search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூரில் ஒரு கடையில் துணை இயக்குனர் வெங்கடாசலம் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    கூடலூரில் ஒரு கடையில் துணை இயக்குனர் வெங்கடாசலம் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    கூடலூரில் விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் திடீர் ஆய்வு

    கூடலூரில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் திடீரென்று ஆய்வு செய்தார்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் விதை விற்பனை உரிமம் இல்லாமல் விவசாயிகளுக்கு விதைகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் ஊட்டி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் கூடலூர் தாலுகாவில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    விதை விற்பனை நிலையங்களில் விதை கொள்முதல் பட்டியல், விதை இருப்பு பதிவேடு, விதை விற்பனை பட்டியல், விதை முளைப்புத் திறன் அறிக்கை, விதை பதிவுச் சான்றிதழ் போன்றவைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது விதை உரிமம் இல்லாமல் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யக்கூடாது. இதை மீறி தாங்கள் விதை விற்பனை செய்தால் விதை சட்டப் பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் விதை விற்பனை உரிமம் பெறுவதற்கு கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சட்டப்படி உரிமம் பெற்று விதை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் விதை வாங்கும் முன் கவனிக்க வேண்டியது அரசால் அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையமாக இருக்க வேண்டும். விதை முளைப்புத்திறன் அறிக்கை உள்ளதா என்று விற்பனையாளரிடம் கேட்டு விதைகளுக்கான முளைப்புத்திறன் சதவீதத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

    விதை வாங்கியதற்கான விலை பட்டியலை விற்பனையாளரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். விலை பட்டியலை அடுத்த பருவம் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். மேலும் உரிமம் இல்லாத விற்பனையாளர்களிடம் இருந்து விதைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். விதை வாங்கிய உடன் விதை விபர அட்டையில் பருவநிலை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு பயிர் நடவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×