என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டதால் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வாகனங்களில் ஊட்டிக்கு வருகிறார்கள். மாவட்ட எல்லையான பர்லியார், குஞ்சப்பனை சோதனைச்சாவடிகளில் வயதானவர்கள், அறிகுறி தென்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் ஓரிரு நாட்கள் ஊட்டியில் தங்கி இருந்து பூங்காக்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகளால் உள்ளூர் மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் சரியான முறையில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கொரோனா பரவுவதை தடுக்க ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் தங்கும் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் வரவேற்பாளர்கள், ஊழியர்கள், சுத்தம் செய்யும் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன் எண்கள் பெறப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 14-ந் தேதி 3 ஆயிரத்து 163 பேர், 15-ந் தேதி 5,016 பேர், 16-ந் தேதி 3 ஆயிரத்து 884 பேர், 17-ந் தேதி 2,320 பேர் வருகை தந்து உள்ளனர். அவர்கள் பெரிய புல்வெளி மைதானத்தில் அமர்ந்து பூங்காவை கண்டு ரசிப்பதோடு, பலர் முககவசம் அணியாமல் இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    இதையடுத்து பூங்கா பணியாளர்கள் ரோந்து கண்காணித்து வருவதுடன், முககவசம் அணியாத சுற்றுலா பயணிகளை முககவசம் அணியுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக இருந்தால் விசிலடித்து கூட்டமாக நிற்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளி மண்டல பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மற்றும் வெளி மண்டல பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பு மற்றும் பின்பு காப்பக பகுதியில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம்.

    பருவமழைக்கு முன்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி புலிகள் காப்பகத்தின் உள் மண்டல பகுதியான கார்குடி, முதுமலை உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் நடந்தது. புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலத்தில் உள்ள சிங்காரா, சீகூர், தெங்குமரஹடா சரகங்களில் 349 சதுர கி.மீ. பரப்பளவு வனத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

    இதற்காக புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் 37 குழுக்கள் நியமிக்கப்பட்டது. ஒரு குழுவில் 4 பேர் என 100-க்கும் மேற்பட்டோர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணி வருகிற 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பருவமழைக்கு முன்பு வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். பின்னர் மழைக்காலம் முடிவடையும் நவம்பர் மாதத்தில் பருவ மழைக்கு பின்பு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகின்றன. வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் நேரடி காட்சிகள், கால் தடயங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அடையாளம் காணப்பட்டு கணக்கெடுக்கப்படுகிறது. தாவர, மாமிச உண்ணிகள், ஊர்வன மற்றும் பறவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்கள் கணக்கெடுக்கப்படும். இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கு அளிக்கப்படும் என்றனர்.
    கூடலூரில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் திடீரென்று ஆய்வு செய்தார்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் விதை விற்பனை உரிமம் இல்லாமல் விவசாயிகளுக்கு விதைகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் ஊட்டி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் கூடலூர் தாலுகாவில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    விதை விற்பனை நிலையங்களில் விதை கொள்முதல் பட்டியல், விதை இருப்பு பதிவேடு, விதை விற்பனை பட்டியல், விதை முளைப்புத் திறன் அறிக்கை, விதை பதிவுச் சான்றிதழ் போன்றவைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது விதை உரிமம் இல்லாமல் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யக்கூடாது. இதை மீறி தாங்கள் விதை விற்பனை செய்தால் விதை சட்டப் பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் விதை விற்பனை உரிமம் பெறுவதற்கு கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சட்டப்படி உரிமம் பெற்று விதை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் விதை வாங்கும் முன் கவனிக்க வேண்டியது அரசால் அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையமாக இருக்க வேண்டும். விதை முளைப்புத்திறன் அறிக்கை உள்ளதா என்று விற்பனையாளரிடம் கேட்டு விதைகளுக்கான முளைப்புத்திறன் சதவீதத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

    விதை வாங்கியதற்கான விலை பட்டியலை விற்பனையாளரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். விலை பட்டியலை அடுத்த பருவம் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். மேலும் உரிமம் இல்லாத விற்பனையாளர்களிடம் இருந்து விதைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். விதை வாங்கிய உடன் விதை விபர அட்டையில் பருவநிலை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு பயிர் நடவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    நீலகிரியில் 1 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினமும் 100 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்தது.

