என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • 4 வழி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயபாரதி,தேன்மொழி, இன்பரசி, ரவிச்சந்திரன், சசி கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.

    மாநில செயலாளர் வீரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

    கூட்டத்தில் உதவி பெறும் பள்ளிகளுக்கான நான்கு வழி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து நல திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், பணியிடை பயிற்சிகளில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக செயல்படுத்துவதை தவிர்த்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி உள்ளவர்களை ஈடுபடுத்த வேண்டும்,

    எமிஸ் வலைதளத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும், அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை ஆசிரியர்களை கொண்டு பள்ளிக்கு எடுத்துச் செல்லும் நடைமுறையை கைவிட்டு அலுவலகப் பொறுப்பில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் எஸ்.எம்.சி ஒப்புதல் இல்லாமல் பள்ளிக்குத் தேவையான துப்புரவு சார்ந்த பொருட்களை தனிப்பட்ட நபர்கள் மூலம் வழங்குவதை தவிர்த்துவிட வேண்டும், ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எமிஸ் சார்ந்த ஆன்லைன் பதிவுகளை செய்ய ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதை அரசு கைவிடவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜம் நன்றி கூறினார்.

    • செம்பனார்கோவில் பகுதியில் சென்றபோது மாணவியை திடீரென பிரபு வழிமறித்தார்.
    • அதிர்ச்சியடைந்த அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கீழையூர்-உப்பு நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் பிரபு(வயது 29). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று அந்த மாணவி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். செம்பனார்கோவில் பகுதியில் சென்றபோது மாணவியை திடீரென பிரபு வழிமறித்தார். பின்னர் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

    மேலும் இதனை வெளியில் சொன்னால் சரக்கு ஆட்டோவை ஏற்றி கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

     மயிலாடுதுறை:

    சீர்காழி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

    கண்ணாடி உடைப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மன்னன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் கண்ணாடியை கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

    இதில் அரசு பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் லேசான காயங்களோடு உயிர் தப்பினர். இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் சீர்காழி அருகே உள்ள தெற்கு தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் சூர்யா (வயது22) என்பவர் பஸ் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

    இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் சுட்டெரித்தது.
    • காய்கறி பயிர்கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் கருகின.

    மயிலாடுதுறை:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகமும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கரும்பு, வாழை, பருத்தி போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. தண்ணீர் இருப்பை பொறுத்து சாகுபடி பரப்பளவு ஆண்டுதோறும் மாறுதல் அடைந்து வருகிறது.

    இதில் நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விவசாயத்துடன், மீன்பிடி தொழிலும் பிரதான தொழிலாக விளங்குகிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த செம்பனார்கோவில், பரசலூர், கீழையூர், முடிகண்டநல்லூர், கிடாரங்கொண்டான், புன்செய், கஞ்சா நகரம், காலகஸ்திநாதபுரம், ஆறுபாதி, காழியப்பநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல், சீனி கரும்பு, செங்கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு, பாகற்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கொத்தவரை, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் சுட்டெரித்தது. கோடையையொட்டி பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் கருகின. செடிகள் வாடி, வதங்கியதால் எதிர்பார்த்த மகசூல் இன்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    இந்த நிலையில் செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த மக்காச்சோள பயிரில் ஒரு ஈடு அறுவடைக்குப் பிறகு வெயில் தாக்கத்தால் செடிகள் காய்ந்து கருகிவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    • நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனடியாக சுவேதாரனேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து விழுந்த தீப்பொறியிலிருந்து உருவான முக்குளங்கள் உள்ளன இங்கு சிவபெருமான் அகோர மூர்த்தி சுவாமியாக அருள்பாலிக்கிறார் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையாக இக்கோயில் விளங்குகிறது பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுகின்றன முன்பு ஒரு காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் காட்சி பெற்று சூலாயிரத்தை பெற்றார் அந்த சூலாயுதத்தால் தேவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினான். அப்போது நந்தி பகவான் சென்று மருத்துவர சூரனிடம் முறையிட்ட போது மருத்துவா சூரன் சூலாயத்தால் நந்தி பகவானையும் தாக்கினார் அந்த சூலாயத்தால் தாக்கப்பட்ட வடுக்கள் தற்போது இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது பிரசித்தி பெற்ற இந்த நந்தி பகவானுக்கு சனி பிரதோஷத்தை ஒட்டி மஞ்சள் திரவியப்பொடி பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி முதலான நறுமண வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இவர் அடிக்கடி நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • இதனால் மனவேதனை அடைந்த சபாபதி பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள கங்கணம்புத்தூர் சின்னத்தெருவை சேர்ந்தவர் சபாபதி(வயது55). விவசாய கூலித்தொழிலாளியான இவர் அடிக்கடி நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று நெஞ்சு வலியால் துடித்த சபாபதி மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதனால் மயங்கி விழுந்த சபாபதியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சபாபதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சாமி தலையில் படமெடுத்து அச்சுறுத்தியது.
    • நாகபாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்து அதனை ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த செங்கமேடு பகுதியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகை முறையில் அலங்காரம் செய்யும் நிறுவனத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனில் நடராஜர் உள்ளிட்ட சாமி சிலைகள் வாடகை விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று குடோனுக்குள் ஊழியர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள நடராஜர் சிலை மீது சுமார் 5 அடி நீள நாகபாம்பு சுற்றிக்கொண்டு இருந்தது.

