என் மலர்
நீலகிரி
ஊட்டி நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து குப்பைகளை வீடு, வீடாக சென்று சேகரிப்பது, நகர் பகுதிகளை சுத்தமாக வைப்பது போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா ஏற்படுவதை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஊட்டி அப்பர் பஜாரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. சுகாதார குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். முதலில் வெளிநோயாளிகள் சீட்டு வழங்கப்பட்டு உயரம், எடை சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா? என்று பரிசோதிக்கப்பட்டது. ஸ்கேன் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் தூய்மை பணியாளர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 250 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர்.
இதைத்தொடர்ந்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 கிழமைகளில் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி
விற்பனை எண் 45-க்கான ஏலம் கடந்த 5, 6-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 19 லட்சத்து 15 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 14 லட்சத்து 51 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 64 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 12 லட்சத்து 81 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது 68 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.19 கோடியே 15 லட்சம் ஆகும். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.2 விலை வீழ்ச்சி ஏற்பட்டது. சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.301, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.247 என இருந்தது.
சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.110 முதல் ரூ.119 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.200 வரையும், டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.136 முதல் ரூ.139 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.180 முதல் ரூ.225 வரையும் இருந்தது.
வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அடுத்து வரும் 12, 13-ந் தேதிகளில் ஏலம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விற்பனை எண் 46-க்கான ஏலம் 19, 20-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த 9 காட்டு யானை கூட்டம் அங்கிருந்த மின்சாதனப் பொருட்களை அடித்து நொறுக்கியது.
பின்னர் அருகில் உள்ள நூலகம் மற்றும் நடு நிலைப்பள்ளி கதவுகளை சூறையாடியது. குட்டியுடன் 9 காட்டுயானைகள் இந்த பகுதியில் சுற்றித்திரிவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று மசின குடிக்கு பயணிகளுடன் வந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோன்று வால்பாறை வனப்பகுதியில் இருந்து 20 யானைகள் தோனிமுடி எஸ்டேட்டுக்குள் புகுந்தன. அதில் இருந்த சில யானைகள் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பொருட்களை வைக்கும் அறையை நொறுக்கியது. இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுயானை கூட்டத்தை விரட்டினர். ஆனால் யானைகள் கெஜமுடி மற்றும் தாய்முடி எஸ்டேட்டுகளுக்குள் நுழைந்தன. அங்கிருந்த மகளிர் சுயஉதவிக்குழு ரேசன் கடையை உடைத்து அங்கிருந்த ரேசன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது. பின்னர் வனப்பகுதிக்குள் யானை கூட்டம் செல்லாமல் குட்டியுடன் தாய்முடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் தேயிலை பறிக்க தொழிலாளர்களுக்கு வனத்துறை அனுமதி அளிக்கவில்லை.
பொதுமக்கள் தனியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை கூட்டம் பல்வேறு எஸ்டேட்டுகளுக்குள் புகுந்துள்ளன. ஒரு இடத்தில் விரட்டினால் வேறு எஸ்டேட்டுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டு வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் வனத்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர். யானைகள் கூட்டம் கூட்டமாக எஸ்டேட்டுகளில் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 900 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 6 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 283 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சேலாஸ் பகுதியில் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதைச்சுற்றி உள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனவர்கள் சபரிசன், ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி இறந்தது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலியின் உடற்கூறுகள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கீழ் கக்காச்சியை சேர்ந்த முருகன் (வயது 38), கிளிஞ்சாடாவை சேர்ந்த செல்வன் (40) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக வனப்பகுதிகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்களில் சுருக்கு கம்பி வைத்து காட்டுப்பன்றி, மான், முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.
மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக தேயிலை தோட்டம் பகுதியில் சுருக்கு கம்பி வைத்ததும் இதில் சிறுத்தைப்புலி சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனை 2 பேரும் ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். வனவிலங்குகளை வேட்டையாடினால் வன பாதுகாப்பு சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குன்னூர் கடமானை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க சுருக்கு கம்பி வைப்பது, மின் வேலி அமைப்பது போன்றவற்றை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






