என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது.
    • அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை காணவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    இந்த பகுதிக்கு செல்லும் பாதை மலைப்பாதையாகும். இதனால் கவனமுடன் செல்ல வனத்துறையினரும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

    அப்படி வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், ஆபத்தை உணராமல் ஆபத்தான இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் எல்லாம் அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கைப்ைபயை போலீசார் மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
    • சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது

    ஊட்டி

    கூடலூா் வட்டம் நியூ ஹோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆட்டோவில் பயணித்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோவை விட்டு இறங்கும் போது தனது கைப்பையை ஆட்டோவிலேயே விட்டு சென்றதாக தெரிகிறது. சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது.உடனடியாக அவர் சம்பவம் குறித்து கூடலூா் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடலூா் டி.எஸ்.பி.மகேஷ்குமாா் தலைமையில் சாா்பு ஆய்வாளா் இப்ராஹிம், முத்து முருகன், அசோக் குமாா் அடங்கிய தனிப்படையினர் அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தடயத்தை சேகரித்தனா். தொடா்ந்து பெரிய சூண்டி பகுதியில் சம்மந்தப்பட்ட ஆட்டோவை செல்வதை அறிந்ததும், அங்கு சென்று ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் விசாரனை நடத்தி பெண் தவறவிட்ட 3 சவரன் தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

    • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது
    • நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அம்ரித் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி உத்தரவிற்கிணங்க, 1.1.2023 தேதியினை தகுதி நாளாகக்கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.

    இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முழுமையான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியர்களான துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதுதுல்லா (கூடலூர்), நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), திரு.கிருஷ்ணமூர்த்தி (குன்னூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, தேர்தல் தாசில்தார் புஷ்பா தேவி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள் ராஜசேகர் (ஊட்டி),காயத்ரி (கோத்தகிரி), நடேசன் (பந்தலூர்), சித்தராஜ் (கூடலூர்), இந்திரா (குந்தா) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.
    • தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் டபுள் ரோடு, ரன்னிமேடு வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த மாதம் 16-ந் தேதி வந்தது.

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் உலிக்கல், சின்னக்கரும்பாலம், கிளன்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி மாறி முகாமிட்டு வருகின்றன.

    இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.

    யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.

    தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் மக்களும் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

    இந்த யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடாமலும், சாலை பகுதிகளுக்குள் வந்துவிடாமலும் தடுப்பதற்காக வனத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

    தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    • வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது.
    • மீட்கும் முன்பே காட்டெருமை இறந்தது.

    அரவேணு,

    கோத்தகிரி பழைய உழவர் சந்தை வளாகத்திற்கு அருகே தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் பின்புறம் நேற்று அதிகாலை மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறியது. அப்போது அதன் எடை தாங்கமல் தொட்டியின் மேல் மூடி உடைந்து விழுந்தது. இதில் கழிவுநீர் தொட்டிக்குள் காட்டெருமை தவறி விழுந்ததுடன், வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி தவித்த காட்டெருமையை கிரேன் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காட்டெருமை சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவர் ராஜனும் வரவழைக்கப்பட்டார். ஆனால், குறுகிய தொட்டிக்குள் சிக்கி இருந்ததால், மீட்கும் முன்பே காட்டெருமை இறந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் காட்டெருமை உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 4 வயதான ஆண் காட்டெருமை என கூறினர். 

    • கூடுதல் வடிகால் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும்.
    • தரையில் அருகில் உள்ள பசுமையாக விரைவில் உதிர்கிறது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பூத்துக் குலுங்கும் டேலியா பூக்கள். தற்போது இந்த வகை பூக்கள் அழிந்து கொண்டே வருகிறது.

    இந்த டேலியா பூவானது சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ரோஸ் போன்ற பல கலர்களில் கண்ணை கவரும் வகையில் பூத்துக் குலுங்க கூடிய கோடைகால மலராகும்.

    இது டேலியா இம்பீரியலிஸ், அல்லது பெல்ட்ரீ டேலியா, 8 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரும். இவை ஆஸ்டெரேசி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய பூக்கும் தாவரமாகும். இந்த வகை பூக்கள் மெக்சிகோ, பெலிஸ், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார், நிக்கராகுவா, கோஸ்டாரிகா, பனாமா மற்றும் தெற்கு கொலம்பியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது.

