என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீர்காழியில் நடராஜர் சிலையின் மீது படமெடுத்து ஆடிய 5 அடி நீள நாகபாம்பு
- பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சாமி தலையில் படமெடுத்து அச்சுறுத்தியது.
- நாகபாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்து அதனை ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று விட்டார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த செங்கமேடு பகுதியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகை முறையில் அலங்காரம் செய்யும் நிறுவனத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனில் நடராஜர் உள்ளிட்ட சாமி சிலைகள் வாடகை விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று குடோனுக்குள் ஊழியர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள நடராஜர் சிலை மீது சுமார் 5 அடி நீள நாகபாம்பு சுற்றிக்கொண்டு இருந்தது.
இதனை பார்த்து அச்சம் அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் விஜிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் பாம்புபிடி வீரர் சீர்காழி பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.
தகவலின்படி அங்கு சென்ற பாண்டியன் நடராஜர் சிலையினை சுற்றிக்கொண்டு இருந்த பாம்பினை பிடிக்க முயன்றார். அந்த பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சாமி தலையில் படமெடுத்து அச்சுறுத்தியது. பின்னர் லாவகமாக நாகபாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்து அதனை ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






