என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே நி்ன்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த வெள்ளபாண்டி மனைவி சத்யா (வயது34), குருமனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்த வேதரெத்தினம் மகன் கார்த்திகேயன் (30), பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயராஜ் (40) ஆகியோர் என்பதும், அவர்கள் சாராயம் விற்றதும் தெரியவந்தது. 

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாகையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின்அற்புதராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர் ஆதித்தன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    இதில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆழ்வார்குளம் தென்கரையை சேர்ந்த குமார் மகன் சத்தியபாரதி (வயது22). இவர் சம்பவத்தன்று சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார். திருவிழந்தூர் தென்னமரச்சாலையை கடந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சைக்கிளின் முன்னால் வந்து நிறுத்தியதோடு, சைக்கிளின் பின்னால் கேரியரில் வைத்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியபாரதி கூச்சலிட்டார். அந்த கைப்பையில் வங்கி ஏ.டி.எம்.கார்டு, செல்போன் என ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக சத்தியபாரதி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மயிலாடுதுறை அருகே நீடூர் கீழத்தெருவை சேர்ந்த கலையரசன் மகன் கலைமணி (31) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கலைமணியை போலீசார் பிடித்து அவர் பறித்து சென்ற கைப்பை, செல்போன், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைமணியை கைது செய்தனர்.
    கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே ஆலங்குடி பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மணல் இருந்தது தெரிய வந்தது.

    இதற்கிடையே டிராக்டரில் வந்த 4 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், வடுகச்சேரி வடக்குதெருவை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ்(26), அதே பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் விஜய் (24), மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் ஆலங்குடி கடுவையாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மேலதண்ணிலப்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
    நாகூரில் குளத்தில் மூழ்கிய தொழிலாளி, சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    திருத்துறைப்பூண்டியை அடுத்த ஜாம்புவான் ஓடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). இவர் நாகூரில் உள்ள பைபர் படகு கட்டும் இடத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று நாகூர் மெயின் ரோட்டில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்த போது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவரை தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகையில் ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் முனிசிபல் பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). பெயிண்டர். இவருடைய மனைவி காஞ்சனா. கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகத்துக்கும், காஞ்சனாவுக்கும் இடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கடையூர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    திருக்கடையூர்:

    திருக்கடையூர் அருகே சின்னங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 80). இவருடைய கணவர் இடும்பன். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த லட்சுமி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த லட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாட புத்தகங்களை எடைக்கு போட்ட கல்வி அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நேற்று உதயமானது. நாகை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்படுவதற்கான அரசாணை கடந்த பிப் ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

    மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வரும் அனைத்து அரசு பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படும். தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பழைய இரும்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை பெருமாள்சாமி (வயது 55) என்பவர் நடத்தி வருகிறார். இடப் பிரச்சினை காரணமாக இந்த கடையை காலி செய்ய வேண்டும் என்று கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.

    இதற்காக மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் அதிகாரிகள் இரும்பு கடைக்கு சென்றனர். அங்கு காலி செய்வதற்கான நோட்டீசை கடை வாசலில் ஒட்டினர். அப்போது இந்த கடையை ஆர்.டி.ஓ. மகாராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடையின் ஒரு பகுதியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான 6 முதல் 12-ம் வகுப்பு வரை 2 டன் எடையில் 3,134 பாடப்புத்தகங்கள் பண்டல், பண்டல்களாக மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்குதகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடை உரிமையார் பெருமாள் சாமியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாட புத்தகங்களை மாவட்ட பள்ளி கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் லாரியில் ஏற்றி வந்து விற்பனைக்காக எடைக்கு போட்டது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி கல்வி ஊழியர் மேகநாதன், இரும்பு கடை உரிமையாளர் பெருமாள்சாமி ஆகிய 2 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து வருவாய்துறை, கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் கல்வி அதிகாரி மேகநாதன் மாணவர்களின் நலனில் அக்கறையின்றி அரசின் இலவச பாட புத்தகங்களை சுய நலத்திற்காக எடைக்கு போட்டது உறுதியானது. அதன்பேரில் அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி இன்று உத்தரவிட்டார்.

