என் மலர்
நீலகிரி
- ராஜேந்திரன் என்பவர் 32 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார்.
- நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் ராஜேந்திரன் என்பவர் 32 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார். இந்த நிலையில் அவரை கவுரவப்படுத்துவது என்று ஊட்டி 7 வது வார்டு நகரமன்ற உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான விசாலாட்சி விஜயகுமார் முடிவு செய்தார்.
எனவே அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற தூய்மைப்பணியாளர் ராஜேந்திரனை வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு சால்வை அணித்து, மதியஉணவு விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவு
- மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது
ஊட்டி,
கோத்தகிரி நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, கருஞ் சிறுத்தை, புலி, காட்டு யானைகள், மான்கள், காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதுடன் அவற்றின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் அவ்வப்போது மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலைக்கு அருகே கார்சிலி பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கருஞ்சிறுத்தை மற்றும் முதுகில் 2 குட்டிகளை சுமந்து செல்லும் தாய்க்கரடி உள்ளிட்டவை உலா வந்த வண்ணம் உள்ளன. இந்த காட்சிகள் அங்குள்ள தனியார் தொழிற்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் குறித்த செய்தி வெளியே பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் திரியும் வன விலங்குகள் தாக்கி பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பயணிகளுக்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் வினியோகம் செய்துள்ளது.
ஊட்டி,
சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழும் நீலகிரி, மற்றொரு புறம் உயிர் சூழல் மண்டலத்தின் முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர், 2 லிட்டர் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கவும் தடை செய்யப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. ஆனாலும் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடும் பெரிய அளவில் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் கர்நாடக மாநில அரசு பஸ்சில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் இருப்பதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி தலைமையிலான வருவாய்த் துறையினர் ஊட்டி பஸ் நிலையம் சென்று கர்நாடக மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர். இதில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் இருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் வழங்கியதாக கர்நாடக அரசு பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- நீலகிரி மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 456 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
- அரக்கோணத்தில் இருந்து 43 பேர் அடங்கிய தேசியபேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே அங்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் கூடலூர் அடுத்த ஓவேலி சூண்டி ரோட்டில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினார்கள்.
இதற்கிடையே நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது. இதில் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 283 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளை கண்காணிக்க 42 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 456 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
அடுத்தபடியாக வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி, மருத்துவம், போலீசார், தீயணைப்பு, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, சுகாதாரம், குடிமைப்பொருள் வழங்கல் ஆகிய துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.
அனைத்து தாலுகாக்களிலும் பேரிடர் மீட்பில் பயிற்சி பெற்ற 3500 முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் 200 பேரிடர்கால நண்பர்கள் ஆகியோர் தயாராக உள்ளனர்.
எனவே அரக்கோணத்தில் இருந்து 43 பேர் அடங்கிய தேசியபேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஊட்டி, கூடலூர் கோட்டத்தில் முகாமிட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்புக்குழுவுடன் இணைந்து செயல்பட தயார்நிலையில் உள்ளது. இதுதவிர பருவமழை மற்றும் இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அதேபோல ஊட்டி: 0423-2445577, குன்னூர்: 0423-2206002, கூடலூர்: 04262-261295 ஆகிய கோட்டங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, கலெக்டர் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரி பிரவீண் பிரசாத், பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் காயத்ரி, ஊட்டி தாசில்தார் சரவணக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல கோவை மாவட்டம் வால்பாறை பகுதியிலும் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறை-சோலையாறு ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அந்த பகுதியை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வால்பாறையில் நேற்று காலை நிலவரப்படி 37 மி.மீ, மேல் நீராற்றில் 39 மி.மீ, சோலையாறு அணையில் 22 மி.மீ. மழை பெய்து உள்ளது. இதனால் சோலையாறு அணையில் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 252 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
- நீலகிரி பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
- நீலகிரியில் முதல் போகத்தில் அறுவடையாகும் பூண்டு, சமையலுக்கு மட்டும் உகந்தது.
