என் மலர்
நீலகிரி
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், மகளிர் தின விழா காரைக்கால் வணிகர் சங்க மையத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு, சத்தான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளும், சிறந்த மகளிர் குழுக்களுக்கு கேடயமும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்கள் நலத் திட்டங்களையும், மக்களுக்கான உதவிகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு விரைவில் உருவாக்கி செயல்படுத்தும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற விடா முயற்சி அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி சத்யா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்ட கலெக்டராக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். இந்த நிலையில் யானைகள் வழித்தட பிரச்சினை தொடர்பாக இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீலகிரி கலெக்டரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு அவரை இடமாற்றம் செய்ய அனுமதி கொடுத்தது.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த எஸ்.பி.அம்ரித்தை நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இதையடுத்து அவர் இன்று காலை நீலகிரி வந்தார். பின்னர் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற எஸ்.பி.அம்ரித், கோப்புகளில் கையெழுத்திட்டு நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. அம்ரித் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்தவர். 1988-ம் ஆண்டு பிறந்த இவர் 2013-ம் ஆண்டு தமிழக அரசு பணியில் சேர்ந்தார். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளை நன்கு அறிந்தவர். மேலும் இவர் ஏற்கனவே மதுரை மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் சற்று மழை ஓய்ந்து, பகல் நேரங்களில் கடுமை யான குளிர் நிலவி வந்தது. அவ்வப்போது இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்தது.
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துனேயே காணப்பட்டது. மாலையில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக தொடங்கி இரவில் பலத்த மழையாக மாறியது. குன்னூர், அருவங்காடு, பர்லியார், ஓட்டுப்பட்டரை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
இரவில் தொடங்கி நள்ளிரவு வரை பெய்த மழையால் குன்னூர் மார்க்கெட் சாலை, பஸ் நிலைய சாலை, வண்டிச்சோலை சாலை, அருவங்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. இந்த மழையால் சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலக சாலை, ரோஜா பூங்கா சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழை காரணமாக ஊட்டி பஸ் நிலையம் செல்லும் உட்லண்ட்ஸ் சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உடனடியாக பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் முறிந்து விழுந்த போது வாகனங்கள் மரம் விழுந்த இடத்தில்வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாநகர் பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். ஒரு சிலர் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு பஸ் நிறுத்தம் மற்றும் சாலையோர கடைகளுக்குள் தஞ்சம் அடைந்தனர்.
இந்த மழை காரணமாக தாழ்வான பகுதி, சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. கோவை- அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. இதேபோல் புறநகர் பகுதிகளான கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து கூடலூரில் உள்ள மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக இன்று மார்க்கெட்டில் தக்காளி ரூ.55க்கு விற்பனையானது. விலை குறைந்ததால் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உள்பட எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனத்துறையினர் அவ்வப்போது வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவர மற்றும் மாமிச உண்ணி வனவிலங்குகளின் கணக்கெடுப்பு மற்றும் வாழ்விட மதிப்பீட்டுப் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் வனசரகர்கள், வன காவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலரும் ஈடுபட்டனர்.
முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, நெலாக்கோட்டை, கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் நேரடி காட்சிகள், கால்தடங்கள், விலங்குகளின் எச்சங்கள், நகக்கீறல்கள், தாவர மற்றும் மாமிச உண்ணிகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்டவைகளின் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.
சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெப்பக்காட்டில் உள்ள கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட உள்ளது. இன்று தொடங்கியுள்ள கணக்கெடுப்பு பணி வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
உள்வட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் வருகிற 1-ந் தேதி முதல் முதுமலை வெளிவட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடக்கூடிய வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கணக்கெடுத்தல் பணியின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தடயங்கள் சேகரித்தல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரத்துக்கும் மேலாக நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் தெங்குமரகடா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் அணையில் 104 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி ஆற்றில் அதிகபட்சமாக 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் 104 அடியிலேயே நீடித்து வருகிறது.
இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடியும், பவானி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கரடி புகுந்தது. அந்த கரடி அங்கு ஜாலியாக உலா வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.