    விலையில்லா பாட புத்தகங்களை பள்ளி கல்வி அதிகாரியே எடைக்கு போட்ட சம்பவம் கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோடியக்கரையில், மீனவரின் வலையில் 110 கிலோ எடையுள்ள சுறா மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.26 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி நடைபெறும் மீன்பிடி பருவம் சிறப்பு பெற்றது. அந்த வகையில் அக்டோபரில் தொடங்கும் மீன்பிடி பருவ காலமானது மார்ச் வரை நீடிப்பது வழக்கம். ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளுடன் குடும்பம், குடும்பமாக கோடியக்கரைக்கு வரும் மீனவா்கள், தற்காலிகமாக முகாமிட்டு தங்குவா். இங்குள்ள படகுத்துறையில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவா்.

    இந்த ஆண்டு பருவம் அக்டோபரில் தொடங்கினாலும், அவ்வப்போது புயல் போன்ற காரணங்களால் மீன்பிடி தொழில் மந்தமாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் மீன் பிடிப்பில் ஈடுபட்டு இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவரின் வலையில் 110 கிலோ எடையுள்ள பால் சுறா மீன் சிக்கியது.

    இந்த மீன், சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. அப்போது நாகை மீன் வியாபாரி ஒருவர் அந்த சுறா மீனை ரூ.26 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
    தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் பள்ளி பாடப்புத்தகங்களை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் உள்ள பழைய இரும்பு கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்துறையினருக்கு ரகசியல் தகவல் வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய இரும்பு கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 5000-க்கும் மேற்பட்டவை பண்டல் பண்டலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    வருவாய்த்துறையினர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தக கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் பள்ளி புத்தகங்களை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பேஸ்புக் மூலம் காதலித்து 2 பெண்களை மணந்த வாலிபர் முதல் மனைவியை தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    கோவை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அனுஷியா(வயது 28). திருமணமான இவர், கணவரை விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு பேஸ்புக் மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு கோவையில் ஒன்றாக வசித்து வந்தனர். அனுஷியா கடன்பெற்று கணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுத்தார்.

    இந்தநிலையில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து மாரிசெல்வம், பேஸ்புக் மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி(30) என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்து உள்ளார்.

    திடீரென ஒருநாள் அவர் சிவகாசி செல்வதாக கூறி மனைவி அனுஷியாவிடம் பொய் சொல்லி மோட்டார்சைக்கிளில் வேதாரண்யம் வந்துள்ளார். அங்கு மாலதியை அவர் 2-வதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் அங்கேயே தங்கிவிட்டார்.

    இந்தநிலையில், கணவரின் வாட்ஸ்-அப் முகப்பு படத்தில்(புரொபைல் பிக்சர்) அவர் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருந்தை அனுஷியா பார்த்தார். இதுகுறித்து அனுஷியா விசாரித்தபோது மாரிசெல்வத்துக்கும், மாலதிக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அனுஷியா, தனது பெற்றோருடன் வேதாரண்யம் சென்று மாரிசெல்வத்தை சந்தித்து கேட்டுள்ளார்.

    அப்போது அவர், அனுஷியாவை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அனுஷியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    நாகையில் வாகனங்களில் பம்பர் பொருத்தப்பட்டதால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    தஞ்சாவூர் துணை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தனபாலன் ஆகியோர் நாகை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து வகையான வாகனங்களிலும் சட்டத்திற்கு புறம்பாக பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை கழற்ற அறிவுறுத்தினர். டிரைவர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக முன் பம்பர் பொருத்தப்பட்டு வாகனங்கள் இயக்கக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது. சோதனையின் போது பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அவற்றில் தண்டனை தொகையாக ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    ×