என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை சார்பில் நடைபெற்றது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தீயணைப்புதுறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மோட்டார் வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அந்த தீயை அணைத்து அதில் இருந்து மீள்வது குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியை தீயணைப்புத்துறையினர் செய்து காண்பித்தனர். தொடர்ந்து தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘தீ செயலி'யை பயன்படுத்தி தீ விபத்து ஏற்பட்டால் எளிதில் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களை எப்படி தொடர்பு கொள்வது? என்பது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் போலீசார், தன்னார்வலர்கள், வாகன ஓட்டிகள், வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயல் விளக்க நிகழ்ச்சியை மயிலாடுதுறை தீயணைப்புதுறை வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    சீர்காழி பஸ் நிலையத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுரு வரவேற்று பேசினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றார்.

    இந்த ஊர்வலத்தில் சீர்காழி போலீசார், தனியார் வாகன ஓட்டுனர் பயிற்சி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை சாலை, கடைவீதி வழியாக கொள்ளிடம் முக்கூட்டை வந்தடைந்தது.
    மயிலாடுதுறையில் 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி ஒருவர், தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்தநிலையில் சிறுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 

    சிறுமியிடம் தாய் விசாரித்ததில், சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. 

    இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    மயிலாடுதுறை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள்-ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் லிடியாள் ஞானசிரோன்மணி(வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

    இதனையடுத்து லிடியாள் ஞானசிரோன்மணி அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார். அங்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்ளது.

    மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இந்த கொள்ளை தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக லிடியாள் ஞான சிரோன்மணி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் செயல்பட்டு வரும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்குவதில் சாதிகளை குறிப்பிட்டு மாணவிகளை பிரித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
    செம்பனார்கோவில்:

    செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    நடப்பு கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகளை சாதி ரீதியில் பிரித்து பார்க்கும் நோக்கில் தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு நீல நிறத்திலான அட்டையில் மாணவியின் பெயர், வரிசை எண் மற்றும் எஸ்.சி என்றும் அதேப்போன்று மஞ்சள் அட்டையில் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு பி.சி என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு இளஞ்சிகப்பிலான அட்டையில் எம்.பி.சி என்றும் எழுதி சைக்கிளின் முன்புற புத்தக கூடையில் ஒட்டி வைத்திருந்தனர்.

    பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மாணவிகளிடையே மிகுந்த மன உளைச்சலையும், கூச்சமான உணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

    இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு இதுப்போன்ற தீண்டாமை கொடுமைகளின் நவீன வடிவங்கள் கல்வி நிலையங்களில் அரங்கேறி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    கல்வி கற்க செல்லும் மாணவர்களிடையே நஞ்சை விதைக்கும் செயலில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கையை கல்வித்துறை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டங்களை நடத்துவோம் என கூறியுள்ளனர்.
    மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் மகள் மணிமேகலை (வயது 19). இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது குடும்பத்தினருக்கும் வேலி தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மணிமேகலை மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் வாசலில் வந்து பன்னீர்செல்வத்தின் மகன்கள் கார்த்திக், ரஜினிகாந்த் ஆகிய 2 பேரும் சேர்ந்து மணிமேகலை குடும்பத்தினரை திட்டியதோடு ஆபாசமாகவும் பேசி உள்ளதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த மணிமேகலை தனது சகோதரர்களுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில், தன்னை கார்த்திக்கும், ரஜினிகாந்தும் ஆபாசமாக பேசி விட்டார்கள். இனி நான் உயிரோடு இருக்க மாட்டேன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனவே அம்மா, அப்பாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேசிய ஆடியோவை பதிவிட்டு விட்டு சேலையால் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வெளியே கடைக்குச் சென்று விட்டு திரும்பிய மணிமேகலையின் தாய் ராதிகா வீட்டிற்குள் சென்றபோது தூக்குப்போட்டு மணிமேகலை தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதார். ராதிகாவின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மணிமேகலையின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிமேகலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராதிகா (50) கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக பன்னீர்செல்வம் மகன்கள் கார்த்திக் (37), ரஜினிகாந்த் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    மயிலாடுதுறையில் நடந்த பா.ம.க. ஊர்வலத்தில் லாரி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதனையொட்டி திருவிழந்தூர் தென்னை மரச்சாலையில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றனர்.

