search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவக்கல்லூரி.
    X
    அரசு மருத்துவக்கல்லூரி.

    ரூ.367 கோடியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்காக பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த 2020-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது.

    இதையடுத்து, நாகையை அடுத்த ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரிஅமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 60.4 ஏக்கரில் ரூ.366.85 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

    ரூ.123.05 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ.119.03 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ.124.77 கோடி மதிப்பில் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதிக்கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

    முழு வீச்சில் நடைபெற்ற இந்த கட்டுமான பணிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது.

    அதனால், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பில், நாகை அரசு மருத்துவக்கல்லூரி இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இது பல்வேறு தரப்பினரிடையே சற்று ஏமாற்றத்தை தந்தது.

    இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, மத்தியக் குழுவினர் அறிவுறுத்திய அனைத்து உள்கட்டமைப்புகளையும் விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமடைந்து தற்போது நிறைவடைந்துள்ளன.

    6 அடுக்குகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக்கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நவீன மயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    மேலும் உடற்கூறியல், உடலியங்கியல் மற்றும் உயிர்வேதியல் ஆகிய 3 துறைகளைக் கொண்டு இயங்கக் கூடியதாக இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வகுப்பறை, ஆய்வகம், கணினி நூலகம் என அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதனிடையே, மருத்துவக் கல்லூரிகளுக்கான மத்தியக் குழு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

    இதையடுத்து இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

    இதனை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×