என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    தக்கலையில் இறைச்சி கடையில் நூதன முறையில் ரூ.38 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பத்மநாபபுரம்:

    தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி கரும்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜான் சத்தியராஜ் (வயது 46). இவர் தக்கலை பேட்டை சந்தை சாலையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் காரில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி இறைச்சி கடைக்கு சென்று, ‘நான் இத்தாலி நாட்டை சேர்ந்தவன்’ என ஆங்கிலத்தில் பேசினார். அத்துடன் ரூ.500-க்கு சில்லறைகளை கொடுத்து விட்டு 500 ரூபாய் நோட்டு கேட்டார். உடனே, ஜான்சத்தியராஜ் மேஜையை திறந்து அங்கு இருந்த பணத்தில் இருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார். இதை அந்த வாலிபர் நோட்டமிட்டு கொண்டிருந்தார்.

    தொடர்ந்து அந்த வாலிபர் ஒரு சிறிய கோழியை இறைச்சியாக வெட்டி கொடுக்கும்படி கேட்டார். அதன்படி ஜான்சத்தியராஜ் ஒரு சிறிய கோழியை எடைப்போட்டு இறைச்சியாக வெட்டத்தொடங்கினார்.

    இறைச்சியை வெட்டி முடித்த பின்பு திரும்பி பார்த்த போது அந்த வாலிபரை காணவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த ஜான் சத்தியராஜ் கடையில் இருந்த மேஜையை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.38 ஆயிரத்தையும் காணவில்லை. பணத்தை அந்த வாலிபர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாலிபர் இறைச்சி கடையின் உள்ளே புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள். மேலும், அந்த வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவரா? அல்லது வடமாநில நபரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என போலீசாரும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை நகர் பகுதியில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கடைத்தெரு பகுதியில் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அந்தணப்பேட்டையை சேர்ந்த முகமது பயாஸ் (வயது 26) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு வினியோகம்செய்ய மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பயாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ புகையிலை பொருட்களையும் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர்.    

    கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை.

    இந்தநிலையில் நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையானது சகதிக்காடாக மாறியது. இதன் காரணமாக இன்று காலை சந்தைக்கு சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். 
    விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் மேலவீதியை சேர்ந்தவர் சந்தனசாமி. இவருடைய மகன் இன்பராஜ் (வயது 22). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ், ஏபினேஷ் ஆகியோர் கடந்த 7-ந் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்கள். இதனால் துக்கத்தில் இருந்து வந்த இன்பராஜ் நேற்று முன்தினம் இரவு குளிர்பானத்தில் தலைக்கு பூசும் சாயத்தை(டையை) கலந்து குடித்துள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக டிரக்கில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
    ஐசால்:

    மிசோரம் மாநிலம், காஜால் மாவட்டம், ரபங் கிராமத்தை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த டிரக், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ரபங் கிராமத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சுமார் 19 பேர் டிரக்கில் வந்ததாகவும், பிரேக் செயலிழந்து விபத்து ஏற்பட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
    திருக்குவளையில் குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    பரமக்குடி ஆரியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் இருளன்சேதுபதி (வயது 19). இவர் திருக்குவளையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து இருளன்சேதுபதி மற்றும் அவரது நண்பர்களான நவீன்வரதன், கவுசிக்ராஜன், நிஷாந்த், கோகுல்ராஜன், கோகுல் ஆகியோருடன் திருக்குவளையில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கு உள்ள குளத்தில் நவீன்வரதன், கவுசிக்ராஜன், இருளன்சேதுபதி ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது திடீரென இருளன்சேதுபதி தண்ணீரில் மூழ்கி மாயமானார். உடனே அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள், திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி இருளன் சேதுபதியின் உடலை மீட்டனர்.

    பின்னர் உடலை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பனியன் மற்றும் ஜவுளி தொழிலுக்கு மூலப்பொருளான நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    நூல் விலை உயர்வு பிரச்சினையை தீர்க்க அவசர ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நாளை நடக்கிறது.

