என் மலர்tooltip icon

    நீலகிரி

    • காட்டு யானைகள் தனித்தனி குழுவாக சுற்றி திரிகிறது.
    • வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சாலையை கடந்து வருகின்றனர்.

    குன்னூர்:

    குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சமவெளி பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது.

    இதனால் வனவிலங்குகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக காட்டு யானைகள் தனித்தனி குழுவாக சுற்றி திரிகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு காட்டேரி பூங்கா பகுதியில் 5 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி குன்னூர்-மேட்டுப்பளையம் மலைப்பாதைக்கு வந்தது.

    யானைகள் சாலையில் அங்குமிங்கும் நடமாடியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தங்கள் வாகனங்களை சிறிது தொலைவிேலயே நிறுத்தி விட்டு, யானையை பார்த்தனர்.

    மேலும் யானை பார்த்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியாக சத்தம் போட்டனர். ஆனால் யானைகள் அங்கிருந்து நகரவே வில்லை.

    தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் சுற்றிய யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றது. அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து தங்களது வாகனங்களை இயக்கி சென்றனர்.

    யானைகள் நடமாட்டம் அடிக்கடி இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே இந்த சாலையை கடந்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் எக்காரணத்தைக் கொண்டும் அதை புகைப்படம் எடுக்கக் கூடாது. தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மலைப்பாதையில் பயணிப்பதால் வன விலங்குகளை அவர்கள் இடையூறு செய்யாத வகையில் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • சுத்தகல் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர்.
    • விழாவை முன்னிட்டு அனைவருக்கும் பாரம்பரிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடுகின்றனர்.

    ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் பண்டிகையை கொண்டாடினர்.

    இதையொட்டி பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடந்து சென்றனர்.

    கோவிலுக்கு சென்றதும், அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து, சுத்தகல் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர். தொடர்ந்து பக்தர்கள் காரக்கொரை மடிமனைக்கு வந்தனர்.

    நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது. சிறப்பு பூஜை நடத்தி, கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். பின்னர் கும்பம் எடுத்து வந்த பூசாரி உள்பட பக்தர்கள் 11 பேரும் குண்டம் இறங்கினர்.

    தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கலந்துகொண்டனர்.

    விழாவை முன்னிட்டு அனைவருக்கும் பாரம்பரிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாளை பந்துமி கிராமத்தில் ஹெத்தை அம்மன் கோவில் விழா நடக்கிறது. தொடர்ந்து வருகிற 20-ந் தேதி(திங்கட்கிழமை) குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் ஆரூர் கிராம மக்கள் சார்பில் மாபெரும் ஹெத்தை பண்டிகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு இடங்களில் கோத்தர் இன மக்கள் அய்யனோர், அம்மனோர் தெய்வங்களை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
    • சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரியம் கலாச்சாரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை தற்போதும் கடைபிடித்து வருகிறார்கள்.

    இயற்கையின் படைப்பில் விவசாயம் மற்றும் எருதுகள் மேய்ப்பது உள்ளிட்டவை இவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையாகும். தற்போது சமகாலத்தில் கல்வி, பொருளாதாரம் என மேம்பட்டாலும், தங்களது பாரம்பரியத்தை கைவிடாது வாழ்ந்து பண்டிகைகளை கொண்டாடி வருகிறார்கள்.

    குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோத்தர் இன மக்கள் அய்யனோர், அம்மனோர் தெய்வங்களை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் அய்யனோர், அம்மனோர் பண்டிகையை தங்களது பாரம்பரிய பண்டிகையாக கொண்டுகின்றனர். இதனை கம்பட்ராயர் திருவிழா எனவும் அழைக்கின்றனர்.

    இவர்கள் வெளி ஆட்களை தங்களது புனித இடத்திற்குள் அனுமதிப்பது இல்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் வெண்ணிற ஆடை அணிந்து திருவிழாவை கொண்டாடுகின்றனர். வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான கம்பட்ராயர் திருவிழா கடந்த வாரம் ஊட்டி அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் தொடங்கியது.

    முதல் நாளில் ஆண்டிற்கு ஒருமுறை திறக்கப்படும் கோவிலில் காணிக்கைகள் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நடக்கும் இந்த விழாவில் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர். நேற்று அய்யனோர், அம்மனோர் கோவில் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.

    கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். கோத்தர் இன ஆண்கள் 5க்கும் மேற்பட்டோர் இசைக்கருவிகளை இசைக்க தொடங்கினர். அவர்கள் இசைக்க தொடங்கியதும், அங்கு கூடியிருந்த கோத்தர் இன ஆண்களும், பெண்களும் வட்டமாக நின்று கொண்டு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.