    இது மேட்டு நிலங்களின் தாவரமாகும், இந்த பூக்கள் முக்கியமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல மலைகளின் அடிவாரத்தில் (கீழ் காடுகளின் ஈரப்பதத்திற்கு மேல்), 1,500-1,700 மீட்டர் (4,900-5,600 அடி) உயரத்தில் காணப்படுகிறது.இது லேசான காலநிலையில் குறுகியதாக இருக்கலாம். அதன் நிலத்தடி அடித்தளத்திலிருந்து, ஆலை வெற்று, கரும்பு போன்ற, 4-பக்க தண்டுகளை வீங்கிய முனைகள் மற்றும் பெரிய, முப்பரிமாண இலைகளுடன் அனுப்பத் தொடங்கும்.

    தரையில் அருகில் உள்ள பசுமையாக விரைவில் உதிர்கிறது.

    டேலியா மரம் பொதுவாக இலையுதிர்காலத்தில் உறைபனி அபாயத்திற்கு முன் பூக்கும்.

    விதை அல்லது தண்டு வெட்டல் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 30 செமீ (12 அங்குலம்) நீளம் மற்றும் குறைந்தபட்சம் இரண்டு கணுக்கள், கிடைமட்டமாக மண்ணின் கீழ் இடப்பட்டது. பட்டாணி சரளை, சிதைந்த கிரானைட் அல்லது கிரிட் ஆகியவற்றைக் கொண்டு மேல்-உரவித்தல் விருப்பமானது ஆனால் ஈரப்பதம் தக்கவைத்தல், அரிப்பு கட்டுப்பாடு மற்றும் கூடுதல் வடிகால் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும்.

    • கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனையின் பழைய அவசர சிகிச்சை பிரிவு போதிய வசதிகள் இல்லாததால் ஒரே சமயம் அதிக நோயாளிகள் வந்தால் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரி செய்யும் விதமாக மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கியது. தற்போது அந்த கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவசர சிகிச்சைக்கான கட்டிட பணிகள் விரைவில் முடிந்து செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
    • கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்குள்ள பூங்காக்கள், வனம் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்த்து மகிழ்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பார்கள்.

    அவர்கள் நூற்றாண்டு புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் தாவரவியல் பூங்காவிற்கு 28.11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த நிலையில் 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாகவும், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் ஒமைக்ரான் தொற்று பரவியது. இருந்தபோதும், பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.

    இதனால் கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. அதன்பின் ஆண்டு முழுவதும் கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதில் மலர் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்கள் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 பேர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர்.
    • நோய் மனிதர்கள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு பரவுவது குறித்த தகவல் இல்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

    இந்தநிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

    கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இந்நோய் மேலும் பரவாத வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பந்திப்பூர் புலிகள் காப்பகத்துடன் முதுமலை புலிகள் காப்பகமும் இணைந்து அமைந்துள்ளதால், இங்கும் பன்றிகள் அதிகளவு இறந்துள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 15 காட்டுப்பன்றிகள் இறந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு இந்திய கால்நடை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இருப்பினும் இந்த பன்றிகளும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் இறந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நோய் மனிதர்கள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு பரவுவது குறித்த தகவல் இல்லை. இருந்தபோதும் பன்றிகளுக்கு அதிகம் பரவக்கூடிய சூழல் உள்ளது. இதனால் பந்திப்பூர் மற்றும் முதுமலை பகுதிகளில் காட்டு பன்றிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே வனத்துறை இதன் பரவலை கட்டுப்படுத்திட தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட குந்தா மற்றும் கோத்தகிரி வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 200-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன.

    இவற்றின் உடல் பாகங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் இறப்பு இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும், உரிய வழிமுறைகளை பின்பற்றி அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் எனவும் வனச்சரகர்களுக்கு, வனத்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பாரம்பரிய உடை அணிந்து பழங்குடி மக்கள் நடனமாடினர்.
    • பெண்கள் தனித்தனி குழுவாக பாரம்பரிய நடனம் ஆடி வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அரவேணு,