அரவேணு:
கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூண்டுகளை பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் கொண்டது. எனவே நீலகிரி பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
கோத்தகிரியில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால், பூண்டு பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளன. இதற்கு போதிய கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறுகையில், நீலகிரியில் முதல் போகத்தில் அறுவடையாகும் பூண்டு, சமையலுக்கு மட்டும் உகந்தது. 2-ம் போகத்தில் அறுவடையாகும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே 2-ம் போகத்தில் விளையும் பூண்டு விதைகளை, நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
நீலகிரி பூண்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.30 மட்டுமே கொள்முதல் விலை கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் நடவு செய்யப்பட்ட பூண்டுக்கு, தற்போது ரூ.120 முதல் ரூ.140 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. நீலகிரி பூண்டுக்கான கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
- ராசாத்தி தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார்.
- கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கொட்டகம்பை பகுதியை சேர்ந்தவர் மல்லன். இவருடைய மனைவி ராசாத்தி (வயது 60). இவர் தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராசாத்தி வீட்டின் மேல் தளத்தில் காய போட்டிருந்த துணிகளை எடுத்து வருவதற்காக படிகட்டுகளில் ஏறி சென்றார். அப்போது கால் தவறி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் ராசாத்தி வராததால், குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது ராசாத்தி காயமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராசாத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.
- மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் மே மாத இறுதியில் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்வது வழக்கம். நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்தது. இந்தநிலையில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த மாதமும் மழை பெய்ய வில்லை. தினமும் மாலை நேரத்தில் பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் வறட்சியால் காய்ந்து கிடந்த வனப்பகுதிகள் பசுமையாக மாறியது. காலை முதல் மாலை வரை மிதமான வெயிலும், அதன் பின்னர் சாரல் மழையும் இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. ஆனால் பருவமழை தீவிரம் அடைய வில்லை.
இதனால் கூடலூர் பகுதியில் உள்ள மாயாறு, பார்வுட் ஆறு உள்பட அனைத்து நீர் நிலைகள் வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. எப்போது தண்ணீர் ஓடி கொண்டிருக்கும் நீரோடைகள், தண்ணீர் இன்றி வெறுமனே காணப்படுகிறது.
மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளிலும் தண்ணீர் வரத்து மிக குறைவாகவே உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் பருவமழை சரியாக பெய்யாமல் உள்ளதால் குறுமிளகு உள்ளிட்ட பணப்பயிர்களின் விளைச்சலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே அந்தந்த காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் நடவு செய்ய முடியும். மேலும் குறுமிளகு உள்ளிட்ட பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் பாதிக்காமல் இருக்கும். தற்போது பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்வதால் தேயிலை செடிகளுக்கு மட்டுமே உகந்ததாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பொதுமக்களுக்கு ரேலியா அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.
- 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஊட்டி
குன்னூா் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ரேலியா அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணையில் அங்கு தண்ணீர் இருப்பு, கடந்த சில மாதங்களாக 33 அடி என்ற அளவில் இருந்தது. எனவே குன்னூரில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குன்னூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ரேலியா அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வருகிறது. அந்த அணையின் ஒட்டுமொத்த கொள்ளளவு 43.6 அடி ஆகும். அங்கு தற்போது 40 அடி என்ற அளவில் தண்ணீர் உள்ளது. இதே போல பெள்ளட்டிமட்டம், கரன்சி தடுப்பணைப் பகுதிகளிலும் நீா் மட்டம் உயா்ந்து உள்ளது.குன்னூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை காரணமாக ரேலியா அணை 40 அடியை தொட்டு உள்ள தால், அங்கு தடையின்றி குடிநீா் வழங்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினா். இது பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எப்போதுமே இதமான காலநிலை காணப்படும்.
இந்த கால நிலையை அனுபவிக்கவும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.
குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த மே மாதம் நடந்த கோடை கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர். அவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்து சென்றனர்.
கோடை விடுமுறை முடிந்த பின்னரும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டும். அப்போது சுற்றுலாபயணிகள் வருகை வெகுவாக குறைந்து இருக்கும். தற்போது பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் சுற்றுலாபயணிகள் வருகையானது தொடர்கிறது.
