என் மலர்
நீலகிரி
- ஊட்டி நகராட்சியில் 5மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடவில்லை.
- வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விட வலியுறுத்தல்
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரவிக்குமார், கமிஷனர் ஏகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நகரமன்ற உறுப்பினரும், நகர தி.மு.க செயலாளருமான ஜார்ஜ் பேசுகையில் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சியில் 7 வார்டுகளில் மட்டும் ரூ.7 கோடியில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. மற்ற வார்டுகளில் வேலை நடக்கவில்லை. எனவே, அனைத்து வார்டுகளிலும் ஒரே மாதிரியாக வளர்ச்சி பணிகளை பிரித்துக் கொடுத்து பணிகளை மேற்கொளள வேண்டும்.
ஊட்டி நகராட்சியில் 5மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடவில்லை. அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். படகு இல்லம் அருகே சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
- வேளாங்கண்ணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்து முட்புதர்களை அகற்ற வேண்டும்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.
நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகராஜ், துணைத்தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 30 வார்டுகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசியதாவது:-
ஜாகீர்(திமுக): மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி வளர்ச்சி பணிக்காக ஒதுக்கிய நிதி எதுவும் முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ராபர்ட் (திமுக): தற்போது விழாகாலம் துவங்கியுள்ளதால் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட இயலவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.
ராமசாமி(திமுக): மவுண்ட் பிளசன்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
தற்போது இந்த கட்டிங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை திறக்க அனுமதி கொடுத்தது யார்? இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கூட எவ்வித பலனும் இல்லை.
மேலும் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் கேபிள் நிறுவன ங்கள் சாலையில் கேபிள் பதித்தும் கம்பங்கள் நட்டும் வருகின்றன. இவர்கள் முறையாக நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி உள்ளார்களா? என்பதும் தெரியவில்லை.
சரவணகுமார்(அதிமுக): சுகாதார பிரிவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ப்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும். கவுடர் டாக்கீஸ் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். வேளாங்கண்ணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்து முட்புதர்களை அகற்ற வேண்டும்.
மன்சூர்(திமுக):குன்னூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாய் மாக்ஸ் விளக்கு எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதியடைந்து வருகிறார்கள்.
இது மட்டுமல்லாமல் நகர பகுதியில் பல இடங்களில் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை.
இதனை ஆய்வு செய்து அதிக வாட்ஸ் உள்ள எல்.இ.டி பல்புகளை பொருத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் அதிக வாட்ஸ் கொண்ட எல்இடி விளக்குகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதித்தனர்.
- பூஞ்சை படிந்த கேக் விற்றதாக குற்றச்சாட்டு
- 6 வகை திண்பண்டங்கள் ஆய்வுக்காக அனுப்பி வைப்பு
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு பேக்கரியில் கெட்டுப்போன பூஞ்சை படிந்த கேக் விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.
எனவே கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், உணவு பாதுகாப்பு அதிகாரி சிவராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 6 வகை திண்பண்டங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்து உள்ளனர்.
- தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது சம்பவம்
- ஊட்டி மருத்துவ கல்லூரியில் திவிர சிகிச்சை
அருவங்காடு,
குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் காட்டு யானை, காட்டு எருமை, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு பன்றிகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதுடன் அச்சத்திலும் உள்ளனர்.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் காட்டுப்பன்றி பகல் மட்டும் அல்லாமல் இரவு நேரத்திலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்து அங்குள்ள கழிவுகளை ருசி பார்த்து செல்கிறது.
நேற்று இப்பகுதி சேர்ந்த ரமணி (வயது 40) என்ற பெண் இயற்ைக உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது தேயிலைச் செடிகளுக்கு இடையே மறைந்திருந்த காட்டுப்பன்றி திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கி உள்ளது. இதில் அவர் கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டி விட்டு உடனடியாக அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வனவிலங்குகளின் நடமாட்டத்தின் காரணமாக கிராமவாசிகள் தொடர்ந்து அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே வனத்துறையினர் இதனை கண்காணித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 4-ந்தேதி நடக்கிறது
- மாணவர்களிடம் கல்வி நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு வேலைவாய்ப்பு மையம் சார்பில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வருகிற 4-ந்தேதி தனியார் நிறுவ னங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூடத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது:-
ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், அரசினர் வேலை வாய்ப்பு மையம், ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் வருகிற 4-ந்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.