    தற்போது தினமும் 50-க்கும் கீழ் கொரோனா உறுதியாகி வருகிறது. இருப்பினும் அரசு வழிமுறைகளின்படி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 6 ஆயிரத்து 894 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மீதமுள்ள 195 பேர் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 125 படுக்கைகள், குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் 60 படுக்கைகள், கூடலூர் அரசு மருத்துவமனையில் 36 படுக்கைகள் உள்ளன.

    கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் நீலகிரியில் செயல்பட்டு வந்த 4 கண்காணிப்பு மையங்கள் மூடப்பட்டு உள்ளன. அந்த சென்டர்கள் மீண்டும் தனியார் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அங்கு பெரும்பாலான காலி படுக்கைகள் உள்ளன.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை யொட்டி நீலகிரிக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் 12 ஆயிரத்து. மேற்பட்டோர் வந்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க குஞ்சப்பனை, பர்லியார் சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வயதானவர்கள் மற்றும் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி தென்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 321 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொடர்ந்து சோதனைச்சாவடிகள் மற்றும் கொரோனா பரிசோதனை மையங்களில் தாமாக முன் வருகிறவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மலா பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து அதன் நகலை சப்-கலெக்டர்கள் மோனிகா (ஊட்டி) , ரஞ்சித்சிங் (குன்னூர்), கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

    ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 96 ஆயிரத்து 442 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 468 பேர், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 917 பேரும், கூடலூர் தனி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 90 ஆயிரத்து 51 பேர், பெண் வாக்காளர்கள் 94 ஆயிரத்து 304 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 357 பேரும், குன்னூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 89 ஆயிரத்து 52 பேர், பெண் வாக்காளர்கள் 97 ஆயிரத்து 424 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 479 பேர் உள்ளனர்.

    நீலகிரியில் மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 75 ஆயிரத்து 545 பேர், பெண்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 196 பேர், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 651 பேர் அதிகமாக இருக்கின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது தற்போது 4 ஆயிரத்து 938 வாக்காளர்கள் குறைந்து உள்ளனர். புதியதாக 2 ஆயிரத்து 317 வாக்காளர்கள் சேர்ந்து இருக்கின்றனர். இறந்து போனது, முகவரி மாறி சென்றது போன்றவற்றால் 7,255 பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கு வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகள், டிசம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குறைந்த விலையில் ஊட்டியில் 20 கூட்டுறவு ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகத்தின் சமவெளி பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை, சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் ரூ.75-க்கும், சின்ன வெங்காயம் ரூ.110-க்கும் அதன் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. 3 வாரங்களை கடந்தும் சின்ன வெங்காயத்தின் விலை குறையாமல் அதே விலையே நீடிக்கிறது. பெரிய வெங்காயம் வரத்து சற்று அதிகரித்து இருப்பதால், அதன் விலை ஓரளவு குறைந்து உள்ளது.

    தமிழகத்தில் வெங்காயம் பதுக்குவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட்டுறவுத்துறை கீழ் இயங்கும் கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை ஆகிறது.

    ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடைகளுக்கு சென்று பெரிய வெங்காயம் வாங்கலாம். ஒரு கிலோ மற்றும் அதற்கு மேல் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போதே பெரிய வெங்காயத்தையும் வாங்கி செல்கிறார்கள்.

    இதுகுறித்து கூட்டுறவு துணை பதிவாளர் கணபதி சுப்பிரமணியம் கூறும்போது, 5 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 20 கூட்டுறவு ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாங்கும் அளவை பொறுத்து கூடுதலாக பெரிய வெங்காயம் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    கோத்தகிரி சந்தைக்கு விற்பனைக்கு வந்த கோழிக்குஞ்சு வடிவ தக்காளியை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் இருந்து இந்த சந்தைக்கு ஏராளமான தக்காளி கொண்டு வரப்பட்டது.

