search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    போராட்டத்தை வாபஸ் பெறாமல் பிடிவாதம் காட்டும் விவசாயிகள்

    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து உள்ளன.
    புதுடெல்லி:

    மத்திய பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளை பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

    இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனே இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

    40 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்த சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடங்கியது. மேலும் பல விவசாய சங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. இதில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 3 வேளாண் சட்டங்களையும் கண்டிப்பாக வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன. இதனால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சுப்ரீம் கோர்ட்


    வேளாண் சட்டங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டன. இதில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளால் இடையூறு ஏற்படுவதாக பொது நல வழக்குகளும் தொடரப்பட்டன.

    ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் உயிரிழந்தும் உள்ளனர். இதற்கிடையேதான் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.

    அப்போது அவர் கூறும் போது, “விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு அதைப்பற்றி விளக்க முடியவில்லை. வேளாண் சட்ட முக்கியத்துவத்தை விளக்குவதற்கு எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

    மோடியின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்று உள்ளன. ஆனாலும் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்து உள்ளனர். பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், அதுவரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.

    இதற்கிடையே விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கோரி அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்று விவசாய சங்கம் அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து 40 சங்கங்கள் இணைந்த அமைப்பான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா கூறும்போது, “கருப்பு சட்டங்களான வேளாண் திட்ட மசோதாக்களை ரத்து செய்வதற்காக மட்டும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தவில்லை. அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கை. இந்த கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.

    அதேபோல மின்சார திருத்த மசோதா வாபஸ் பெற வேண்டும் என்பதும் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சார்பில் விரைவில் கூட்டம் நடத்தப்படும். இதில் எங்களின் அடுத்தக்கட்ட முடிவை தெரிவிப்போம்” என்று தெரிவித்து உள்ளது.

    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து உள்ளன. போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்து உள்ளனர்.

    ஏற்கனவே விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து உள்ளன. தற்போது விவசாயிகள் கோரி வந்த 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு அடுத்தக்கட்டமாக குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு விவசாயிகள் தங்களது போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்து இருப்பது சுமூகமான முடிவுக்கு வருவதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு கீழே இறங்கி வந்தநிலையில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடாமல் பிடிவாதம் காட்டி வருகிறார்கள். இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கையில் இறங்குகிறது.



    Next Story
    ×