    இதனை பார்த்து அச்சம் அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் விஜிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் பாம்புபிடி வீரர் சீர்காழி பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.

    தகவலின்படி அங்கு சென்ற பாண்டியன் நடராஜர் சிலையினை சுற்றிக்கொண்டு இருந்த பாம்பினை பிடிக்க முயன்றார். அந்த பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சாமி தலையில் படமெடுத்து அச்சுறுத்தியது. பின்னர் லாவகமாக நாகபாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்து அதனை ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
    • விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது.

    கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சீர்காழியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • மேய்ச்சலுக்காக விடப்பட்ட பசுமாடு 10 அடி பள்ளத்தில் விழுந்தது.

    மயிலாடுதுறை:

    சீர்காழி சிங்காரத்தோப்பு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்.

    இவரது பசுமாட்டை காலை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட நிலையில் கீழத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக பசுமாடு விழுந்தது.

    10அடி பள்ளத்தில் விழுந்த மாட்டின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தனர்.

    பின்னர் தொட்டியில் விழுந்த பசு மாட்டினை மீட்க சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை மீட்க முயன்றனர்.

    சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்.

    பசு மாட்டை கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

    பின்னர் மாட்டின் உரிமையாளரிடம் மாடு ஒப்படைக்கப்பட்டது.

    மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • ராமேசுவரம்-சென்னை எழும்பூர் ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.
    • கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரிபுலியூரிலும் நின்று செல்லும்.

    சீர்காழி:

    தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்களில், விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    அதனை ஏற்று குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் விரைவு ரெயில்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 18-ந் தேதி முதல் விரைவு ரெயில்கள் நிற்கும் நிலையங்கள் விவரம் வருமாறு: -

    சென்னை எழும்பூர்-மதுரை ( வண்டி எண்-12637) விரைவு ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்-12694) ரெயில் அரியலூரிலும், ராமேசுவரம்-சென்னை எழும்பூர் (வண்டி எண்-16752) ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.

    இதேப்போல் சென்னை எழும்பூர்-காரைக்கால் (வண்டி எண்-16175) விரைவு ரெயில் சீர்காழி, பேரளத்திலும், சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்-16865) விரைவு ரெயில் சீர்காழியிலும் நின்று செல்லும்.

    வருகிற 20-ந் தேதி முதல் ராமேசுவரம்-திருப்பதி (வண்டி எண்-16780) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரில் நின்று செல்லும்.

    வருகிற 22-ந் தேதி முதல் மயிலாடுதுறை-மைசூர்-மயிலாடுதுறை (வண்டி எண்-16231/16232) ரெயில் பாபநாசத்திலும், 24-ந் தேதி முதல் முதல் கன்னியாகுமரி-புதுச்சேரி (வண்டி எண்-16862) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரிலும் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
    • தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.

    • 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 22-ந் தேதி ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும், இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறி இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரராக அருள்பாலிப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.

    இக்கோவில் எம பயம் போக்கி ஆயுள் விருத்தி அருளும் தலமாகும். 59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயதை தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்த கடேஸ்வரரை வழிபடுகிறார்கள்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கட்டளை தம்பிரான்கள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கணேச குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி (சனிக்கிழமை) அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவில் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×