங்களில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ஏற்கனவே யானைகள் முகாம் மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் முதுமலையில் செயல்பட்டு வரும் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும் மூடப்பட்டன. மேலும் அங்கு அறை முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×