என் மலர்
நீலகிரி
- ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களிலும் படிவம் 6பி யில் பதிவு செய்யலாம்.
- கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடந்து வருகின்றன.
ஊட்டி
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6 பி யில் சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் அடையா அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சட்டசபை தொகுதியில் 54.20 சதவீதம்,கூடலூர்(தனி) 48.38 சதவீதம், குன்னூர் தொகுதியில் 50.44 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 51.08 சதவீத வாக்காளர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் voter helpline செயலி மூலமும், ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களிலும் படிவம் 6பி யில் பதிவு செய்யலாம்.
வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர்கள் தங்களது சுய விருப்பத்துடன் ஆதார் எண்ணை தெரிவித்து, கருடா செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது படிவத்திலும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் இப்பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சந்தைகளில் ரூ.15 முதல் ரூ.17வரை மட்டுமே கிடைக்கிறது.
- நல்ல ஒரு லாபமாக இருக்கும் என்றனர்.
அரவேணு,
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, உயிலட்டி, கேர்க்கம்பை, காக்காசோலை, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளிவல் மேரக்காய் பயிட்டுள்ளனர்.
தற்போது பெய்த மழை காரணமாக மேரக்காய் நல்ல விளைச்சலை எட்டியுள்ளது. மேரக்காய் விளைச்சலுக்கு அதிகபடியான தண்ணீர் தேவைப்படும். கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
தற்போதைய விளைச்சலுக்கு முந்தைய விளைச்சல் அறுவடையில் சமவெளிப்பகுதி சந்தைகளில் மேரக்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.25 முதல் ரூ.30 விலை கிடைத்த நிலையில் தற்போது மேரக்காய் விளைச்சல் அதிகரித்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதி சந்தைகளில் ரூ.15 முதல் ரூ.17வரை மட்டுமே கிடைக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேரக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. வண்டி வாடகை, பணியாட்கள் கூலி, முதலீடு ஆகியவைகளை ஈடுகட்ட இது பெரிய லாபம் இல்லை என்றாலும் சமநிலை விலையாக இருக்கிறது. இருப்பினும் 25 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை கிடைத்தால் நல்ல ஒரு லாபமாக இருக்கும் என்றனர்.
- 2 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஆர்.டி.ஓ.தனது விசாரணையை தொடங்கினார்.
ஊட்டி,
சென்னையை சோ்ந்த குமரேசன் என்பவருக்கு உதகையில் மஞ்சனக்கொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சொந்த இடம் உள்ளது.
இவா், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை தனியாா் ஒப்பந்ததாரா் அா்ஷத்திடம் அளித்திருந்தாா்.
இவரது அறிவுறுத்த லின்படி வீடுகட்டும் பணியில் 10 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.வீட்டின் அருகே தடுப்புச் சுவா் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடந்தது. அந்த பணியில் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மாரக்கவுண்டன்புதூா் பகுதியை சோ்ந்த சேட்டு(54), வேலு(28) உள்பட 4 பேர் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில், சேட்டு, வேலு ஆகியோா் மீது மண் விழுந்து மூடியதால், இருவரும் நிலத்திற்குள் புதைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் அம்ரித், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில்,
தடுப்புச் சுவருக்காக பள்ளம் தோண்டும் பணிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் நடைபெற்றுள்ளன.
இதுகுறித்து விசாரிக்க ஆா்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அதன்படி ஆர்.டி.ஓ.தனது விசாரணையை தொடங்கினார். மேலும் போதிய பாதுகாப்பு இல்லாமல் பணிகள் நடந்ததால், நிலத்தின் உரிமையாளர், மற்றும் ஒப்பந்ததரார் ஆகிய 2 பேர் மீது ஊட்டி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஜெப வழிபாடு ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
- அன்னையின் ஆசி வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ரீச்சிங் காலனி பகுதியில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா நடைபெற்றது. விழாவினை லவ்டேல் புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை பீட்டர் குத்துவிளக்கு ஏற்றி ஜெப வழிபாட்டுடன் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ரீச்சிங் காலனி பகுதியில் அமைந்துள்ள பியோ அன்பியம் மற்றும் ஊர் மக்கள் சார்பாக அன்பின் விருந்து வழங்கப்பட்டது. மாலை 6 மணி அளவில் தேர்பவனி ஆனது பிரார்த்தனையுடன் ரீச்சிங் காலனி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அன்னையின் ஆசி வழங்கப்பட்டது. விழாவில் ரீச்சிங் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்காக தூய ஆவியானவர் ஜெப குழுவின் ஜெப வழிபாடு ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
- பஸ்கள் கிடைக்காததால் அவதி அடைந்தனர்.
- ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனா்.
ஊட்டி,
நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கியது முதல் இங்கு இதமான காலநிலை நிலவுகிறது.
இதை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்தனா். இவா்கள், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர்.
பின்னர் குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, கோடநாடு காட்சிமுனை, கேத்ரின் நீா்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனா்.
