என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்தார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சுற்றித்திரிகிறார்கள். நேற்று மாலை வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி ரோட்டில் மானங்கொண்டான் ஆற்றுப்பாலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த பெண் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

    அப்போது அந்த வழியாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது காரில் வந்தார். அவர் விபத்தில் காயமடைந்த பெண்ணை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதையன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தை

    கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். மாவட்டங்களில் அதிக அளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுறு எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உத்திரவாதம் செய்து உடனே தீர்வு காண வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது70). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மதியம் இவர் அந்த ஊர் சிவன் கோவில் பகுதியில் இருந்து மெயின் ரோட்டை கடந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மாரியப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து சொந்த நாட்டுக்கு புறப்பட்டு செல்ல பறவைகள் தயாராகின்றன.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு பறவைகள் வருவது வழக்கம்.

    ரஷ்யா, சைபீரியா, இலங்கை பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 247-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம் ஆகும்.

    இந்த ஆண்டு கோடியக்கரையில் பருவமழை அதிக அளவு பெய்து மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதால், ரஷ்யாவில் இருந்து வந்துள்ள பூநாரை உள்பட 47 வகையான சிறை வகைகள், கூழைக்கடா, மண்டை உள்ளான், கொசு உள்ளான், நிலக்கல் உள்ளான் வகை பறவைகள் வந்து குவிந்துள்ளது. இந்தப் பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் உள்ள நண்டுபள்ளம், சிறுதலைக்காடு, நெடுந்தீவு, கோவை தீவு போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது

    இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் ரஷ்யாவில் இருந்து சிறிய வகை பறவையான லிட்டில்சென்ட்(கொசு உள்ளான்) என்ற பறவை லட்சக்கணக்கில் வழக்கத்தைவிட அதிகமாக வந்து குவிந்துள்ளது.

    இந்த பறவைகள் சுமார் 15 கிராம் முதல் 25 கிராம் எடை உடையதாகவும், மிகச்சிறிய பறவையாகவும் காணப்படுகிறது. இந்த பறவைகள் ரஷ்யாவில் இருந்து கோடியக்கரைக்கு இடைவிடாது பறந்து வந்துள்ளன.

    இந்த சிறிய பறவைகள் கூட்டம், கூட்டமாக லட்சக்கணக்கில் நின்று தண்ணீரில் புழு, பூச்சிகளை உண்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    இதேபோல் லிட்டில்சென்ட் பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளதால் சுற்றுலா பயணிகளும், பறவை ஆர்வலர்களும் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் சீசன் முடிவடையும் நேரம் வந்து விட்டதால் இந்த சிறிய வகை பறவைகள் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் லார்வா புழு பூச்சிகளைத் தின்று தங்களது உடலில் கொழுப்பு சத்து நிறைந்த உடன் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தங்களை தயார்படுத்தி வருகிறது.

    இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பறவைகள் தங்கள் சொந்த நாட்டுக்்கு திரும்பி விடும் என பறவை ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்றும்(17-ந் தேதி) நாளையும் (18-ந் தேதி) பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும் என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
    கீழ்வேளூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இலுப்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் சென்னையில் துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி (வயது47). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சுமதி தனது மகன், மகள் மற்றும் மாமியார்- மாமனார் ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சுமதியின் மாமனார் இயற்கை உபாதையை கழிக்க வீட்டில் இருந்த வெளியே சென்றார்.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் சுமதியின் வீட்டுக்குள் சென்று மறைவான பகுதியில் மறைந்து கொண்டனர். சிறிது நேரம் நேரம் கழித்து அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் திடீரென சுமதியின் முகத்தில் துணியை போட்டு மூடி அவரை கொல்லைப்புறத்துக்கு இழுத்து சென்று சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலிகளை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓட முயன்றனர்.

    அப்போது சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மர்ம நபர்கள் தாக்கியதில் சுமதியின் கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சுமதியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மோப்ப நாய் இலுப்பூர் வடக்கு தெரு வரை ஓடிச்சென்று நின்றது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். நள்ளிரவு வீடு புகுந்து பெண்ணை தாக்கி மர்ம நபர்கள் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் கீழ்வேளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோடியக்காட்டில் வனத்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் கோடியக்காடு ராமர் பாதம் அருகே வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சோதனை சாவடியில் வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் பணியில் இருந்தனர். அப்போது கோடியக்கரை பகுதியில் இருந்து வந்த சேட் (வயது25) என்பவர் அங்கு பணியில் இருந்த வனத்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனவர் சதீஷ்குமார் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட் என்பவரை கைது செய்தனர்.
    நாகை அருகே சிக்கல் பனைமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சிக்கல்:

    நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பனைமேடு தூங்குமூஞ்சி மரம் அருகே தெற்குவெளி பகுதிக்கு செல்லும் சாலையில் திடீரென்று வேகத்தடை ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்டது. இதில் ஒளிரும் விளக்குகளோ, வர்ணமோ பூசப்படவில்லை. மேலும் எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை.

    இந்த சாலை வழியாக சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா ஆகியவைக்கு தினமும் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், சரக்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் கடந்த ஒருவாரமாக தினமும் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வேகத்தடையினால் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை இந்த வேகத்தடையால் கீழே விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த வேகத்தடையை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், கலியபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வேகத்தடையை அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் நாகை- திருவாரூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் கால் துண்டாகி வாலிபர் பலியானார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் கிராமம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் பாபா என்கின்ற பாரதி (வயது25). கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் முருகமணி(21). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் செம்போடையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பாரதி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். முருகமணி பின்னால் அமர்ந்து வந்தார். வேதாரண்யம்-நாகை ரோட்டில் செம்போடை தெற்கு கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் பாரதியின் வலது கால் துண்டாகி கீழே விழுந்தது. முருகமணி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை நாகை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகமணி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

    இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த கையிலவனம் பேட்டை ஜெயராமன் மகன் வீரமணியை(24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் மணக்காடு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காமராஜ் (வயது50). விவசாய கூலித்தொழிலாளி. இவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். மேலும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்து(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காமராஜுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
    நாகப்பட்டினம் அருகே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் அரசு ஊழியர்கள் 9 நாட்களாக தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10-ம் நாளான நேற்று நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் சித்ரா, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    சிக்கலில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    நாகை அருகே சிக்கல் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சிக்கல் கடைத்தெருவில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ஓரத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கண்ணையன் மகன் ராஜசேகர் (வயது39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.420 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    தே.மு.தி.க இன்னும் அ.தி.மு.க கூட்டணியில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க இணைப்பு குறித்து பார்ப்போம் என்று அ.தி.மு.க அமைச்சர்கள் கூறிவந்தனர். தற்போது சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து விட்டதால் என்ன நடக்குமோ என்று எல்லோரும் எதிர்பார்த்து வருகின்றனர். அ.தி.மு.க அரசு கடந்த 4 ஆண்டு காலமாக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. 

    இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றவர் டி.டி.வி. தினகரன், 18 எம்.எல்.ஏ.க்களை தன்னோடு அழைத்துச்சென்று அ.தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வேலை பார்த்தவர் டிடிவி தினகரன். தற்போது அவர் அ.தி.மு.க இணைப்பு பற்றி பேசுவது வினோதமாக உள்ளது. சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அ.தி.மு.க.வினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். 

    தே.மு.தி.க இன்னும் அ.தி.மு.க கூட்டணியில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×