என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
    • ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கல்லட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.

    ஊராட்சி தலைவர் டி.டி. சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சதிஷ் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கிராமசபை கூட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆன்லைனில் வரி செலுத்துவது, துாய்மை பாரத இயக்கம், தேசிய வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஊட்டியில் நடைபெறும் மெகா வேலைவாயப்பு முகாமில் உல்லத்தி ஊராட்சியில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் கல்லட்டி சதுக்கம்- சோலடா இடையே ஆத்திக்கல் சாலை வரை நெடுஞ்சாலை பாராமரிப்பு பணிக்க ஒப்படைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பொதுமக்கள் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நீட் விலக்கை வலியுறுத்தி தி.மு.க.வினர் கையெழுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன்ஒருபகுதியாக தூதூர்மட்டம் கிராமத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு.பத்மநாபன் தலைமையில், மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    அப்போது பொதுமக்கள் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மயில்வாகனன், முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் ஹரி, ராமகிருஷ்ணன்,ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அப்துல்அசிக், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சையதுமன்சூர்,நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம்ராஜா, குன்னூர் நகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வனப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் ஆதிவாசிகள்-பொதுமக்கள் இடையே பிரித்தாளும் வேலையை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
    • இனிமேல் வனத்துறை உயரதிகாரிகள் வராமல் கிராமசபை நடத்தினால் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாவநல்லா பகுதியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் மாதேவி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் கிரண் வரவேற்றார்.

    துணைத்தலைவர் ராஜேஷ், மசினகுடி ரேஞ்சர் பாலாஜி, சீகூர் ரேஞ்சர் தயானந்தன், வனவர்கள் பரமசிவம், ஸ்ரீராம் மற்றும் போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய அரசுக்கு வலியுறுத்துவது, வாழைதோட்டம் பகுதி மக்களின் ஜீவதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் பேசும்போது வனத்துறைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதுகுறித்து அவர்கள் பேசியதாவது:-

    100 நாள் வேலை திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு 10 நாட்கள் மட்டுமே வேலைகிடைக்கிறது. மேலும் வருவாய்துறைக்கு சொந்தமான இடங்களை வனத்துறைக்கு வழங்க கூடாது.

    வனத்துறை அதிகாரிகள் புதிய வீடுகள் கட்டவும், உள்ளூர் மக்களின் வாகன போக்குவரத்துக்கும் தடை விதித்து வருகின்றனர். வளர்ச்சி பணிகளுக்கு கூட முட்டுக்கட்டை போடப்படுகிறது.

    வனப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் ஆதிவாசிகள்-பொதுமக்கள் இடையே பிரித்தாளும் வேலையை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

    மேலும் வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் யாருமே கிராம சபை கூட்டங்களுக்கு வருவ தில்லை. அவர்கள் வந்தால்தானே எங்கள் வாழ்க்கை பிரச்சனைக்கு வழி சொல்லமுடியம். இனிமேல் வனத்துறை உயரதிகாரிகள் வராமல் கிராமசபை நடத்தினால் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என அண்ணாமலை அறிவித்தார்.
    • முக்கிய நிர்வாகிகளை கைது செய்து அங்கு உள்ள திருமண மண்படத்தில் அடைத்து வைத்தனர்.

    ஊட்டி,

    சென்னை பனையூரில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த பா.ஜ.க கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.

    எனவே தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் கொடிகம்பங்கள் நட்டு கட்சிக்கொடியேற்றி வருகிறார்கள். அந்த வகையில் நீலகிரி. மாவட்டத்திலும் பா.ஜ.க சார்பில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொடியேற்றும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்காக அந்த பகுதியில் பாஜக.மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டிருந்தனர். அங்கு அவர்கள் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    ஆனாலும் பா.ஜ.கவினர் தொடர்ந்து கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். எனவே அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். எனவே போலீசார் அனுமதியின்றி கொடிக்கம்பம் நட முயன்ற தாக பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்து அங்கு உள்ள திருமண மண்படத்தில் அடைத்து வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குறிப்பாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து உள்ளன.
    • தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த தானியங்கி எந்திரம், குவிலென்ஸ் ஆகியவை சேதம் அடைந்து உள்ளன.

    அருவங்காடு,

    நீலகிரியில் எண்ணற்ற சுற்றுலாதலங்கள் உள்ளதால் மாநிலம் முழுவதிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் அதிகளவில் வந்து செல்கின்றனர். அப்போது மலை மாவட்டத்தின் போக்குவரத்து விதிகள் குறித்து அறியாமல் ஒருசில வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.