தற்போது பக்ரீத் பண்டிகை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கேரள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.
ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி படகு இல்லம், பைக்கார படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டு பூத்து குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்ததுடன், அதனுடன் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
நேற்று ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக மாவட்டத்தின் நுழைவு வாயிலான கூடலூர், குஞ்சபனை, பர்லியார் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது கூடலூர் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து சென்றன.
நீலகிரியில் கோடை சீசன் காரணமாக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது கோடைசீசன் முடிவடைந்தையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீசன் முடிந்த பின்னரும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி முதல் கல்லட்டி வரை சாலையோரங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சாலைகளில் உலா வருகின்றனர்.
சிலர் வனங்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மான் உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அத்துமீறுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.
- உறுப்பினர்களின் வருகைப் பதிவு, மொபைல் ஆப்பில் பதிவு செய்யபட்டது.
- பள்ளிக்கு இந்த ஆண்டில் செயல்படுத்த வேண்டிய குறுகிய- நீண்ட கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அரவேணு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் நடப்பாண்டின் முதல் மேலாண்மைக் குழு கூட்டம், தலைவி கலாராணி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான ராம்குமார் முன்னிலை வகித்தார். கடசோலை பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார். அதன்பிறகு உறுப்பினர்களின் வருகைப் பதிவு, மொபைல் ஆப்பில் பதிவு செய்யபட்டது.
இதனை தொடர்ந்து பள்ளிக்கு இந்த ஆண்டில் செயல்படுத்த வேண்டிய குறுகிய- நீண்ட கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதன.
கடசோலை பள்ளி மேலாண்மை குழுக்கூட்டத்தில் குழந்தைகள் இடைநிற்றல்,மாணவர் கற்றல் திறன் மேம்பாடு, வாசிப்புத் திறன் அபிவிருத்தி, மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி, தங்கு தடையற்ற குடிநீர், இலக்கிய மன்றம் நடத்துதல், ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு, பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேலி அமைத்தல், இல்லம் தேடி கல்வி கண்காணிப்பு, முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம், தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் பாலசுப்ரமணி, ரெனிதா பிரபாவதி, ராஜேந்திரன், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மேரி ஜெனிபர், ஜீவசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற 5-ந் தேதி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
- ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஊட்டி,
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2022-2023-ம் ஆண்டிற்கான மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, வருகிற 5-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-
இப்பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ- மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் வாயிலாக தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடம் இருந்து கட்டாயம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பள்ளி அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5000 என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்பெற உள்ளன.
போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். பரிசுத்தொகைகள் மற்றொரு நாளில் மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்படும்.
சென்னைத் தமிழ் வளர்ச்சி இயக்கத்திலிருந்து முத்திரையிட்ட உறைகளிலிருந்து பெறப்படும் தலைப்புகள், போட்டி தொடங்குவதற்கு முன்னர் நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் எடுத்து அறிவிக்கப்படும். 5.7.2023 புதன்கிழமை அன்று நடைபெறும் இப்போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில், உள்ள மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அம்ரித் கேட்டுக் கொண்டுள்ளார்.
- சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- சிவபெருமானுக்கு பால், தேன், பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
அரவேணு,
தமிழகத்தில் சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் சோமவார பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் ஆகும். இது மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சிறப்பு வாய்ந்தது. அப்போது சிவபெருமானை வழிப ட்டால் பக்தர்கள் நினைத்தது நடக்கும் என்று ஐதிகம்.
இதன் ஒருபகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் சோமவார பிரதோஷம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அதிகாலை நேரத்தில் ஹோமம் நடந்தது.
அதன்பிறகு மாலை நேரத்தில் சிவபெருமானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து சுவாமிக்கு வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அடுத்தபடியாக சிவபெருமானின் வாகனம் நந்தி தேவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்து, அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.
கோத்தகிரி சக்திமலை சிவன் கோவில் சோமவார பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரை பக்திப்பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






