என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே குடிபோதை தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் முதலியார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 39). நல்லத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராம் (31). 

    இவர்கள் இருவரும் சோமநாதர்கோவில் அருகேயுள்ள டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே 
    திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதில் மோகன்ராம் ஆத்திரம் அடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ரவி நாகை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு 
    சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து 
    மோகன்ராமை கைது செய்தார்.
    தஞ்சையில் சுபநிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை கே.ஆர். பிரிண்டர்ஸ்&கார்ட்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
    வேளாங்கண்ணியில் காதலியை பிரித்து சென்றதால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 26). இவரும்  அதே பகுதியை சேர்ந்த சிவநந்தினி (22) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதனை அறிந்த சிவநந்தினியின் பெற்றோர் மகளை கண்டித்தனர். 
    இதனால் அரவிந்த்குமார் சிவநந்தினியை அழைத்து கொண்டு வெளியூர் சென்றார். அங்கு கோவிலில் ரகசியமாக தாலி கட்டினார்.

    இந்த நிலையில் மகள் சிவநந்தினியை காணவில்லை என வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து அரவிந்த்குமார், சிவநந்தினி ஆகியோர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    தகவல் அறிந்த இருவரின் பெற்றோர், உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். 

    அப்போது அரவிந்த்குமார் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோரை, சிவநந்தினியின் தந்தை ராஜேந்திரன், அவருடைய சகோதரர்கள் மற்றும் உறவினர் மிரட்டி தாலியை கழற்றி போலீஸ் நிலைய வாசலில் வீசியதாக கூறப்படுகிறது. 

    மேலும் அரவிந்த்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிவநந்தினியை 
    மிரட்டி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இதனால் காதல் மனைவியை பிரித்து சென்றதால் மனமுடைந்த அரவிந்த்குமார் தனது வீட்டில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் அரவிந்த்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 
    விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர் அருகே இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகூர் அருகே மேலநாகூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சிறிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

    இந்த பணிக்காக அந்த பகுதியில் இரும்பு கம்பிகள் போட்டு வைக்கப்பட்டு இருந்தன. 

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் 119 கிலோ இரும்பு கம்பிகளை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிய மேலநாகூர் பகுதியை சேர்ந்த மாறன் (வயது 21) என்பவரை கைது செய்தனர். 

    மேலும் தலைமறைவாக உள்ள 14 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
    வேதாரண்யத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    கட்டாய மதமாற்றத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினருடன் 
    போராடிய பா.ஜனதா மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் நிர்வாகிகள் தஞ்சையில் கைது செய்யப்பட்டனர். 

    இதனை கண்டித்து வேதாரண்யம் நகர பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். 
    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திருமருகலில் ஒன்றிய அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். 

    தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார். 
    இதில் வடகரையிலுள்ள 9 குளங்களை ஒரு தரப்பு மக்கள் மட்டும் பயன்படுத்துவதை கண்டித்தும், ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முறையான சாலை வசதி வழங்க வேண்டும். 

    சரியான பயனாளிகளை தேர்வு செய்து தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், ஆடு, மாடுகள் கொட்டகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் தொகுதி துணை செயலாளர் சுரேஷ், தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன், ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் வைரமுத்து, ஒன்றிய அமைப்பாளர் ஜெயராமன், ஒன்றிய துணை அமைப்பாளர் கண்ணன், வணிகரணி தொகுதி அமைப்பாளர் இளமாறன், துணை அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் திட்டச்சேரி ரவி, திருக்கண்ணபுரம் இரணியன், 
    வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் முருகானந்தம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர்.
    திருப்பூண்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம்  திருப்பூண்டியை அடுத்துள்ள கீழப்பிடாகை 
    ஊராட்சியில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஊராட்சியில் சேரும் குப்பைகள் அனைத்தும், 
    கீழப்பிடாகை-தலைஞாயிறு சிந்தாமணி கிராமத்து
    பிரதான சாலையிலேயே கொட்டப்பட்டு வருகின்றன. 

    குறிப்பிட்ட அளவு குப்பைகள் சேர்ந்த பிறகு அதே இடத்தில் வைத்து 
    அவை தீயிட்டுக் கொளுத்தபடுவதால், அதிக அளவிலான துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

    மேலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளித்த படியே செல்லவேண்டிய சூழல் நிலவி வருகிறது. 

    அந்தப் பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால்  அதனை உண்பதற்காக வரும் நாய்கள் மூலமும் அடிக்கடி அவ்வழியே  சாலை விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. 