    அதிலும் குறிப்பாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து உள்ளன. இதில் 9 பேர் பலியாகினர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    நீலகிரி மலைப்பாதைகளில் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் இன்றுவரை நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அபாயகரமான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் சிலவை தற்போது மாயமாகி விட்டது. மேலும் அந்த வழித்தடத்தில் உள்ள 14 கொண்டை ஊசிவளைவுகளில் குவிலென்சுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இது அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகளுக்கு உதவியாக இருந்து வந்தது.

    மேலும் காட்டேரி, கல்லாறு ஆகிய பகுதியில் உள்ள அபாயகரமான வளைவுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

    ஆனால் அங்கு தற்போது எச்சரிக்கை பலகை மட்டுமின்றி நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த தானியங்கி எந்திரம், குவிலென்ஸ் ஆகியவை சேதம் அடைந்து உள்ளன.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் எவ்வித கட்டுப்பாடு இன்றி அதிவேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே அங்கு விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன.

    இதற்கிடையே நீலகிரி மலைப்பாதையில் வாகன விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் குன்னூர் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    இதுகுறித்து நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா கூறியதாவது:-

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில நாட்களாக விபத்துக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து அபாயகரமான பகுதிகளில் உள்ள சேதம் அடைந்த எச்சரிக்கை பலகைகள் சீரமைக்கப்படும். மேலும் அந்த பகுதிகளில் புதிய குவிலென்ஸ்கள் பொருத்தப்படும்.

    இதுதவிர மண் சரிவு, நிலச்சரிவு உள்ளிட்ட அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து அந்த இடத்தில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்த தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி வைத்து தேவையான நிதியை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 35 தூய்மை காவலா்களுக்கு பரிசுகளை வழங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட கூா்மயாபுரம் சமுதாய கூடத்தில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் அருணா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

    கிராமசபை கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகளிா் சுயஉதவிக்குழு உருவாக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அருணா கூட்டத்தில் பேசியதாவது:-

    பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு அவசியம் இருக்க வேண்டும். அதற்காக சுகாதாரதுறை மூலம் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் பெண்கள் தயக்கமின்றி பங்கேற்று பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும்.

    மேல்குந்தா கிராம ஊராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இவை அனைத்தும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 10 பேருக்கு தலா ரூ.1000 மதிப்பில் மருத்துவ பெட்டகம், 5 பேருக்கு தலா ரூ.2000 மதிப்பில் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

    தொடர்ந்து 35 தூய்மை காவலா்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன் (எ) மாதன், தோட்டக்கலை இணைஇயக்குநா் ஷிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் வாஞ்சி நாதன், ஊட்டி கோட்டாட்சியா் மகராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • பொதுஇடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலை மற்றும் பொது இடங்களில் சுகாதார பாதிப்பு ஏற்படும் வகையில் எச்சில் துப்புகின்றனர்.

    மேலும் அசுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அப்போது நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகராஜ் கலந்து கொண்டு, பொதுஇடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியை ஜாக்குலின் மார்டின், உதவி பேராசியைகள் கோமதி, சசிரேகா மற்றும் மாணவிகள் செய்து இருந்தனர்.

    • தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே எஸ்டேட் உரிமையாளர் தெரிந்து கொண்டார்.
    • மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.

    கோத்தகிரி:

    தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தொகையை போனசாக வழங்குவது வழக்கம்.

    சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தங்க ஆபரணங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களையும் வழங்கி வருகிறார்கள்.

    அந்த வகையில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக புல்லட் மோட்டார் சைக்கிளை வழங்கி அசத்தியுள்ளார் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தேயிலை எஸ்டேட் உரிமையாளர்.

    கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அந்த பகுதியில் சிவகாமி தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி விவசாயம், காளான் உற்பத்தி என பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.

    இவரது இந்த நிறுவனங்களில், 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை சமயங்களில் தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுத்து அசத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தனது எஸ்டேட்டில் 5 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்கள் 15 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு விலையுயர்ந்த புல்லட், மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

    ஊழியர்களை திடீரென அழைத்த, எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார், உங்களுக்கான தீபாவளி பரிசு என சாவிகளை வழங்கியபோது, ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    உரிமையாளர் சிவக்குமார், தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்டனர்.

    அதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு ஹிமாலயன், தலா ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள 4 ராயல் என்பீல்டு கிளாஸிக், தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 ராயல் என்பீல்டு ஹன்ட்டர், தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் யமகா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை முன்பதிவு செய்து, தனது நிறுவனத்திற்கு வரவழைத்தார்.

