என் மலர்
மயிலாடுதுறை
- மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி தொடங்கி நடை பெற உள்ளது.
- பொது மக்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் 1432-ம் பசலிக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாயம் பற்றிய விவரம் வருமாறு:-
தரங்கம்பாடி தாலுகாவில் வருவாய் தீர்வாய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் நாளை முதல் 16-ந் தேதி வரை அங்கு ஜமாபந்தி நடத்துகிறார்.
குத்தாலம் தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், மயிலாடுதுறை தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், சீர்காழி தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் நாளை முதல் 22-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்த உள்ளனர்.
வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளி விட்டு வரிசையில் சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
- மண்டப வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் மணப்பெண் வீட்டார் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர். அப்பொழுது பாயாசம் சரியில்லை எனக் கூறி பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கியதாக தெரிகிறது. மண்டப வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மோதல் தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர்.
- 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
- துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழையாறு துறைமுகம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 50 விசைப்படகுகள், 450 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படகுகள் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாக கருதப்படும் இந்த பழையாறு துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வருடந்தோறும் மீன் இனவிருத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் மாதம் தொடங்கி 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விசைப்படகுகள் 61 நாட்களுக்கு கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்துக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கி வருகிற 14-ந் தேதி முடிவடைகிறது.
இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது விசைப்படகுகளை பழையாறு துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்திலும், அதனை ஒட்டி செல்கின்ற பக்கிங்காம் கால்வாயிலும் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தற்போது இந்த தடைகாலத்தில் பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி மற்றும் புதுப்பிக்கும் பணி, வலை பின்னுதல், வலைகளை பராமரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலத்தினால் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் பழையாறு துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் கருவாடு காய வைத்தல் மற்றும் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, 'மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருப்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மீன்பிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் நிவாரண தொகையாக மீனவ குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. மேலும் படகு பராமரிக்க தேவையான உபகரணங்கள், பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு உள்ளோம். தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும்போது எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றார்.
- பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர்.
- கழிவறை அருகில் கருப்பு மற்றும் நீலநிறத்தில் 2 பேக்குகள் இருந்துள்ளது.
மயிலாடுதுறை:
திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி இருப்புப்பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் திருப்பதி-மன்னார்குடி பாமினி எகஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா மாநிலம் திருப்பதி ரெயில்நிலையத்தில் இருந்து சோதனை செய்து வந்துள்ளனர்.
சீர்காழி ரெயில் நிலையம் வருவதற்கு முன்னர் வண்டியின் பின்னால் உள்ள முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பொதுப்பெட்டியில் கழிவறை அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கருப்பு மற்றும் நீலநிறத்தில் 2 பேக்குகள் இருந்துள்ளது.
அப்போது அருகில் இருந்த பயணிகளிடம் விசாரித்த போது அது தங்களுடையது இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த பேக்குகளை மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறக்கி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது.
2 பேக்குகளிலும் மொத்தம் 11 பொட்டலங்கள் இருந்துள்ளது. பின்னர் அந்த கஞ்சா பொட்டலத்தை தனித்தனியாக எடைபோட்டு பார்த்ததில் 11 பொட்டலங்களில் தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா இருந்தது.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் போலீசார் ஓப்படைத்தனர்.
- மீனவர்களிடம் இருந்து 62 மனுக்கள் பெறப்பட்டன.
- ரூ.20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட 4 சக்கர வாகனம் பயனாளிக்கு வழங்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பவர்பாயின்ட் வாயிலாக மீனவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் தங்களது மீனவ கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க அறிவுருத்தினார்.
அதனை தொடர்ந்து மீனவர்கள் மாவட்ட கலெக்டரிடம்கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மேலும் இக்கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து 62 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன், உதவி இயக்குநர் (மீன்வளம்) ராஜேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.
- வைகாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.
மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக தெப்ப திருவிழா நடைபெற்றது.
முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது, தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றிவந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதனை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- அதனை தொடர்ந்து ஸம்பத்ரா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
- மாலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை
சீர்காழியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்ற நாளான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், அதனை தொடர்ந்து ஸம்பத்ரா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதில் கொடி மரத்தில் இருந்து அம்மன் சன்னதி வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதில் கலசம், சூலம், விநாயகர் உள்ளிட்ட உருவங்களை வடிவமைத்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீர்காழி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- திருவாவடுதுறை ஆதீனத்திற்கு ஊர் எல்லையில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை கிடைத்துள்ளது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதின திருமடமான திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்ற போது சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மவுன்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை கொடுத்து அதனை ஆதீன தம்பிரான் சடைச்சாமி என்கிற திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்ததாக வரலாறு. அந்த செங்கோல் தற்போது டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக திருவாவடுதுறை ஆதீன 24- வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மத்திய அரசின் மூலம் தனி விமானத்தில் டெல்லி சென்றார்.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கிவிட்டு மீண்டும் ஆதினத்திற்கு திரும்பிய திருவாவடுதுறை அதிகம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு ஊர் எல்லையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யானை, அலங்கார குதிரை சகிதமாக மங்கள வாத்தியங்கள், சிவ கைலாய வாக்கியங்கள் முழங்க நான்கு குதிரைகள் பூட்டிய மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஆதீன கர்த்தரை ஊர்வலமாக ஆதீன மடத்திற்கு அழைத்து சென்றனர். வழியெங்கும் கண்கவர் வானவேடிக்கை பட்டாசுகளால் ஜொலித்த நிலையில் கோலகலமாக ஆதீனகர்த்தர் ஆதீன திருமடம் வந்தார். தொடர்ந்து ஆதின குரு மகா சன்னிதானம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது நாதஸ்வர கலைஞர்கள் தவில் வித்வான்களோடு சேர்ந்து இசை ஆராதனை நடத்தினர்.
குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக உள்ள வந்தே மாதரம் என்ற தாரக மந்திர சொல்லின பாடலை இன்னிசை கலைஞர்கள் ராகத்தோடு வாசித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் தெய்வபக்தி பாடல்களை இசைக்க ஆதீன திருமடம் இசையால் அதிர்ந்தது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில் இந்தியா சுதந்திரம் பெற்றதின் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் 75 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பொதுமக்கள் வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
- 47 கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது
- திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22- ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2023-24-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,504 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்த மட்டில் 2021-22-ம் ஆண்டில் 37 கிராம பஞ்சாயத்துகளிலும், 2022-23 -ம் ஆண்டில் 60 கிராம பஞ்சாயத்துகளிலும் நடப்பு 2023-24-ம் ஆண்டில் 47 கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை - உழவர் நலத்துறையில் பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத் துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலி என்ற உன்னதமான செயலியினை துறை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் இச்செய லியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவ தோடு, பயன்பெற்றும் வருகின்றனர். மாநிலத்தில் உள்ள அனைத்து விவசா யிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்ப லன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படு கிறது.
விவசாயிகள் முன்பதிவு செய்வதனால் துறையில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உழவன் செயலியில் இடுபொருள் தேவையை முன்பதிவு செய்தல் மற்றும் திட்டப்பலன்களை பெறு தலுக்கான வழிமுறை கள் இத்துடன் இணைக்கப்ப ட்டுள்ளது.
எனவே, இவ்விளக்கத்தினை கடை பிடித்து உழவன் செயலியினை விவசாய பெருங்குடி மக்கள் பதிவிறக்கம் செய்து திட்ட பலன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.
- பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் கூறுகையில், நகராட்சியில் உரிய அனுமதி பெறாத வாகனங்கள் ஏதுவும் செப்டிக்டேங்க் எடுப்பதற்கு அனுமதிக்கப்படாது ,கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிய நடைமுறையைப் பின்பற்றா மல் சாலை ஓரங்கள், நீர்நிலைகள்,ஓடைகள் மற்றும் இதர பகுதிகளில் கொட்டு வதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் அகற்றுவது சம்பந்தமாக தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகர ணங்கள் அணிந்து பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஈடுப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
- இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம்.
- பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சீர்காழி:
சீர்காழியில் நடைபெற்ற மரபு சார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் இக்கல்வியாண்டில் மேல்நிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் சீர்காழி தாலுக்காவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம் பெற்றமைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பியை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் ஜே.சேகர், சீர்காழி நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன் , என்.துளசிரங்கன் , ஏ.வரதராஜன் கலந்து கொண்டனர்.
- மானிய குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும்.
- சேதம் அடைந்த நிலையில் உள்ள திட்டை சாலையை சீரமைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரணக்கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்துகுமார் வரவேற்றார். தொடர்ந்து மன்ற பொருள்களை கணக்கர் சரவணன் வாசித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதங்கள் வருமாறு,உறுப்பினர் பஞ்சு குமார்(திமுக) பேசுகையில், மணிக்கிராமம் ஊராட்சியில் சாலைக்கார தெரு, பள்ளி கூட தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
உறுப்பினர் நடராஜன் (அதிமுக) பேசுகையில் 15வது நிதி மானிய குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கைமடம்கடைவீதியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.
உறுப்பினர் விஜயகுமார்(அதிமுக) பேசுகையில், சேதம் அடைந்த நிலையில் உள்ள திட்டை சாலையை சீரமைக்க வேண்டும். புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உறுப்பினர் தென்னரசு (திமுக) பேசுகையில் எடக்குடி வடபாதி ஊராட்சியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள மயான கொட்டகை மற்றும் மண் சாலைகளை சீரமைத்து தர வேண்டும். ரேஷன் கடைகள் வாரம் முழுவதும் பொருள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி :
ஊராட்சிகளில் அனுமதி இன்றி பலர் குடிநீர் இணைப்புகளை பெற்று குடிநீரை வீணாக்கி வருகின்றனர். இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவே அனுமதி பெறாமல் இணைப்பு பெற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உறுப்பினர் நிலவழகி பேசுகையில், எனது பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்து தர வேண்டும்.
கீழமூவர்கரை பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்றார்.
தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசுகையில் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.