    கோத்தகிரியில் வாழ்ந்து வரும் கோத்தர் இன பழங்குடி மக்களின் குல தெய்வமான அய்யனோர்-அம்மனோர் கோவில், நேரு பூங்கா வளாகத்தில் உள்ளது. இந்த கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஆகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடை திறக்கப்பட்டு, கம்பட்டராயர் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பண்டிகை, கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள புது கோத்தகிரி கிராமத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி பிறை கழித்தல் என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதையொட்டி கிராம மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து அங்குள்ள கம்பட்டராயர் கோவில் முன்பு இரவு நேரத்தில் தீ மூட்டி அதை சுற்றி தங்களது பாரம்பரிய நடனம் ஆடி வழிபட்டு வந்தனர். கல் தூக்கும் நிகழ்ச்சி இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊர் பூசாரிகள் ரங்கன், மாயகிருஷ்ணன், லட்சுமணன் மற்றும் விரதம் இருந்த இளைஞர்கள் பலர் தங்களது கிராமத்தில் உள்ள கோவிலின் கூரையை புதுப்பிக்க வனப்பகுதிக்கு சென்று மூங்கில், இலை, தழைகளை சேகரித்து வந்தனர். பின்னர் கோவிலில் உள்ள சுமார் 100 கிலோ எடை கொண்ட கல்லை கடும் விரதம் இருந்து வந்த ஊர் பூசாரிகள் உள்பட மொத்தம் 11 பேர் தங்களது வலது கை நடு விரலை மட்டும் பயன்படுத்தி தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதாவது 11 விரல்களால் மட்டும் அந்த கல் தூக்கப்படும். அப்போது அந்த கல் சுமார் 4 அடி முதல் 8 அடி உயரம் வரை நிலத்தில் இருந்து மேலே தூக்கப்படும் என்று கூறப்படுகிறது. தூக்கப்படும் உயரத்தை வைத்து, இந்த ஆண்டு கிராமம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பது ஐதீகமாக உள்ளது.

    இதையடுத்து மதியம் 2 மணி முதல் வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மூங்கில் உள்ளிட்டவற்றை கொண்டு கோவிலின் மேற்கூரையை புதுப்பித்தனர். பண்டிகையின் முக்கிய நாளான நேற்று காலையில் புதுகோத்தகிரி பூசாரிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் தங்களது பாரம்பரிய உடை அணிந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த குல தெய்வ கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் ஊர் பூசாரிகள் மற்றும் ஊர் நாட்டாமை முத்து கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆதி கோவில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றி தூபம் காட்டி கம்பட்டராயருக்கு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் கோவில் முன்புறம் உள்ள நடுகல்லை சுற்றி தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் கோவில் நடை மீண்டும் பூட்டப்பட்டது.

    இன்று (திங்கட்கிழமை) புதுகோத்தகிரியில் உள்ள கோவிலில் சாமை அரிசி சோறு மற்றும் பட்டாணி, அவரை, தட்டப்பயிறு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட உப்பு சாம்பாருடன் நெய் சேர்த்து, கடவுளுக்கு பொங்கலிட்டு படைத்து வழிபாடு நடக்கிறது. அதன்பின்னர் கிராம மக்கள் அனைவருக்கும், அதே உணவு அன்னதானமாக வழங்கப்படுகிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி குழுவாக பாரம்பரிய நடனம் ஆடி வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    • கல்லூரிகளுக்கு ஜனவரி 2-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • படகு உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து குளு குளு காலநிலையை அனுபவித்தனர்.

    கோத்தகிரி,

    தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 2-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, தொடர் விடுமுறையை கொண்டாடும் வகையில், நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் கூடினர்.

    நீலகிரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். குறிப்பாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் எந்திரப் படகு, மிதி படகு, துடுப்பு படகு உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து குளு குளு காலநிலையை அனுபவித்தனர்.

    சிறுவர்கள் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாலும் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரனங்கள் சிறுவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததாலும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஊட்டி வருகை புரிந்ததாகவும், சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக குளு, குளு காலநிலையை அனுபவிக்க இங்கு வந்துள்ளதாகவும் பகல் வேளையிலும் பனி சூழ்ந்த நிலையில் தாவரவியல் பூங்காவில் மலர்களை கண்டு ரசிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    • 180 பேர் நேற்று பாதயாத்திரையாக, காவடிகள் ஏந்தி பழனி மலைக்கு புறப்பட்டு சென்றனர்.
    • ஒவ்வொரு ஆண்டும் பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    அரவேணு,

    கோத்தகிரியில் இருந்து பழனி மலை முருகன் கோவிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பழனி மலை முருகன் கோவிலில் ஜனவரி மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதையொட்டி கோத்தகிரி பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம்.

    இதன் ஒரு பகுதியாக ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று காலை 10 மணிக்கு கோத்தகிரி கடை வீதி பகுதியில் உள்ள பழனி முருகன் பாதயாத்திரை குழு சார்பில், அதன் தலைவர் வடிவேல் தலைமையில் தொடர்ந்து 28-வது ஆண்டாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பெண்கள் உள்பட சுமார் 180 பேர் நேற்று பாதயாத்திரையாக, காவடிகள் ஏந்தி பழனி மலைக்கு புறப்பட்டு சென்றனர்.  

    ×