எனவே நீலகிரி கல்லூரிகளில் படித்து முடித்த மாணவ-மாணவிகள் மேற்கண்ட முகாமில் பங்கேற்க ஏதுவாக அந்தந்த கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் இளைஞர்களுக்கு போக்குவரத்து நிர்வாகம் போதிய பஸ் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மேற்கண்ட முகாம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
அங்கு குடிநீர் வசதி மற்றும் துப்புரவு பணிகளில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஊட்டி தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மண்டல வேலைவாய்ப்பு மைய இணை இயக்குநர் ஜோதி மணி, உதவி இயக்குநர் சாகுல்ஹமீது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சண்முகசிவா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நீலகிரி மாவட்ட தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது
- பொதுமக்களிடம் துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது
ஊட்டி,
தேசிய நுகர்வோர் மற்றும் உரிமை இயக்கம் மற்றும் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு சார்பில் லஞ்சம் ஊழல் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம், நீலகிரி மாவட்ட தலைவர் ஜாம்பவான் ஜெரால்ட் தலைமையில் நடந்தது.
பின்னர் ஊட்டியில் வசிக்கும் பொதுமக்களிடம் லஞ்சம்-ஊழல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்கள் வினியோகிக்கப்பட்டன.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜான்சிராணி, மாநில ஆலோசகர் நிக்கோலஸ் ஏசுராஜ், லஞ்ச ஒழிப்புக்குழு தலைவர் அசோக், மகளிரணி தலைவர் ஜெனிதாசிங், செயலாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜன்னலை உடைத்து துதிக்கையை நுழைத்து அரிசி மூடைகளை தேடுகிறது
- ரேஷன் கடையை உடைத்து பொருட்களை சூறையாடி அட்டகாசம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர், சேரம்பாடி ஆகிய பகுதிகளில் கட்டைக்கொம்பன் என்ற ஒற்றை காட்டுயானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இதனை தடுத்து நிறுத்தும் வகையில் வனத்துறை ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் அது வனஊழியர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு நைசாக ஊருக்குள் புகுந்து விடுகிறது.
இந்த நிலையில் அந்த காட்டு யானை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பந்தலூர் அடுத்த ஏலமன்னா பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து அங்கு இருந்த பொருட்களை சூறையாடியது.
இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் சம்பவ பகுதிக்கு திரண்டு வந்தனர். அப்போது ஒரு காட்டு யானை அரிசி மூட்டையுடன் காட்டுக்குள் செல்வது தெரிய வந்தது.
தொடர்ந்து ஏலமன்னா பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதே காட்டு யானை சேரங்காடு குடியிருப்பு பகுதிக்கு வந்தது. தொடர்ந்து அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் சத்துணவு கூடத்தை சூறையாடியது.
பின்னர் அங்கிருந்த ஒரு அரிசி மூட்டையை மட்டும் தூக்கி கொண்டு காட்டுக்குள் சென்று விட்டது. எனவே பள்ளி நிர்வாகம் மற்றும் சத்துணவு ஊழியர்கள் அங்கு இருந்த அரிசி மூட்டைகளை பத்திரமாக வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர்.
இந்த நிலையில் அதே காட்டு யானை மீண்டும் சேரங்காடு சத்துணவு கூடத்துக்கு வந்தது. பின்னர் அந்த அறையின் ஜன்னலை உடைத்து துதிக்கையை விட்டு அரிசி இருக்கிறதா என தேடி பார்த்தது.
அங்கு எதுவும் கிடைக்காததால் கட்டிடத்தின் அருகிலேயே வெகுநேரமாக காத்திருந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். யானை காட்டுக்குள் சென்ற பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தொடர்ந்து இந்த யானை ஊருக்குள் வந்து அட்டாகசத்தில் ஈடுபட்டு வருவதால் இதனை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில மாதங்களாக இது தொடர்கதையாக நடந்து வருகிறது.
