search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    தமிழக வனத்துறையினரை சிறைபிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்

    தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக்கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பகுதியில் தொடர்வண்டி பாதையை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகத்தின் மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவு தொடர்வண்டி மோதியதில் ஒரு தாய் யானை மற்றும் இரு குட்டிகள் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன.

    அதிக வேகத்தில் தொடர்வண்டி வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்வண்டி ஓட்டுனர்கள் இருவரை கைது செய்த தமிழ்நாடு வனத்துறையினர், தொடர்வண்டி எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த வேகம் காட்டும் சிப்’பை பறிமுதல் செய்தனர். அதில் பதிவாகியிருந்த விபரங்களை அறிவதற்காக அவர்கள் பாலக்காடு தொடர்வண்டி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஆர்.பி.எப் அதிகாரிகள், வனத்துறையினர் நால்வரை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    வனத்துறை அதிகாரிகளை விடுதலை செய்யும்படி தமிழக வனத்துறை உயரதிகாரிகள் கோரியும் அதை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் ஏற்கவில்லை. யானைகள் மீது தொடர்வண்டியை மோதியதற்காக கைது செய்யப்பட்ட இரு ஓட்டுனர்களை தமிழக வனத்துறையினர் விடுதலை செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட சிப்பை ஒப்படைத்த பிறகு தான் வனத்துறை அதிகாரிகள் குழுவை ஆர்.பி.எப் விடுவித்திருக்கிறது.

    இந்த மோதலை வனத்துறையினருக்கும், தொடர்வண்டி பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலாக பார்க்க முடியாது. கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களும், தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள் குழுவில் இருந்த நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஓட்டுனர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைது செய்யலாம்? என்ற தன்முனைப்பு தான் இந்த மோதலுக்குக் காரணமாகும்.

    கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் தன்முனைப்புக்காக, விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து சட்ட விரோதக் காவலில் வைத்ததும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் நியாயப்படுத்த முடியாதவை. இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும்.

    தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு பணிந்து தொடர்வண்டியின் ஓட்டுனர்கள் இருவரை வனத்துறை அதிகாரிகள் விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக்கூடாது.

    இதற்குக் காரணமான தொடர்வண்டி பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். தொடர்வண்டித்துறை நிர்வாகத்திடம் இது குறித்து புகார் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×