என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்ரா கடன் திட்டத்தை செயல்படுத்தியதில் தமிழகம் முதலிடம்-மத்திய மந்திரி எல்.முருகன் பாராட்டு
- மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- தேசிய நெடுஞ்சாலை பணிகள் ரூ.138 கோடியில் நடைபெற்று வருகின்றன.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேற்று மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முத்ரா கடன் திட்டம் மூலம் கடன் வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை பணிகள் ரூ.138 கோடியில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு மீன் வளர்ப்பை ஊக்குவிக்கவும், மீன் காட்சியகங்களை புனரமைக்கவும் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.
நேரடியாக விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் 11-வது தவணை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 48,307 விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.
பயிர்க்காப்பீடு திட்டத்தில் 3,239 பேர் பயன்பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 4 வட்டங்களில் 96,970 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
தற்போது 85,369 குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
39,818 இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. நீலகிரியில் 72 நீர்நிலைகளில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






