என் மலர்tooltip icon

    நீலகிரி

    • டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்
    • குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 22). இவரது நண்பர் சுபாஷ் (வயது 21).

    இவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிள் மூலம் கோவை சென்று கொண்டிருந்தபோது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனையிலும், சுபாஷ் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராமச்சந்திரனை (வயது 39) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் இன்று அதிகாலை இதே வழித்தடத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் குறும்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். 

    • ஒப்பந்ததாரர் சுப்பிரமணி- தொழிலாளிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட விவகாரம்
    • போலீசார் சுரேஷ், ஆனந்தை மீண்டும் கைது செய்தனர்

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த ஆண்டு சின்ன கரும்பாலம் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இதில் கட்டுமான பணியில் சுரேஷ், ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்தப் பணியின் மேற்பார்வையாளராக சரவணன் என்பவர் இருந்தார் இதில் உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படாததால் ஒப்பந்ததாரர் சுப்பிரமணிக்கும், தொழிலாளிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் சுப்பிரமணி குன்னூர் போலீசில் புகார் செய்ததன் பேரில் சுரேஸ் (வயது36), ஆனந்த் (வயது 40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

    இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மீண்டும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல வந்த மேற்பார்வையாளர் சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் மேலும் புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் மீண்டும் சுரேஷ் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

    • கலசங்களுக்கு கணபதி பூஜை, ஆலய கருவறை நிலவு பூஜை நடத்தப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

    அருவங்காடு,

    குன்னூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் கலசங்களுக்கு கணபதி பூஜை, துவார பூஜை, ஆலய கருவறை நிலவு பூஜை நடத்தப்பட்டது.

    மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்த குடம் எடுத்து கோவில் வந்தடைய ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு தீர்த்த நீரை ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆலயத்தில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  

    • ஊராட்சி தலைவர் எம்.கலையரசி முத்து, துணை தலைவர் மஞ்சை மோகன் குழுவினர் மும்முரம்
    • அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்து

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்பேரில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.ஸ்ரீதரன், தே.நந்தகுமார் அறிவுரைப்படி, ஊராட்சி தலைவர் எம்.கலையரசி முத்து, துணை தலைவர் மஞ்சை மோகன், ஊராட்சி செயலர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகொலா ஊராட்சியில் தற்போது மக்கள் நலத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதிலும் குறிப்பாக 2022 மற்றும் 2023-ம் நிதியாண்டில் 15-வது நிதிகுழுமானிய திட்டம் மூலம் ரூ.98.87 லட்சம் மதிப்பிலும், ஜெ.ஜெ.எம்.திட்டம் மூலம் ரூ.404.29 லட்சம் மதிப்பிலும், ஊராட்சி நிதி திட்டம் மூலம் ரூ.49.94 லட்சம் மதிப்பிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.78.50 லட்சம் மதிப்பிலும் பல்வேறு மக்கள்நலத்திட்டபணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாலகொலா ஊராட்சியில் ஒரே ஆண்டில் சுமார் 6.30 கோடி லட்சம் மதிப்பில் மக்கள் நலப்பணிகள் செய்து சாதனை படைத்து உள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது.
    • ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த ராணுவ முப்படை தளபதி பிபன்ராவ், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் ராணுவ முப்படை தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிர் நீத்த நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது என ராணுவ அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்திய முப்படை ராணுவ தளபதி பிபின்ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.

    அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மீட்புபணியில் ராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது. மேலும் அங்கு ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் ராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்று உள்ளது. இந்த நினைவுச் சின்னம் வருகிற டிசம்பர் 8-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 3-வது வார்டுக்கு உட்பட்ட நவநகர், மூணார்க், ஸ்னோஸ்டவுன் முதல் ஜெம் பார்க் பகுதி வரை, தமிழகஅரசு நகர்ப்புற மேம்பாட்டு சாலை திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை 3-வது வார்டு அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.

    ஊட்டி 3-வது வார்டு பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட துர்கா ஜெயலட்சுமிக்கு பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா ஆய்வு
    • மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் உள்ளிட்டோர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்மன்ற தொகுதிக்குட்பட்ட குந்தா மேற்கு ஒன்றியம் சார்பில் தேர்தல் வாக்குச்சாவடி பூத் கமிட்டி, மகளிரணி இளைஞர்கள்-இளம்பெண் பாசறை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அம்மா பேரவை இணை செயலாளரும், நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான பொன்ராஜா கலந்துக்கொண்டு ஆய்வு நடத்தினார்.

    நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் தேனாடுலட்சுமணன், சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் கண்ணன், சிவக்குமார் மற்றும் குந்தா மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், பூத்கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்ஸஸ் சந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். 

    • ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்ததற்காக விருதுகள் வழங்கி பாராட்டு
    • எம்.கண்ணனுக்கு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக குன்னூரை சேர்ந்த எம்.கண்ணன் ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக குன்னூர் எம்.கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை மேற்கண்ட அமைப்பின் தேசிய தலைவர் மணிமொழியான் செய்து உள்ளார்.

    நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குன்னூர் எம்.கண்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இந்திய மக்கள் மன்றம் மற்றும் தேசிய பாரத் சேவாக் சமாஜ் உள்ளது. இந்த அமைப்புகளின் தென்னிந்திய தமிழக அலுவலகம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு
    • தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஊட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வருகிற 4-ந் தேதி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பும் முகாம் நடக்கிறது.

    இந்த முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்குகின்றனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    எனவே 8-ம்வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் இலவசமாக பங்கேற்று பயன்பெறலாம்.

    மேலும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் சார்பில் இலவச பயிற்சி க்கான பதிவு, மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோ ருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் கடன் குறித்த வழிகாட்டுதல் ஆகிய நிகழ்வுகளும் நடக்க உள்ளன.

    தனியார் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் மேற்கண்ட வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

    மேலும் இந்த முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படுபவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு ஊட்டி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

    • திரளான பக்தர்கள் வழிபாடு
    • பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னுர் தாலுகாவுக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சியில் மகாவிநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இது 33 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும்.மேலூர் விநாயகர் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    இதில் ஊர்தலைவர் அர்ஜீனன், கொத்துகார கௌடர் சிவக்குமார், மேக்குநாடு பார்பத்தி கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, தொழிலதிபர் ராஜேந்திரன், மேக்குநாடு படுகர் நல சங்க தலைவர் தாத்தன், செயலாளர் ராமன், பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை வி.மோகன் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரளாக வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள்
    • ஆயிரக்கணக்கான பக்தா்கள் வேட்டைக்கொரு மகனை வழிபட்டனா்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் புத்தூா்வயல் பகுதியை சேர்ந்த பழங்குடி விவசாயிகள் ஐப்பசி மாதத்தில் விரதம் இருந்து புதிதாக விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்து நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலுக்கு எடுத்து வந்து சுவாமிக்கு படையலிட்டு, பின்னர் அங்கு உள்ள பக்தா்களுக்கு நெற்கதிரை பிரசாதமாக வழங்குவது வழக்கம். அவற்றை வீட்டின் பூஜைஅறையில் வைத்து பாதுகாத்தால் பஞ்சம் வராது, விளைச்சல் பெருகும் என்று ஐதீகம்.

    கூடலூர் நம்பாலக் கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான புத்தரி திருவிழா தொடங்கியது. அப்போது விவசாயிகள் கடும் விரதமிருந்து வயற்காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் அங்கு விளைந்து இருந்த முதல் நெற்பயிரை அறுவடை செய்தனர். தொடர்ந்து பாரம்பரிய இசையுடன் புனித நெற்கட்டு குவியல்கள், ஒற்றப்பாறை பகவதி அம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து விவசாயிகள் நெற்கதிர் கட்டுகளை நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவந்தனர். அங்கு சுவாமிக்கு படையலிட்டு அறுவடை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினா்.

    கூடலூர் பழங்குடி விவசாயிகளின் புத்தரி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தது வேட்டைக்கொரு மகனை வழிபட்டு சென்றனா்.

    • கோத்தகிரி ஜி.டி.ஆர் நடுநிலை பள்ளி செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்
    • பழங்குடியினர் வசிப்பிடங்களில் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேசிய பழங்குடியின தலைவர் ஆனந்த் நாயக் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடம் மற்றும் அவர்களின் கல்வி. வாழ்வியல் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

    ஆனணயத்தின் செயலர் அல்காதிவாரி, இணை செயலாளர் தவுதங், துணை இயக்குநர் தூபே, ஆய்வு அலுவலர் ஆர்.எஸ்.மிஸ்ரா, ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து இந்த குழுவினர் கோத்தகிரியில் உள்ள ஜி.டி.ஆர் நடுநிலை பள்ளி அவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள மாணவர்களையும் நேரில் சந்தித்து, பேசி, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.

    பின்னர் குஞ்சப்பனை கோழிக்கரை பழங்குடியினர் வசிப்பிடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து தமிழக அரசினர் விருந்தினர் மாளிகையில் தேசிய பழங்குடியின ஆனணயத்தின் தலைவர் ஆனந்த் நாயக் தலைமையிலான குழுவினர் பழங்குடியின தலைவர்களிடம் கலந்துரையாடினர். தொடர்ந்து அங்கு நடந்த பழங்குடியினர் கலைநிகழ்ச்சியையும் பார்வையிட்டனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரிய தர்சினி, மாவட்ட ஊராட்சி ஒன்றியதலைவர் பொன் தோஸ், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×