காலாண்டுத் தோ்வு விடுமுறை, ஆயுதபூஜை, கா்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை என தொடா் விடுமுறை இருந்ததாலும், நீலகிரியில் இரண்டாவது சீசனில் நிகழும் இதமான காலநிலை காரணமாகவும் கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனா்.
இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பி உள்ளவா்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
விடுமுைற முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஊட்டி பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடித்து கொண்டு ஏறினர். எல்லா பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்ததுடன், வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
- குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் அவ்வப்போது மழையும், குளிரும் நிலவி வந்தது.
- மாநகரில் இரவு 11 மணியளவில் கனமழை பெய்தது. இதனால் அவினாசி சாலை, சத்தி சாலை,திருச்சி சாலை என முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலும், மாலையில் இதமான காலநிலையும் நிலவி வந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் அவ்வப்போது மழையும், குளிரும் நிலவி வந்தது. நேற்று மதியத்திற்கு பிறகு குன்னூர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் லேசான மழை பெய்தது.
மாலையில் தொடங்கிய சாரல் மழை இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. குன்னூர் சுற்றுப்புற பகுதிகளான அருவங்காடு, ஒட்டுப்பட்டரை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக குன்னூர் பஸ் நிலையம், மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இன்று காலையும் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர். தேயிலை தோட்டங்களில் பணிபுரிவோர் பிளாஸ்டிக் கவர்களை அணிந்து கொண்டு வேலை பார்த்தனர்.
இதேபோல் ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று விடுமுறை என்பதால் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான அரவேனு, கீழ் கோத்தகிரி, கடசோலை, மசக்கல், கட்டப்பெட்டு, ஆகிய பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. காலையிலும் மழை நீடித்தது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.
கோவை மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலுமே பரவலாக மழை பெய்தது. மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
மாநகரில் இரவு 11 மணியளவில் கனமழை பெய்தது. இதனால் அவினாசி சாலை, சத்தி சாலை,திருச்சி சாலை என முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்கள், சாலைகளில் குண்டும், குழியுமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கோவை தெற்கு-29, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-29.50, மேட்டுப்பாளையம்-27.50, அன்னூர்-24.20, விமானநிலையம்-25.20.
- ஊர்வலமாகவும், சிறுவர்கள் நடனமாடியும் சென்றனர்.
- உலகின் 3-வது பெரிய மதம்
கோத்தகிரி
உலகின் 3-வது பெரிய மதமான இசுலாமிய மதத்தினை உருவாக்கிய நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் அனைத்து இசுலாமிய மக்களும் ஒன்றிணைந்து காலை தொழுகையினை முடித்த பின்னர் நபிகள் நாயகத்தின் பெருமையையும், அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து பஸ் நிலையம், காம்பாய்கடை வரையில் ஊர்வலமாகவும், சிறுவர்கள் நடனமாடியும் சென்றனர்.
- முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது.
கூடலூர்,
பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே மழை வரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பொதுமக்களை ஏமாற்றி சென்றது.
நீர்வரத்து குறைந்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1333 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 1267 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது. 804 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1249 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனம் மற்றும் குடிநீருக்காக 1199 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- புலி நடமாட்டமும் உள்ளதால் அச்சம் மேலும் அதிகரித்து உள்ளது.
- 2 இடங்கிளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடம் புதர்கள் மண்டி வனப்பகுதி போல் காணப்படுவதால் இங்கு புலி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடி உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தற்போது புலிநடமா ட்டமும் உள்ளதால் அச்சம் மேலும் அதிகரித்து உள்ளது.
எனவே வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்ற நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் கோரிக்கை விடுத்துள்ளார்.அதன்பேரில் ஸ்ரீமதுரை செமுண்டி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் அபகுதியில் ஆய்வு செய்து 2 இடங்கிளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
- 30 மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
- போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்றிருப்பதாகவும் அவரது கையில் பை ஒன்றை வைத்து கொண்டு அந்த பையிலிருந்து எதையோ எடுத்து விற்பது போன்று உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரவேணு பகுதியை சேர்ந்த சிவக்குமார்(48) என்பதும், அவர் வைத்திருந்த பையில் 30 மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.உடனடியாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது.
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ள பாண்டியன்பார்க் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலான சாலை. இப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லவும் இந்த பாண்டியன் பார்க் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த சாலை பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ள தேநீர் கடைகளில் தேநீர் அருந்த வருபவர்கள் சாலைகளின் அருகிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே போக்குவரத்து காவலர்கள் உடனடியாக இந்தப்போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
பெருமாளுக்கு புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை உகந்த நாளாகும். இந்த தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் சிலர் சாத்விக உணவுகளை மட்டுமே உண்பார்கள்.
இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு வணங்குவர். கோவில்களில் கோவிந்தா கோஷமிட்டு வழிபடுவார்கள். ஒரு சிலர் திருப்பதிக்கு இந்த புரட்டாசி மாதத்தில் சென்று வருவதும் உண்டு.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் 3-வது சனிக்கிழமையான நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பெண்கள் வீடுகளில் கோலமிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். வரும் வாரம் சனிக்கிழமை கருட சேவை உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.