- நோய் தொற்று பரவும் அபாயம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி 20-வது வார்டில் மெரிலஸ் அப்பர் பஜார் என்ற பகுதி உள்ளது.
இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கான அங்கு ஒரு சாலையிலும் உள்ளது.
அந்த சாலையை பயன்படுத்தி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கழிவு நீர் செல்ல முடியாமல் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. கடந்த சில மாதங்களாக இது தொடர்கதையாக நடந்து வருகிறது.
சாலையில் கழிவு நீர் வழிந்தோடுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைகின்றனர். சாலையில் நடந்து செல்ல முடியாமலும் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் அந்த வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலையே காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்து ள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, குடியிருப்பு நிறைந்த பகுதியில் சாலையில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி துர்நாற்றம் வீசுவதுடன், நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கயைாக உள்ளது.
- வாயில் வைத்த சில நொடிகளிலேயே குழந்தைகளுக்கு ஒரு மாதிரி இருந்ததால் உடனடியாக கேக்கை வெளியில் துப்பி விட்டனர்.
- உணவு பாதுகாப்புத்துறையினர் கோத்தகிரி பகுதியில் உள்ள டீக்கடைகள், உணவகங்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால், தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கோத்தகிரி வெஸ்ட்புரூக் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் சம்பவத்தன்று தனது குழந்தைகளுடன் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்தார்.
பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரது குழந்தைகள் சாப்பிடுவதற்கு கேக் கேட்டனர்.
இதையடுத்து முனியம்மாள், கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரிக்கு சென்று கேக் வாங்கினார்.
பின்னர் கேக்கை வாங்கி கொண்டு தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்றார்.
வீட்டிற்கு சென்றதும், வாங்கி வந்த பார்சலை பிரித்து குழந்தைகளுக்கு கேக்கை ஊட்டினார். குழந்தைகளும் கேக்கை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.
வாயில் வைத்த சில நொடிகளிலேயே குழந்தைகளுக்கு ஒரு மாதிரி இருந்ததால் உடனடியாக கேக்கை வெளியில் துப்பி விட்டனர்.
இதையடுத்து முனியம்மாள் தான் வாங்கி வந்த கேக்கை எடுத்து பார்த்தார். அப்போது, கேக்கின் அடிபாகத்தில் பாசி பிடித்து படர்ந்து போய் இருந்தது.
மேலும் அதில், இருந்து துர்நாற்றம் வந்ததுடன், புழுக்களும் அதிகளவில் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் அந்த கேக்கை எடுத்து கொண்டு தனது உறவினர்களுடன், கேக் வாங்கிய பேக்கரிக்கு சென்றார்.
அங்கு சென்று கடை உரிமையாளரிடம் கேக்கை காண்பித்து இதில் புழுக்களாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. இதை ஏன் விற்பனை செய்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அவர், இதை கொடுத்து விட்டு புதிதாக கேக்கை வாங்கி செல்லுங்கள் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியான உறவினர்கள் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை யாரும் வரவில்லை.
பல இடங்களில் இதுபோன்ற பழைய பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உணவு பாதுகாப்புத்துறையினர் கோத்தகிரி பகுதியில் உள்ள டீக்கடைகள், உணவகங்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவிகள் உள்பட 13200 பேர் பங்கேற்றனர்
- ஒரு நூல், நல்ல நண்பனுக்கு சமம் என கலெக்டர் பேசினார்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது.
இந்தநிலையில் நீலகிரி புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். நகைச்சுவை இமயம் சண்முகவடிவேல் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து நீலகிரியை சேர்ந்த இலக்கிய சொற்பொ ழிவாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் 16 பேருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலெக்டர் அருணா பேசியதாவது:-
ஊட்டி என்பது இயற்கை எழிலுக்கு மட்டும் உரியது அல்ல. படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், பண்பாள ர்களுக்கும் உரித்தான பூமி. நாம் எத்தனை புத்தகங்கள் வாசிக்கிறோம் என்பதை பொருத்துதான் நம்முடைய அறிவு விசாலப்படும்.மேலும் வாசிப்பு பழக்கம் பொறுமையை போதிக்கும். கற்பனை ஆற்றலை பெருக்கும். படைப்பாற்றலை உருவாக்கும். மனி தனை மேன்மக்களாக்கும். எனவே அனுதினமும் வாசிப்போம்.
