என் மலர்tooltip icon

    நீலகிரி

    கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறைகளை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு மலைப்பாதை செல்கிறது. இதில் கூடலூரில் இருந்து நடுவட்டம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூர சாலையோரத்தில் பல இடங்களில் ராட்சத பாறைகள் உள்ளன. ஆண்டுதோறும் பருவமழை பெய்யும்போது பாறைகள் சரிந்து சாலையில் விழுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் சீசன் காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.

    இதைத்தொடர்ந்து அகலம் குறைவான இடங்களில் அந்த சாலையை அகலப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் 27-வது மைல், தவளமலை, நடுவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் உள்ள ராட்சத பாறைகளை உடைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் கடந்த சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:-

    மலைப்பாதையில் சில இடங்களில் வாகனங்கள் செல்ல சிரமப்படும் வகையில் பாறைகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் சாலை விரிவாக்கம் மற்றும் பாறைகளை உடைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மழை குறைந்து உள்ளது. இதனால் பாறைகளை உடைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவது இல்லை.

    மாறாக பாறைகளில் துளைகள் இட்டு அதில் கெமிக்கல் கலவைகள் ஊற்றப்படுகிறது. இதன் மூலம் பாறை வலுவிழந்து விடுகிறது. அதன் பின்னர் சிறிது, சிறிதாக உடைத்து அகற்றும் பணி நடக்கிறது. இதனால் வரும் காலங்களில் பாறை உடைத்த இடங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் ஆனதால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கோத்தகிரி:

    காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் ஆனதால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் பகுதியை சேர்ந்த சிவா. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 26). இவர் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கேரளாவை சேர்ந்த தனது உறவு பெண் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் செல்போன் மூலம் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சந்தோசின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அவருடைய காதலி, தனக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் நடந்ததாக கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்களிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.

    பின்னர் வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் எலி மருந்தை (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகவில்லை.

    இதையடுத்து அவர் கோத்தகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோத்தகிரியில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் ஆனதால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கூடலூர் அருகே ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை கணக்கெடுக்க வனத்துறை ஊழியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லையோர வனத்தில் கூடலூர் வனக்கோட்டம் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது.

    குறிப்பாக ஒவ்வொரு காலநிலைகளுக்கு ஏற்ப காட்டுயானைகள் உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இடம் பெயர்ந்து செல்கிறது. அப்போது ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும் மனித-காட்டுயானை மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கூடலூர் வனக்கோட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 8 பேர் காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மனித-காட்டுயானை மோதலை தடுப்பதற்கான ஆய்வுக்கூட்டம், நாடுகாணி தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. கூடலூர் கோட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமை தாங்கினார். வனச்சரகர்கள் ராமகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கூடலூர் வனக்கோட்ட அலுவலர் சுமேஷ் சோமன் பேசியபோது கூறியதாவது:-

    கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் எவ்வளவு காட்டுயானைகள் உள்ளது என கணக்கெடுக்க வேண்டும். பின்னர் வெளியிடங்களில் இருந்து எத்தனை யானைகள் வருகிறது என வன ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும். கேரளாவில் இருந்து வரும் யானைகளை அடையாளம் காண வேண்டும். இதேபோல் பலாப்பழம் உள்ளிட்ட சீசன் காலங்களில் ஊருக்குள் வரும் யானைகளை கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு வன ஊழியர்கள் விவரங்களை சேகரித்த பின்னர் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. வன ஊழியர்களுக்கு கேமரா உள்பட பல்வேறு சாதனங்கள் வழங்கப்படும். காட்டு யானைகளை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்க வேண்டும்.

    தொடர்ந்து 21-ந் தேதி களப்பணியில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் வன ஊழியர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
    நீலகிரி மாவட்டம் குன்னூரில் மோட்டார் சைக்கிளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வந்தது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் சமீபத்தில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியை சேர்ந்த குலாப் ஜான் என்பவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வெலிங்டனை சேர்ந்த ஜாபர்(வயது 27), குன்னூரை சேர்ந்த ரபீக் முகமது(36), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர்(30) ஆகிய 3 பேரும் சேர்ந்து குலாப் ஜானின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. மேலும் சில இடங்களில் அவர்கள் கைவரிசை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    குன்னூரில் டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னூர்:

    இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக டேன்டீ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் தொடங்கப்பட்டது. இது நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. தற்போது தேயிலை தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இதற்கிடையில் ஆண்டுதோறும் டேன்டீயில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற்றுவிட்டு, 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கக்கோரி குன்னூரில் செயல்படும் டேன்டீ தலைமை அலுவலகத்தை நேற்று தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். முன்னதாக அவர்கள் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் வழங்குவது போல 20 சதவீத போனஸ் கேட்டு போராடுகிறோம். ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளோம். எனவே கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றனர்.
    விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10½ லட்சம் ஊக்கத்தொகையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
    ஊட்டி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2018-19-ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் விளையாட்டு போட்டிகள் குஜராத், மணிப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி 3 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி வீரர், வீராங்கனைகள் 6 பேருக்கு ரூ.10.50 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார். 19 வயதுக்கு உட்பட்ட தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற குன்னூர் புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் விவின் ரிச்சர்டுக்கு ரூ.2 லட்சம், 17 வயதுக்கு உட்பட்ட(32-35 கிலோ எடை பிரிவு) டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோத்தகிரி விஷ்வ சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிமிஷா ரூ.1.50 லட்சம், 49-52 கிலோ எடை பிரிவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோத்தகிரி விஷ்வ சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அருளரசிக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    மேலும் 14 வயதுக்கு உட்பட்ட(18-21 கிலோ எடை பிரிவு) டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற அதே பள்ளியை சேர்ந்த மாணவர் பிரித்திவிராஜிக்கு ரூ.2 லட்சம், 22-24 கிலோ எடை பிரிவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற மேற்கண்ட பள்ளி மாணவி சந்தியாவுக்கு ரூ.2 லட்சம், 35-38 கிலோ எடை பிரிவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவி பவதாரணிக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை என 6 பேருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அவர்கள் மேலும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியை தேடித்தர பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாய்ராம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ஊட்டி, கூடலூரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் குளிரில் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை பருவமழை பெய்ததால் ஜனவரி மாதம் உறை பனி கொட்டியது.

    இந்த நிலையில் ஊட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு கடுங்குளிர் நிலவியது. நேற்று அதிகாலையில் உறை பனிப்பொழிவு தொடங்கியது. கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானம், எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம், பிங்கர்போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் உறை பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது. காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் புல்வெளிகளில் உறை பனி படர்ந்து இருந்ததை கண்டு ரசித்தனர். அவர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். கடுங்குளிரை போக்க கூலித்தொழிலாளர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    வழக்கமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டியில் பனிக்காலத்தை அனுபவிக்க வருகை தருவார்கள். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அவர்கள் வரவில்லை. உறை பனி தொடங்கி உள்ளதால் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் லாரிகள், வாகனங்களில் பேட்டரி மூலம் என்ஜினை சூடேற்றி இயக்கும் வாகனங்களை தவிர மற்ற டீசல் வாகனங்களின் என்ஜின் மீது சுடுதண்ணீர் ஊற்றி இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதிகாலை நேரங்களில் பச்சை பசேலென காணப்படும் புல்வெளிகள் வெள்ளை நிறத்திலும், காய்கறி பயிர்கள் மீது உறை பனி படர்ந்தும் வருகிறது.

    உறைபனி தாக்கம் காரணமாக வீடுகளில் சமையல் செய்வதற்கு தண்ணீர் சூடாக நீண்ட நேரம் பிடிக்கிறது. சூடு செய்யப்படாத நீரில் கைகளை கழுவினால் குளிரினால் கைகள் விரைத்து போகிறது. இதனால் பொதுமக்கள் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். காய்கறி பயிர்கள் கருகாமல் பாதுகாக்க காலையில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாநிலங்களின் குளிர்பிரதேசம் என்று அழைக்கப்படும் ஊட்டியில் பனிக்காலத்தால் வட மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதேபோன்று கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்வது வழக்கம். நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யவில்லை.

    இதனால் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கிறது. மேலும் பகலில் நன்கு வெயிலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளதால், உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பணிபுரியும் காவலாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் மாலை நேரம் தொடங்கியதும் கம்பளி ஆடைகளை அணிந்து வெளியே வருகின்றனர். நடுவட்டம், டி.ஆர். பஜார், அனுமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உறை பனிப்பொழிவு அதிகளவு காணப்படுகிறது.