    அதனை தொடர்ந்து கோத்தர் இன மக்கள் பல்வேறு வண்ண உடைகள் அணிந்து வந்தனர். அப்போது தலைப்பாகை அணிந்து ராஜ உடையுடன் பாரம்பரிய நடனமாடினர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு இயற்கை துணைபுரிய வேண்டி இந்த திருவிழா நடைபெறுவதாக கோத்தர் இன மக்கள் தெரிவித்தனர். இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

    • பள்ளிக்குழந்தைகளுக்கு யோகா பயிற்சியும் அளித்து ஊக்குவித்தனர்.
    • நிகழ்ச்சியின் முடிவில் ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    குன்னூர்:

    பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி சர் பிரான்சிஸ் புட்சாரிடம் இருந்து இந்திய ராணுவ அதிகாரி ஜெனரல் கே.எம்.கரியப்பாவிடம் ஜனவரி 15-ந்தேதி ராணுவ பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

    அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந்தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் நேற்று 77-வது ஆண்டு ராணுவ தினம் கமாண்டன்ட் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    அப்போது ராணுவ வீரர்கள் பங்கேற்ற களரி, செண்டைமேளம், சிலம்பம், வாள்சண்டை போன்ற சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    தொடர்ந்து தற்காப்பு கலைகளும் செய்து காண்பிக்கப்பட்டன. பள்ளிக்குழந்தைகளுக்கு யோகா பயிற்சியும் அளித்து ஊக்குவித்தனர்.

    வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள், அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் கண்டுகளித்து ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • சமீப காலங்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, புலி போன்ற விலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.
    • வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள எடக்காடு பகுதி முக்குருத்தி, அவலாஞ்சி வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பகுதி சிறுத்தை, புலி, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.

    சமீப காலங்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, புலி போன்ற விலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளில் பொருட்களை தேடுவது, வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை அடிப்பது, விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு எடக்காடு அருகே உள்ள சாலையை புலி ஒன்று கடந்து சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது.

    சாலையை புலி கடந்து சென்ற சம்பவத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லண்டனில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாமி ஊர்வலத்தில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
    • தமிழ் கலாச்சாரமும், தமிழ் மக்களின் அன்பும் சர்க்கரைப் பொங்கல் போல் உள்ளது.

    குன்னூர்:

    தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக குன்னூர் டென்ட்ஹில் பகுதியில் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு புனித தீர்த்த குடங்களுடன் தாரை-தப்பட்டை முழங்க, ஆடல் பாடலுடன் ஊர்வலம் தொடங்கியது. பாலகிளாவா, நீதிமன்றம், லெவல் கிராஸ், மவுண்ட் ரோடு வழியாக அணிவகுத்த ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலில் முடிவடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    பின்னர் டென்ட்ஹில் பகுதியில் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தந்தி மாரியம்மன் திருவீதி ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் வாண வேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது.

    முன்னதாக லண்டனில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாமி ஊர்வலத்தில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து லண்டனை சேர்ந்த சார்லஸ் கூறியதாவது:-

    கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு தற்போது குன்னூர் வந்து உள்ளோம். இங்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை, ஊர்வலத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தோம்.

    எங்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து கவுரவித்தனர். பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வியந்து போனோம். இந்த நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாதது. தமிழ் கலாச்சாரமும், தமிழ் மக்களின் அன்பும் சர்க்கரைப் பொங்கல் போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குன்னூர் நகரமன்ற தி.மு.க. உறுப்பினர் சையதுமன்சூர் மற்றும் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.
    • வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே பெண் யானை ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த யானை திடீரென பாறை சறுக்கி மலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அதனுடன் பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவிந்திரநாத் தலைமையிலான வனக்குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். அதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதையடுத்து வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பலியான யானையுடன் மேலும் சில யானைகள் இருந்துள்ளன. யானை பள்ளத்தில் விழுந்து இறந்ததும் மற்ற யானைகள் தூரத்தில் நின்றபடி வேதனையுடன் பார்த்துள்ளன. இதனால் அந்த யானைகள் தங்களை தாக்கி விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்களில் உறைபனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • தேயிலை தோட்டங்களில் உறைப்பனி தாக்கத்தால் செடிகள் கருகி மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டியில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகள் காஷ்மீர் போலவே பனிகள் படர்ந்து காட்சியளிக்கின்றன.

    அதிலும் குறிப்பாக ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதியில் உள்ள புல்வெளி மைதானங்களில் உறைபனி படிந்து உள்ளது. இதன் காரணமாக பச்சைப்பசேலென காட்சியளிக்கும் புற்கள், தற்போது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் வெண்மையாக காணப்பட்டது.

    மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது உறைப்பனி கொட்டி கிடந்ததால் வாகனங்களும் வெள்ளை நிறமாக காட்சி அளித்தன. அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனங்கள் மீது கொட்டி கிடந்த உறை பனியை வாகன ஓட்டிகள் அகற்றுவதை பார்க்க முடிந்தது.

    ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்களில் உறைபனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வெம்மை ஆடைகளை அணிந்து உறைப்பனியிலும் கேரட் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள், அங்குள்ள பகுதிகளில் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    உறைபனி தாக்கத்தால் செடி, கொடி மற்றும் புற்கள் காய்ந்து வறட்சியான கால நிலை நிலவுவதால் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. ஊட்டியின் புறநகர பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உறைப்பனி தாக்கத்தால் செடிகள் கருகி மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் விவசாயிகள் 'கோத்தகிரி மலார்' செடிகளை கொண்டு தேயிலை தோட்டங்களை மூடிவைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ஊட்டியில் ஜனவரி மாதம் இறுதிவரை உறைப்பனி தென்படும் சூழல் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு உறைபனி அதிகமாக காணப்பட்டது. அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் புறநகர பகுதிகளான ஜிம்கானா, ஸ்டாப் காலேஜ், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை உறை பனிப்பொழிவு கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள புல்வெளிகள் மீது உறைபனி படிந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சியளித்தது.

    குன்னூர் நகரில் சராசரி வெப்பநிலை 2.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், சமவெளி பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    • குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் வாய்ந்த மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக 2-வது சீசனின் போது வடமாநில சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் ஆர்வமுடன் சென்றனர்.

    மலை ரெயில் பயணம் தேயிலை தோட்டங்கள், பல்வேறு குகைகள் என சிறந்த அனுபவத்தை தருகிறது. இதனால் மலை ரெயில், பாரம்பரிய யுனஸ்கோ அந்தஸ்து பெற்று உள்ளது. சாய்வு அதிகம் என்பதால் இந்தியாவிலேயே மிக குறைந்த வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக 4 பர்னஸ் ஆயில் என்ஜின்கள் இருந்தன.

    குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயில் மூலம் மலை ரெயிலை இயக்குவதால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பர்னஸ் ஆயில் என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் முயற்சியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்படி பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்ட கடைசி பர்னஸ் ஆயில் என்ஜினான 37397 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் திருச்சி பொன்மலை பணிமனையில் டீசல் என்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டு புதிதாக பொலிவுபடுத்தப்பட்டது.

    இதையடுத்து அந்த டீசல் என்ஜின் மலை ரெயிலில் 4 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு இரும்பு பாரங்களை ஏற்றி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • சென்னை, சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
    • வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை.

    சீனாவை அச்சுறுத்திய எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. கர்நாடகா, குஜராத்தில் 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை, சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து பீதி அடையவேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கு போன்ற தடுப்பு நடவடிக்கைதான் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றுக்கும் உள்ளது. இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருவோர் முககவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    எச்.எம்.பி.வி தொற்று பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்திற்கு வருவோர் முககவசம் அணிவது கட்டாயமாகிறது.

    சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிவது கட்டாயம் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    • தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம்.
    • குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக்காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டு புயல் மழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது.

    அங்கு கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.


    ஊட்டியில் அவலாஞ்சி, தலைகுந்தா, காந்தள் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் உறை பனி நிலவி வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது. மேலும் பச்சை புல்வெளிகள் மற்றும் வாகனங்களில் பனிப்படலத்தை பார்க்க முடிகிறது.

    சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள், புல்வெளிகளில் படர்ந்துள்ள பனிகளை கையில் எடுத்து விளையாடி வருகின்றனர்.

    • 2022-ம் ஆண்டுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
    • கடந்தாண்டு மே மாதம் முதல் இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுவது புள்ளி விவரங்கள் வாயிலாக தெரிய வந்து உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

    தொடர்ந்து 2022-ம் ஆண்டுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.

    அதிலும் குறிப்பாக 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றது தெரியவந்து உள்ளது.

    இது கடந்த 2022-ம்ஆண்டை காட்டிலும் 4 லட்சம் அதிகம்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு மே மாதம் முதல் இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2023-ம் ஆண்டு டன் ஒப்பிடுகையில் கடந்தாண்டில் நீலகிரிக்கு சுமார் 4 லட்சம் பயணிகள் குறைவாக வருகை தந்து உள்ளது தெரியவந்து உள்ளது.

    அதாவது கடந்த 2024 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 31-ந்தேதிவரை, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 23 லட்சத்து 95 ஆயிரத்து 894 பயணிகள் மட்டுமே வந்து உள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை சார்ந்து செயல்படும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுதொடர்பாக நீலகிரி சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பேர் சுற்றுலா வருகின்றனர். ஆனால் இங்கு பயணிகளுக்கான சுற்றுலா திட்டம் இதுவரை வரையறுக்கப்படவில்லை. ஊட்டியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். மேலும் மருத்துவம், விளையாட்டு சுற்றுலாக்களையும் திட்டமிடுவது அவசியம்.

    ஊட்டியில் நிரந்தர பொருட்காட்சி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கருத்தரங்குகளை நடத்துவதற்காக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஊட்டியில் ரோஜா பூங்காவுக்கு பிறகு சுற்றுலா தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. மேலும் சுற்றுலா பயணிகளை கவர ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து பொருளாதாரமும் உயர வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நீலகிரி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி இருப்பவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் உள்ளூர் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த வணிகத்தில் 45 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இ-பாஸ் முறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டு மென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×