    இதுகுறித்து டீமா தலைவர் முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பனியன் மற்றும் ஜவுளி தொழிலுக்கு மூலப்பொருளான நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக முன்பு ஒப்பந்தம் செய்துள்ள ஆர்டர்களை தற்போதைய விலையேற்றத்தால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    மேலும் புதிய ஒப்பந்தம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சு பதுக்கல், அதிகப்படியாக ஏற்றுமதி செய்வது, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு மத்திய அரசால் 12 சதவீதம் வரி விதிப்பு போன்றவைகளால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதை களைய, திருப்பூர் சார்ந்த அனைத்து தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், வியாபார அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து மக்கள் சார்பாக அவசர ஆலோசனைக்கூட்டம் நாளை 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் காயத்திரி ஓட்டலில் நடக்கிறது. 

    இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கோரி நாகை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    வெளிப்பாளையம்:

    தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட மாணவ, மாணவிகள் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் இருந்து கல்லூரி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால தாமதமாக கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள் இந்த பருவத்திற்கான பாடத்திட்டங்களை இன்னும் முடிக்கவில்லை. எனவே முறையான பயிற்சி இல்லாமல் நேரடி தேர்வு நடத்தினால் தேர்ச்சி விகிதம் குறையும்.

    மாணவர்கள் நலன் கருதி நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் மூலம் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவ, மாணவிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
    வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிடக்கோரி நாகையில் சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுனந்தா தேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் நாகை செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

    பணிச் சுமையை குறைக்கும் வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி போடும் பணியின் நேரத்தை மாற்ற வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்துதர வேண்டும்.

    தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, காழ்ப்புணர்ச்சியோடு சமூக விரோதிகளின் தாக்குதல் நடைபெறுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். கொரோனா தடுப்பூசி முகாம்களை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை மாற்றி, சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து உள்ளன.
    புதுடெல்லி:

    மத்திய பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளை பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

    இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனே இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

    40 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்த சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடங்கியது. மேலும் பல விவசாய சங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. இதில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 3 வேளாண் சட்டங்களையும் கண்டிப்பாக வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன. இதனால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சுப்ரீம் கோர்ட்


    வேளாண் சட்டங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டன. இதில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளால் இடையூறு ஏற்படுவதாக பொது நல வழக்குகளும் தொடரப்பட்டன.

    ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் உயிரிழந்தும் உள்ளனர். இதற்கிடையேதான் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.

    அப்போது அவர் கூறும் போது, “விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு அதைப்பற்றி விளக்க முடியவில்லை. வேளாண் சட்ட முக்கியத்துவத்தை விளக்குவதற்கு எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

    மோடியின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்று உள்ளன. ஆனாலும் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்து உள்ளனர். பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், அதுவரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.

    இதற்கிடையே விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கோரி அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்று விவசாய சங்கம் அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து 40 சங்கங்கள் இணைந்த அமைப்பான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா கூறும்போது, “கருப்பு சட்டங்களான வேளாண் திட்ட மசோதாக்களை ரத்து செய்வதற்காக மட்டும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தவில்லை. அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கை. இந்த கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.

    அதேபோல மின்சார திருத்த மசோதா வாபஸ் பெற வேண்டும் என்பதும் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சார்பில் விரைவில் கூட்டம் நடத்தப்படும். இதில் எங்களின் அடுத்தக்கட்ட முடிவை தெரிவிப்போம்” என்று தெரிவித்து உள்ளது.

    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து உள்ளன. போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்து உள்ளனர்.

    ஏற்கனவே விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து உள்ளன. தற்போது விவசாயிகள் கோரி வந்த 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு அடுத்தக்கட்டமாக குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு விவசாயிகள் தங்களது போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்து இருப்பது சுமூகமான முடிவுக்கு வருவதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு கீழே இறங்கி வந்தநிலையில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடாமல் பிடிவாதம் காட்டி வருகிறார்கள். இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கையில் இறங்குகிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனை செய்யும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. 

    அந்த வரிசையில், ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் சென்னையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் உண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆட்டோ பிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் கொண்டிருக்கிறது. ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் பிரத்யேக பி.இ.வி. ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது.

    இந்த எஸ்.யு.வி. 58 கிலோவாட் ஹவர் அல்லது 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 481 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    நாகூரில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகூர் பாலத்தடி அருகில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும் வகையில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் 1 கிலோ கஞ்சா இருந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் வேந்தன் (வயது 30) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேந்தனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    ×