    இதனால் டி.ஆர்.பஜார் ஏரியில் காலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காட்சி அளிக்கிறது. மேலும் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் முழுவதுமாக பனி படிந்து காணப்படுகிறது.
    சீகூர் வனத்தில் குட்டி யானை சேற்றில் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    முதுமலை புலிகள் காப்பக உள்வட்டத்தில் கார்குடி, தெப்பக்காடு, வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட வனச்சரகங்களும், வெளி மண்டல பகுதியில் மசினகுடி, சிங்காரா, சீகூர் உள்ளிட்ட வனச்சரகங்களும் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், செந்நாய்கள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் புலிகள் காப்பக வனத்துறையினர் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தினமும் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சீகூர் வனச்சரக பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மாலை 5 மணிக்கு ஆனைக்கட்டி என்ற இடத்தில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் மாலை நேரம் ஆகிவிட்டதால் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை. இதனால் வன ஊழியர்கள் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நேற்று புலிகள் காப்பக துணை இயக்குனர் (வெளி மண்டலம்) ஸ்ரீகாந்த், வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று குட்டி யானையின் உடலை பார்வையிட்டனர். அப்போது சேற்றில் நடக்க முடியாமல் குட்டி யானை வழுக்கி விழுந்து அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பிறந்து 1 மாதம் மட்டுமே ஆன பெண் குட்டி யானை, தாய் மற்றும் அதன் கூட்டத்தோடு வந்துள்ளது. அப்போது சேற்றில் வழுக்கி விழுந்ததில் நெஞ்சுப்பகுதியில் அடிபட்டு இறந்து இருக்கிறது என்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    கோத்தகிரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த மனித கை வடிவிலான முள்ளங்கியை கடைக்காரர் பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருந்தார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மார்க்கெட்டிற்கு உள்ளூர்களில் இருந்து மலை காய்கறிகள் மட்டுமின்றி, சமவெளி பகுதிகளிலிருந்தும் ஏராளமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மார்க்கெட்டில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட முள்ளங்கி மூட்டையில், வித்தியாச வடிவிலான முள்ளங்கி ஒன்று இருந்தது.

    இந்த முள்ளங்கி காண்பதற்கு மனிதர்களின் கை விரல்கள் போன்ற தோற்றம் அளித்தது. இந்த வித்தியாச வடிவிலான முள்ளங்கியை கடைக்காரர் பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருந்தார். இதனை மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


    ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
    ஊட்டி:

    கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டது. கடந்த 7 அரை மாதங்களுக்கும் மேலாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் ஆட்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளுடன் அரசு அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஊட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகம் நேற்று முதல் திறக்கப்பட்டது.

    அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அருங்காட்சியகத்துக்குள் குதிரை, காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் பதப்படுத்தி வைக்கப்பட்ட மாதிரிகள், நீலகிரி வாழ் பறவைகள், பாறைகள், கனிமங்கள், அஞ்சல் தலைகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், குகை ஓவியங்கள், புதைக்குழி பாண்டங்கள், உலோக கலைப் பொருட்கள், தோல் பாவைகள், இசைக்கருவிகள், மரச்சிற்பங்கள், விவசாய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    மேலும் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடர், கோத்தர், பனியர், இருளர், குறும்பர், படுகர் இன மக்களின் பயன்பாட்டு பொருட்கள், கலாச்சாரங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளது. அருங்காட்சியகத்துக்குள் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் வட்டங்கள் போடப்பட்டு இருக்கிறது. அங்கு மேல் மாடிக்கு படிக்கட்டு வழியாக செல்லும்போது கை வைக்கும் இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

    பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக கட்டண டிக்கெட் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும். டிக்கெட் மூலம் நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் ஏ.டி.எம். கார்டு அல்லது கியூ.ஆர்.கோடு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது. 7 அரை மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்துக்கு நேற்று சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசித்தனர். அவர்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தவைகளை பார்வையிட்டதுடன் அதன் விவரங்களை கேட்டறிந்தனர். தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கலெக்டர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அசெம்பிளி தியேட்டர் மற்றும் தனியார் தியேட்டர் நேற்று திறக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். புதிய திரைப்படங்கள் திரையிடுவதில் சிக்கல் உள்ளதாலும், சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து செல்வதாலும் வருகிற நாட்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சம்பளம் வழங்கக்கோரி தனியார் தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் ஆளாகி உள்ளனர்.

    எனவே சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. இதை கண்டித்தும், 5 மாத சம்பளத்தை வழங்கக்கோரியும் தொழிலாளர்கள் நேற்று நியூஹோப்பில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் தேயிலை தோட்ட நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த வாரத்திலேயே சம்பளம் வழங்கப்படும் என்று தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள 5 மாத சம்பளத்தில் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு 2 மாத சம்பளம் மற்றும் பயணப்படியை மட்டுமாவது வழங்க முன்வர வேண்டும். மேலும் பல ஆண்டுகளாக போனஸ் வழங்குவதில்லை.

    எனவே தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு நிலுவை சம்பள தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கூடலூர் அருகே 20 சதவீத போனஸ் கேட்டு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடலூர்:

    தமிழக அரசு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளதை கண்டித்தும், கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் மசினகுடியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    ×