ஒரு நல்ல நூல், ஒரு நல்ல நண்பனுக்கு சமம். ஒருசில நேரங்களில் நண்பர்கள் கூட பகைவராக மாறலாம். ஆனால் புத்தகம் ஒருபோதும் பகைமை கொள்ளாது.
மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் என்கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.
இந்த புத்தக திருவிழா மாணவர்களுக்கு பள்ளி-கல்லூரி ஆண்டு விழாபோல மகிழ்ச்சி, குதூகலத்தை அள்ளி தந்து உள்ளது. இனிவரும் ஆண்டுகளிலும் நீலகிரி புத்தகத்திருவிழா பொதுமக்களின் ஆதரவுடன் சீரும் சிறப்பு மாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஊட்டி சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னூர் புனித அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ-மாணவிகள் பங்கேற்ற வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கரகாட்டம், சமூக நாடகம் உள்ளிட்ட கலைநி கழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டுகளித்தனர்.நீலகிரி 10 நாள் புத்தக திருவிழாவில் ஒட்டு மொத்தமாக 13200 பேர் பார்வையாளராக கலந்து கொண்டனர். இவர்களில் 6275 பேர் மாணவ-மாண விகள்.அவர்கள் ரூ.9.06 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி புத்தக திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு சுந்தரவடிவேல், மாவ ட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ்,ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ்,உதவி இயக்குநர்கள் இப்ராகிம்ஷா (பேரூரா ட்சிகள்), சாம்சாந்த குமார் (ஊராட்சிகள்), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன், மாவட்ட நூலக அதிகாரி வசந்தமல்லிகா, ஊட்டி தாசில்தார் சரவண குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அன்னையின் திருஉருவச்சிலையை ஊா்வலமாக எடுத்து வந்தனர்
- ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஊட்டி,
கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் அக்டோபா் மாதத்தில் ஜெபமாலை அன்னை திருவிழாவை கொண்டாடி வருகின்றனா்.அதன்படி ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த திருஇருதய ஆண்டவா் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.பங்குத்தந்தை ரவிலாரன்ஸ், உதவி பங்குத் தந்தை ஜுட்ஒன்க்ங் ஆகியோா் தலைமையில் தினமும் ஜெபமாலை ஜெபித்து வழிபாடு நடந்து வருகிறது.விழாவின் இறுதி நாளான நேற்று வாழும் ஜெபமாலை குழுவினா் சாா்பில் திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக வாழும் ஜெபமாலை குழுத்தலைவா் சாா்லஸ் தலைமையில் நிர்வாகிகள் அன்னையின் திருஉருவச் சிலையை ஊா்வலமாக எடுத்து வந்து பலிபீடத்தில் வைத்தனர். அங்கு திருப்பலி நடத்தப்பட்டது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னையின் ஊா்வலம் நடந்தது. இது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தோ் பவனியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
- மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா பங்கேற்றார்.
- மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆய்வு நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, இளைஞரணி இணை செயலாளர் பாலநந்தக்குமார்,சார்பு அணியின் மாவட்ட கழக செயலாளர்கள் ரஜினி(எ) சிவக்குமார், குருமூர்த்தி, சாந்தா, குன்னூர் நகர செயலாளர் சரவணக்குமார்,மாவட்ட துணை செயலாளர் உஷா, அம்மா பேரவை மாவட்ட துணைசெயலாளர் கோபால்,ஒன்றிய செயலாளர் சக்கத்தா சுரேஷ், பேரூராட்சி செயலாளர் போளன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக குன்னூர் ஒன்றிய செயலாளர் பேரட்டி ராஜூ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.