    அப்போது ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை என போலீசார் பா.ம.க.வினரிடம் அறிவுறுத்தினர். ஆனாலும் போலீசாரின் தடுப்புகளை அப்புறப்படுத்தி விட்டு பா.ம.க.வினர் ஊர்வலம் நடத்தினர். போலீசார் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்ட போது குறுக்கே லாரி ஒன்றும் நின்றது. அந்த லாரியை அப்புறப்படுத்தக்கோரி பா.ம.க.வினர் லாரியை கைகளால் அடித்து தட்டினர். அப்போது லாரியின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்தது.

    இதுகுறித்து மயிலாடுதுறை கூரைநாட்டை சேர்ந்த லாரி டிரைவான சார்லஸ் (வயது 60) என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றதாகவும், அப்போது ஊர்வலமாக வந்த பா.ம.க.வினர் தனது லாரியின் கண்ணாடியை உடைத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ம.க.பிரமுகர் மயிலாடுதுறை அருகே கடுவங்குடி, விராலூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் கோவிந்தன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேக்கம் இ்ல்லாமல் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டருந்த சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகின்ற காரணத்தாலும் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது தேக்கமின்றி கொள்முதல் செய்யவும், பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளால் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கூடாது எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நடந்து முடிந்த குறுவை அறுவடை காலகட்டங்களில் பிற மாவட்ட நெல் மூட்டைகளின் வருகை, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நெல் மூட்டைகளின் தேக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகளுடைய நெல் மூட்டைகளை சரிவர கொள்முதல் செய்யாமல் பல நாட்கள் கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் அடுக்கி வைத்து காத்திருந்தனர். இந்தநிலையில் கனமழையால் நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர்.

    தற்போது சம்பா அறுவடை நடைபெறுகிறது. நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்து காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளால் கொண்டுவரக்கூடிய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கூடாது என்றும். 22 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி நகைக்கடை அதிபர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது எப்படி? என்பது குறித்து கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
    சீர்காழி:

    சீர்காழி நகைக்கடை அதிபர் தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக்குள் நுழைந்த வடமாநில கொள்ளையர்கள் நகைக்கடை அதிபரின் மனைவி-மகனை கொன்று வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் கொள்ளையர்கள் 3 பேர் பிடிபட்டனர்.

    பிடிபட்ட 3 பேரையும் போலீசார், சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையின்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    விசாரணையின்போது கொள்ளையர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி சங்கர்ராம் என்பவரிடம் மணிஷ் வேலை பார்த்து வந்தார். சங்கர் ராமிடம் இருந்து வெள்ளி பொருட்கள் கொடுப்பதற்காக சீர்காழியில் உள்ள தன்ராஜ் சவுத்ரி வீட்டிற்கு அடிக்கடி மணிஷ் வந்துள்ளார். அப்போது தன்ராஜ் சவுத்ரி நல்ல வசதி வாய்ப்புடன் இருப்பதை மணிஷ் தெரிந்து வைத்துள்ளார்.

    இந்த நிலையில் மணிஷ் நண்பரான ரமேஷ் பாட்டில் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவருக்கு போதிய பொருளாதாரம் இல்லாததால் திருமணத்தை வைத்துக்கொண்டு பணத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். தனது நண்பர் மணிஷ்சிடம், தனக்கு திருமணம் நடைபெற இருப்பதால் கையில் பணம் இல்லாமல் சிரமமாக உள்ளது. பணம் இல்லை என்றால் திருமணம் தடைபடும் என ரமேஷ் பாட்டில் கூறியுள்ளார்.

