என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தை சோந்தவர் கிருஷ்ணசாமி (வயது 43). இவருக்கு சொந்தமான பைபர் படகில் புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர்கள் கஜேந்திரன், விஜயேந்திரன், ராஜகுரு, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 12 நாட்டிக்கல் தொலைவில் படகை நிறுத்தி வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மோட்டார் பொருத்திய படகில் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு வந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் புஷ்பவனம் மீனவர்கள் 4 பேரையும் கையில் வைத்திருந்த இரும்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் நின்ற மீனவர்கள் 4 பேரிடமும் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலை மற்றும் மீன்பிடி உபகாரணங்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து 4 பேரும் பைபர் படகை திருப்பிக்கொண்டு மீன் பிடிப்பதை கைவிட்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.
பின்னர் இதுபற்றி இன்று காலை வேதாரண்யம் கடலோர காவல் படையினரிடம் புகார் அளித்தனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த 2020-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, நாகையை அடுத்த ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரிஅமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 60.4 ஏக்கரில் ரூ.366.85 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
ரூ.123.05 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ.119.03 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ.124.77 கோடி மதிப்பில் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதிக்கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
முழு வீச்சில் நடைபெற்ற இந்த கட்டுமான பணிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது.
அதனால், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பில், நாகை அரசு மருத்துவக்கல்லூரி இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இது பல்வேறு தரப்பினரிடையே சற்று ஏமாற்றத்தை தந்தது.
இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, மத்தியக் குழுவினர் அறிவுறுத்திய அனைத்து உள்கட்டமைப்புகளையும் விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமடைந்து தற்போது நிறைவடைந்துள்ளன.
6 அடுக்குகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக்கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நவீன மயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மேலும் உடற்கூறியல், உடலியங்கியல் மற்றும் உயிர்வேதியல் ஆகிய 3 துறைகளைக் கொண்டு இயங்கக் கூடியதாக இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வகுப்பறை, ஆய்வகம், கணினி நூலகம் என அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, மருத்துவக் கல்லூரிகளுக்கான மத்தியக் குழு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இதனை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை டாடா நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 35) கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் மற்றும் இவரது மனைவி மலர்கொடி (26), தாயார் கண்ணம்மாள் (56) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் 28 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அங்கு வந்தார். பின்னர் அவர் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். சத்தம் கேட்டு காளிதாஸ் எழுந்து பார்த்தபோது அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட காளிதாஸ் உடனே மனைவி மலர்கொடி, தாய் கண்ணம்மாளை எழுப்பினார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து தாக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் ஒன்று திரண்ட பொதுமக்களும் வாலிபரை தெருவுக்கு இழுத்து சென்று சரமாரியமாக தாக்கினர். இதில் அவர் ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாகை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து காளிதாஸ், மலர்கொடி, கண்ணம்மாள் மற்றும் பொதுமக்கள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது






