என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பகல் நேரங்களிலும் சுற்றி திரிவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஊட்டி

    கோத்தகிரி அருகே அமைந்துள்ளது நெடுகுளா ஒசட்டி பகுதி. அங்கு கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. அதனை அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது.

    இந்த நெடுகுளா, ஒசட்டி, சுண்டட்டி பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு அரசு பள்ளி மற்றும் அரசு ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறுத்தை இரவு நேரம் மட்டும் இல்லாமல் பகல் நேரங்களிலும் சுற்றி திரிவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கக் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதி கட்டப்பெட்டு, கோத்தகிரி என 2 வனச்சராத்திற்கு உட்பட்டதால் யார் நடவடிக்கை எடுப்பது என குலம்பி உள்ளனர்.

    மேலும் இந்த பகுதியில் புதர் மண்டி கிடக்கிறது. சுத்தம் செய்யாமல் ஏராளமான உன்னிச் செடிகள் வளர்ந்து உள்ளது. இதில் உள்ள பழங்களை சாப்பிடுவதற்காக கரடிகள் அதிகமாக வருகிறது.

    எனவே இதனை ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு அவ்விடங்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தல் வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதனால் கரடி, சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் குறிஞ்சி மலா்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன.
    • தற்போது இங்கு பூத்துள்ள குறிஞ்சி மலா்கள் சிறு குறிஞ்சி வகையை சோ்ந்தவை என தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைச்சரிவுகளில் பல்வேறு வகையான குறிஞ்சி செடிகள் உள்ளன.

    இவற்றில், ஆண்டுக்கு ஒருமுறையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலா்கள் வரை உள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் கல்லட்டி மலைச்சரிவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ரகத்தில் பூத்துக்குலுங்கிய குறிஞ்சி மலா்களைத் தொடா்ந்து தற்போது தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் குறிஞ்சி மலா்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    தொட்டபெட்டா மலைச்சரிவில் சின்கோனா பகுதியிலும், தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு அருகேயுள்ள தேயிலை தொழிற்சாலை பகுதியிலும் இந்த குறிஞ்சி மலா்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

    தற்போது இங்கு பூத்துள்ள குறிஞ்சி மலா்கள் சிறு குறிஞ்சி வகையை சோ்ந்தவை எனவும், இவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ரகம் எனவும், தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

    இந்த குறிஞ்சி மலா்கள் மலைப்பகுதி முழுக்க இல்லாமல் சிறுசிறு இடைவெளிகளில் பூத்துள்ளன.

    ஊட்டியில் தற்போது 2-வது சீசன் களைகட்டியுள்ள சூழலில், தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்களை காணவும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    • பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுனில் என்பவர் தான் பெண்களிடம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • சுனில் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அங்கன்வாடிகளில் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வரை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுனில் என்பவர் தான் பெண்களிடம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலி பணி ஆணை தொடர்பாக நடுவட்டம் இன்ஸ்பெக்டர் ராம்பதி, கூடலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் ஆகியோர் நேற்று சுனிலை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பாடந்தொரை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த சுனில், சேரம்பாடியை சேர்ந்த சரண்யா என்ற பிரேமா, ஊட்டியை சேர்ந்த நான்சி ஆகிய 2 பெண்களிடம் போலியான அட்டை வழங்கியும், அவர்கள் மூலமாக அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி 32 பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார்.

    மேலும் கிராம நிர்வாக அலுவலரின் சீல் வைத்த பணி நியமன ஆணையையும் அவர் வழங்கியுள்ளார்.

    இதில் சந்தேகம் அடைந்த பெண்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று விசாரித்தனர்.

    அப்போது அந்த பணி நியமன ஆணை போலியானவை என்று தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்தே பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பின்னர் அவரை பந்தலூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் சுனிலை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

    150 ஆண்டுகள் பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது.

    நீலகிரி கோத்தகிரி கோத்தகிரி பஸ் நிலையம் அருகே 150 ஆண்டுகள் பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அருகே 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இங்குள்ள பள்ளி மற்றும் குடியிருப்புக்கு செல்லும் கான்கிரீட் நடைபாதையில் சிறுத்தை ஒன்று மெதுவாக நடந்து சென்றது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அங்கிருந்த ஒருவர் சற்று தொலைவில் இருந்து அந்த சிறுத்தையை தனது செல்போனில் படம் பிடித்தார். இது குறித்த தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் பள்ளிகள் மற்றும் குடியிருப்புக்கள் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் சிறுத்தை உலா வந்ததால், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களை சிறுத்தை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தைக் வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்துப் பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 61-வது ஆண்டு துர்கா பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர்.
    • துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    நீலகிரி குன்னூர் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பெங்கால் இன மக்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு வளாகத்தில் 61-வது ஆண்டு துர்கா பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர். இதில் இயற்கை சார்ந்த பொருட்களும் ஆர்கானிக் வண்ணத்திலும் விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகர் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.வடமாநில மக்களான பெங்கால் இன மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளுடன் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். மேலும் சுமங்கலி பூஜையில், அம்மனுக்கு செந்தூரம் திலகமிட்டு, பூஜைகளை, மகளிரே நடத்தி வழிபட்டனர் தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காட்டேரி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.

    • இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து நடமாடி வருகின்றன.
    • வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நீலகிரி கோத்தகிரி கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்குள்ள சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இந்த காட்சிகள் அங்குள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதே பகுதியில் கடந்த மாதம் 2 சிறுத்தைகள், 2 கருஞ் சிறுத்தைகள் மற்றும் 2 கரடிகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சமடைந்ததுடன், சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த பூவினை பேப்பர் பூ என கூறுவார்கள் இதன் மீது தண்ணீர் பட்டவுடன் பூவானது தானாகவே மூடிக்கொள்ளும்
    • சாலை பகுதிகளில் தான் இந்த பூக்கள் அதிகம் வளரும்.

    அரவேணு

    கோத்தகிரி பகுதிகளில் மஞ்சள் நிற பேப்பர் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இதன் மீது தண்ணீர் பட்டவுடன் பூவானது தானாகவே மூடிக்கொள்ளும் வெயில் பட்டவுடன் தானாக விரிந்து கொள்ளும் தன்மை கொண்டது.

    இந்த பூ 3 நாட்களுக்கு அல்லது 4 நாட்கள் வரை பறித்த பின்னும் வாடாமல் இருக்கும். இந்த பூவின் மீது சுற்றுலா பயணிகளுக்கு அதிகமான ஈர்ப்பு உள்ளது.

    இப் பூவினை சுற்றுலா பயணிகள் 5 பூக்கள் ரூ.10, 20 பூக்கள் ரூ.20 ெகாடுத்து வாங்கி வருகிறார்கள். சுற்றுலா பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்ற சுற்றுலா பூவாகும். சாலை பகுதிகளில் தான் இந்த பூக்கள் அதிகம் வளரும்.

    • மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • தேசிய நெடுஞ்சாலை பணிகள் ரூ.138 கோடியில் நடைபெற்று வருகின்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேற்று மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முத்ரா கடன் திட்டம் மூலம் கடன் வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை பணிகள் ரூ.138 கோடியில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு மீன் வளர்ப்பை ஊக்குவிக்கவும், மீன் காட்சியகங்களை புனரமைக்கவும் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.

    நேரடியாக விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் 11-வது தவணை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 48,307 விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

    பயிர்க்காப்பீடு திட்டத்தில் 3,239 பேர் பயன்பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 4 வட்டங்களில் 96,970 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

    தற்போது 85,369 குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    39,818 இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. நீலகிரியில் 72 நீர்நிலைகளில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தையைப் பாா்ப்பதற்காக காரில் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றாா்.
    • பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு அங்கிருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது

    ஊட்டி

    ஊட்டியில் தலைக்குந்தா அருகே உள்ள முத்தநாடுமந்துவைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (32). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். அண்மையில் இவருக்கு 4ஆவது குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு பெயா் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், திடீரென அக்குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

    இது குறித்து நவீன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் குழந்தையைப் பாா்ப்பதற்காக காரில் முத்தநாடுமந்துவிலிருந்து ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா்.

    காக்காதோப்பு பாரதியாா் நகா் அருகே சென்றபோது காா் நிலை தடுமாறி அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு அங்கிருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நவீன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுமந்து போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • சிறுவா்களுக்கு வன உயிரின மாதிரி முகமூடி செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வன உயிரின மாதிரி முகமூடிகளை அணிந்து அவா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு செம்மநத்தம், மாவநல்லா குரூப் ஹவுஸ் பகுதிகளில் சிறுவா்களுக்கு வன உயிரின மாதிரி முகமூடி செய்யும் பயிற்சியுடன் வன உயிரின பாதுகாப்பு குறித்த கதைகள் கூறும் நிகழ்ச்சி நடந்தது.

    கிராம பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறுவா்கள் பலா் கலந்துகொண்டனா். இதில் வன உயிரின மாதிரி முகமூடிகளை அணிந்து அவா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

    • பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வெறி நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊட்டி

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ஊட்டிக்கு வந்தார்.

    இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதிக்கு வந்தார்.

    அங்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் அவர் கோழிப்பண்ணை பகுதியில் உள்ள வெறி நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று ஒக்கிலியர் திருமண மண்டபத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது எதிர்வரும் லோக்சபா தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் எடுத்து கூறப்பட்டது.

    அதன்பின்னர் தொழில் அதிபர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து பேசினார். இதில் மாநில, மாவட்ட அணி மற்றும் மண்டல நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து ஊட்டி தமிழகம் மாளிகையில் நடக்கும் கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    • கட்டிடங்கள் பழுதடைந்து அடிக்கடி இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்திலும் பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    கோத்தகிரி

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பழுதடைந்து அடிக்கடி இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது.

    கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளிக்குழந்தைகள் காயம் அடைந்தனர்.இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள பழுதடைந்த பழைய கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நீலகிரி கலெக்டரின் உத்தரவின் பேரில் கோத்தகிரியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

    ×