    பின்னர் 15 ஊழியர்களையும் அழைத்து, தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களித்த உங்களுக்கு எனது தீபாவளி பரிசு என கூறி ஒவ்வொருவரிடமும் சாவியை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்தார்.

    இதுதவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.

    இதுகுறித்து எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் கூறியதாவது:-

    எங்கள் எஸ்டேட் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஊழியர்களின் கடின உழைப்பும் பங்கும் உள்ளது.

    ஊழியர்களை கவுரவித்து ஊக்கமளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் மகிழும் வகையில் போனஸ் வழங்குகிறேன். இந்த ஆண்டு 15 ஊழியர்களை தேர்வு செய்து புல்லட் வழங்கியுள்ளேன். வரும் ஆண்டுகளிலும் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் பரிசுகளை வழங்குவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    எஸ்டேட் உரிமையாளர் தனது ஊழியர்கள் 15 பேருக்கு புல்லட் மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் தி.மு.க. கவுன்சிலர் முஸ்தபா ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • அண்ணாமலை தவறான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், தவறான தகவலை பரப்பி வருவதாகவும் கூறி கவுன்சிலர் முஸ்தபா ஊட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கடைகள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதனை இடித்து விட்டு புதிதாக கடைகள் கட்டும் பணியை, நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக முதல்கட்டமாக ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி நடந்த ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் மார்க்கெட் கடைகள் கட்டுவது தொடர்பாக நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் தி.மு.க. கவுன்சிலர் முஸ்தபா ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் ரூ.36 கோடி பெற்றதாக தி.மு.க கவுன்சிலர் முஸ்தபா நகராட்சி கூட்டத்தில் பேசியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை தவறான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், தவறான தகவலை பரப்பி வருவதாகவும் கூறி கவுன்சிலர் முஸ்தபா ஊட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து தி.மு.க கவுன்சிலர் முஸ்தபா கூறியதாவது:-

    நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டுவது தொடர்பாக மட்டுமே பேசினேன். வேறு எதை பற்றியும் பேசவில்லை.

    ஆனால் நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார் ரூ.36 கோடி பெற்றதாக நான் பேசியதாக தவறான தகவலை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் அருகே சாலையோரம் நின்றிருந்த காய்ந்த மரம் ஒன்று முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.
    • குன்னூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து வருகிறது. இதனை தீயணைப்பு துறையினர் சீரமைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்றும் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் அருகே சாலையோரம் நின்றிருந்த காய்ந்த மரம் ஒன்று முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் ஜே.சி.பி. உதவியுடன் மரக்கிளைகளை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

    மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைப்பாதையில் உள்ள மண் திட்டுக்கள் மற்றும் அபாயகரமாக உள்ள மரங்கள் எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    அத்துடன் வாகனங்களை மலைப்பாதையில் கவனமாக இயக்கி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    குன்னூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    கோவை மாவட்டத்திலும் மழை பெய்தது. மாநகர் பகுதிகளில் இரவில் கனமழை கொட்டியது. திடீர் மழையால் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற பலரும் மழையில் நனைந்த படியே சென்றனர்.

    சிலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    திடீர் மழையால் சாலைகளில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    இந்த மழையால் கோவையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

    • அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா
    • எம்.ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    ஊட்டி,

    ஊட்டி ஏ.டி.சி சதுக்கத்தில் அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடந்தது.

    அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தேனாடுலட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க தலைமை நிர்வாகி எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்துக்கொண்டு பேசினார். தொடர்ந்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் அக்கிம்பாபு, எப்பநாடு கண்ணன் மீனவர் அணி மாவட்ட. செயலாளர் விசாந்த்,ஒன்றிய செயலாளர் கடநாடு ப.குமார், பேரூராட்சி செயலாளர்கள் கண்ணபிரான், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கோத்தகிரி வடிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் லயோலா குமார், அன்புச்செல்வன், சகுந்தலா, தனலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக எம்.ஜிஆர் படத்திற்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • புதிய வாக்காளர் சேர்ப்பு குறித்து ஆலோசனை
    • பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாமில் செயல்படுவது குறித்து முடிவு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் தி.மு.க சார்பில் பாகநிலை முகவர்கள் கூட்டம் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் செய்ய வருகிற 4, 5, 18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இதற்காக பாகநிலை முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் வாக்காளர் பட்டியல் அளிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அவர்கான், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, தலைமை கழக பொதுகுழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், குன்னூர் நகரமன்ற தலைவர் சீலா கேத்தரின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், வினோத்குமார் மற்றும் பாகநிலை முகவர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    ×