    சாலையின் ஓரத்திலேயே கொட்டப்படும் குப்பைகளை கடந்து தான் அங்குள்ள மயானத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், இறந்தவரின் பிரேதத்தை சுமந்து செல்வோர் பெரும் சவாலை சந்திக்க நேரிடுகிறது. 

    எனவே சாலையோரமாக கொட்டப்படும் குப்பையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    டெல்டா மாவட்டங்களில் தேவைக்கேற்ப அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

    அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 
    சமூக நலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம், வேளாண் மற்றும் 
    தோட்டக்கலை துறை சார்பாக உழவர்களுக்கு மானியம் 
    உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் சுமார் 3 கோடியே 81 லட்சம் 
    ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில்மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், 
    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், எம்.எல்.ஏக்கள் 
    ஆளூர் முகமது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் பயனாளிகள் 
    பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்:-

    டெல்டா மாவட்டங்களில் விரைந்து நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கேற்ப திறக்கப்படும். கடந்த முறை சாகுபடி செய்த குருவை நெல்மணிகள், முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட்டது. 

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டு, நெல் 
    மூட்டைகள் வீணாகி விடாமல் கொள்முதல் செய்யப்படும். குறுவைக்கு பின்பற்ற நடைமுறையில் இருந்த முறை நெல் கொள்முதல் ஆன்லைனில் சிரமம் இல்லாமல் நடைபெறும். 


    இ-பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் தவிர்க்கப்படும். இ-பதிவில் 
    ஏற்படும் சிக்கல்களை விவசாயிகள் புகாராக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
    தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை பட்டதாரி பெண் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.

    பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரகங்களை காண முடிகிறது. தன் வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியுடன் உள்ளதாகவும் சிவரஞ்சனி தெரிவித்தார்.

    மேலும் அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால்குட வாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட 1,250 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3 ஏக்கர் வயலில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுரஅடி என்ற அளவில் அவற்றை பயிரிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தற்போது அவைகள் நன்றாக கதிர் விட்டு உள்ளது. இதனை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்குவதாக கூறினார்.

    தங்க தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளார்.

    தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை இவர் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமான நெல் ரகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி சார்பில் மாணவர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு 
    வரும் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்) சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி தெத்தியில் நடைபெற்றது.

    தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணவு ஓவியப்போட்டி, மரக்கன்றுகள் 
    நடும் பணி நடைபெற்றது.

    மாணவ&மாணவிகள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த 
    விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கல்லூரி கல்விக் குழுமத்தலைவர்  எஸ்.ஜோதிமணி அம்மாள், 
    செயலர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் 
    அருள் பிரகாஷும், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர் 
    சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ராமபாலன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை, 
    நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சிவராமகிருஷ்ணன், என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    இலங்கைக்கு ரூ.55 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்த முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக தனிப்படை போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேதாரண்யம் புதுப்பள்ளி பாலத்தின் அருகில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 2 காரில் இருந்து இறங்கிய 9 பேர் ரகசியமாக திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். 

    ஆனால் அதற்குள் போலீசார் 9 பேரையும் சற்றி வளைத்து பிடித்தனர்.  
    2 காரையும் சோதனை செய்தபோது ரூ.50 லட்சம் மதிப்புள்ள 
    170 கிலோ  கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து நடத்திய விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை அவர்கள் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாகவும், அவற்றை இலங்கைக்கு 
    கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்து 
    170 கிலோ கஞ்சா மற்றும் 2 காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.  

    விசாரணை முடிவில் இந்த கடத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? 
    அந்த 9 பேர் யார்? என்பது பற்றிய தகவல் தெரிய வரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மேளதாளம் முழங்க நெல் கோட்டை எடுத்துவரப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் 
    வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். 

    திருமண கோலத்தில் சிவன் பார்வதி அகத்தியருக்கு காட்சி கொடுத்த 
    இடம்.

    இந்த கோவிலுக்கு சொந் தமாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள 
    குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளது. 

    இங்கு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைந்த 
    நெல்லை அறுத்து தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக 
    கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று 
    வருகிறது.

    அதன்படி தைப்பூசமான இன்று நெல் அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி விவசாயிகள் வேதாரண்யம் கொண்டுவந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில் 
    வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பின்னர் மேளதாளத் துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக 
    எடுத்துச் சென்று வேதாரண்யம் கோவிலில் ஒப்படைத்தனர்.

    பின்பு அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்கள் வழங்கப்பட்டது.
    ×