என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- கல்லூரிகளுக்கு ஜனவரி 2-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- படகு உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து குளு குளு காலநிலையை அனுபவித்தனர்.
கோத்தகிரி,
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 2-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொடர் விடுமுறையை கொண்டாடும் வகையில், நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் கூடினர்.
நீலகிரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். குறிப்பாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் எந்திரப் படகு, மிதி படகு, துடுப்பு படகு உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து குளு குளு காலநிலையை அனுபவித்தனர்.
சிறுவர்கள் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாலும் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரனங்கள் சிறுவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததாலும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஊட்டி வருகை புரிந்ததாகவும், சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக குளு, குளு காலநிலையை அனுபவிக்க இங்கு வந்துள்ளதாகவும் பகல் வேளையிலும் பனி சூழ்ந்த நிலையில் தாவரவியல் பூங்காவில் மலர்களை கண்டு ரசிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.