    அதில் ஒரு தக்காளி மட்டும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. அதாவது அந்த தக்காளி கோழிக்குஞ்சு வடிவத்தில் இருந்தன. இதை அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
    ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் தளர்த்தப்பட்டு இ-பதிவு முறை நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த பூங்காக்கள் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கிறது.

    அதன்படி தீபாவளியான கடந்த 14-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 3 ஆயிரத்து 163 பேரும், நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 16 பேர் வருகை தந்து உள்ளனர். அதுபோன்று நேற்று முன்தினம் ஊட்டி ரோஜா பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் 2,058 பேர் வந்தனர். கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    இங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி படகு இல்ல சாலையில் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். பூங்காக்களில் இயற்கை அழகு மற்றும் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வந்து இருந்தனர்.

    கடந்த 8 மாதங்களுக்கு பின்னர் தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்து அறைகள் எடுத்து தங்கினர். ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்ததால் தங்கும் விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள், சுற்றுலா தொழிலாளர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது. வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதால் சாலையோர வியாபாரிகள், சுற்றுலா தொழிலாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால் அவர்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தாவரவியல் பூங்காவுக்கு வருகிறவர்களை கொண்டு கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
    கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தைப்புலி இறந்தநிலையில் தண்ணீரில் மிதந்தது. வனத்துறையினர், கிணற்றுக்குள் மிதந்த சிறுத்தைப்புலியை கயிறு கட்டி மீட்டனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகம் அருகே மன்ற குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள கிணற்றுக்கு அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை தண்ணீர் எடுக்க சென்றனர். அப்போது கிணற்றுக்குள் சிறுத்தைப்புலி ஒன்று இறந்தநிலையில் தண்ணீரில் மிதந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், கிணற்றுக்குள் மிதந்த சிறுத்தைப்புலியை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே பகுதியில் எரிக்கப்பட்டது.

    வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உயிரிழந்தது 4 வயதான ஆண் சிறுத்தைப்புலி என்றும், இரவு நேரத்தில் உணவு தேடி சென்றபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம்’ என்றனர்.
    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று (திங்கட்கிழமை) முதல் நடக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடியிலும் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. எனவே தகுதி உடைய நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமிக்கப்பட்டு உள்ள அலுவலரிடம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் போன்றவற்றிற்கு படிவங்களை பெற்று உரிய ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ல் பாஸ்போர்ட் அளவிலான 2 புகைப்படம், வயது மற்றும் முகவரி குறித்தான உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ல், பிழைத்திருத்தம் ஏதேனும் இருப்பின் படிவம் 8-ல், அதே தொகுதிக்குள் முகவரி மாற்றங்கள் செய்து கொள்ள படிவம் 8ஏ ஆகியவற்றில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள் ஆகும். அனைத்து திருத்தங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    நீலகிரியில் அனுமதி இல்லாத நேரங்களில் பட்டாசு வெடித்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ஊட்டி:

    தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அதிக ஓசை எழுப்பக்கூடிய தடை செய்த பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தீபாவளியன்று நீலகிரியில் போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பலர் அனுமதி இல்லாத நேரங்களில் பட்டாசுகளை வெடித்தனர். இதையடுத்து 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    கூடலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகிறது. கூடலூரில் இருந்து நடுவட்டம் வரையிலான செங்குத்தான மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க வாகனங்களை 2-வது கியரில் இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பலரும் அதை கடைபிடிப்பது இல்லை.

    இதற்கிடையில் ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும், நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதற்கு இ-பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும் தீபாவளி பண்டிகையையொட்டி சமவெளியில் இருந்து கடந்த சில நாட்களாக ஏராளமான வாகனங்கள் நீலகிரிக்கு இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் கோவையில் இருந்து ஊட்டி வழியாக கூடலூருக்கு கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. கூடலூர் அக்ரஹாரம் தெரு அருகே வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பூ ராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, மலைப்பாங்கான சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் 2-வது கியரை பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை பலகைகள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமவெளியில் இருந்து வரும் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. எனவே விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    ×