    அதற்கு மணிஷ், சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் சவுத்ரியிடம் நிறைய பணம், நகைகள் உள்ளது. அவர் நல்ல வசதியுடன் இருப்பதை நான் நன்கு அறிவேன். அவரது வீட்டில் கொள்ளையடித்தால் நமது தேவை பூர்த்தியாவதுடன் நாமும் அவரைப்போல் வசதியாக வாழலாம் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்தை தங்களது நண்பர்களான மஹிபால், கருணாராம் ஆகியோரிடம் அவர்கள் கூறி உள்ளனர். இந்த திட்டத்திற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து 4 பேரும் சேர்ந்து தன்ராஜ் சவுத்ரியின் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டினர்.

    தங்களது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு அவர்கள் ஒரு நாளையும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலையில் கும்பகோணத்தை சேர்ந்த கருணாராம் ஒரு காரில் மற்ற 3 பேரையும் ஏற்றிக்கொண்டு சீர்காழி வந்துள்ளார். நீங்கள் மூன்று பேரும் சென்று தன்ராஜ் சவுத்ரி வீ்ட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு வாருங்கள். நான் இந்த இடத்தில் காருடன் தயாராக உள்ளேன். நீங்கள் வந்ததும் இங்கிருந்து நாம் சென்று விடுவோம் என்று கூறி சீ்ர்காழி புறவழிச்சாலையில் அவர்கள் 3 பேரையும் இறக்கி விட்டுள்ளார்.

    ஏற்கனவே திட்டமிட்டபடி மஹிபால், மணிஷ், ரமேஷ் பாட்டில் ஆகிய 3 பேரும் தன்ராஜ் சவுத்ரி வீட்டிற்குள் சென்று நகை-பணம் இருக்கும் இடத்தை கேட்டு உள்ளனர். அவர்கள் நகை-பணம் இருக்கும் இடத்தை தெரிவிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் தாய்-மகன் இருவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

    பின்னர் தன்ராஜ் சவுத்ரியின் வீட்டில் நிறுத்தி இருந்த காரை எடுத்துக்கொண்டு புறவழிச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கருணாராம் இல்லாததால் வழிதெரியாமல் கொள்ளையர்கள் 3 பேரும் சீர்காழி அருகே உள்ள பட்டவிளாகம் ரோட்டில் சென்று உள்ளனர். பணிகிருப்பு என்ற இடத்தில் கார் பழுதானதால் காரை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு வயல் வழியாக நகை-பணத்தை எடுத்துக்கொண்டு எருக்கூர் பகுதியில் உள்ள சவுக்கு காட்டிற்கு நடந்து சென்றுள்ளனர்.

    அப்போது அங்கு வேலை பார்த்த விவசாயிகள் அந்த 3 பேரின் நடவடிக்கைகளையும் பார்த்து சந்தேகம் அடைந்து கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோதுதான் கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரை நோக்கி சுட முயன்றதும் பதிலுக்கு போலீசார் சுட்டதில் கொள்ளையர்களில் ஒருவன் பலியான சம்பவமும் நடந்து முடிந்தது.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
    சீர்காழியில், நகைக்கடை அதிபர் வீட்டுக்குள் புகுந்து தாய்-மகனை கழுத்தை அறுத்துக்கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து 12 கிலோ தங்கம், ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ெரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி(வயது 50). இவர், சீர்காழி அருகே உள்ள பூம்புகார் தர்மபுரம் பகுதியில் நகை விற்பனை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இது தவிர நகை மொத்த வியாபாரமும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஆஷா(45). இவர்களது மகன் அகில்(24). மருமகள் நிகில்(21). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் காலை சவுத்ரியின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். காலை 6 மணி அளவில் தன்ராஜ் சவுத்ரி வீட்டுக்குள் நுழைந்த 3 வாலிபர்கள், தன்ராஜ் சவுத்ரி உள்ளிட்ட 4 பேரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி நகை-பணம் இருக்கும் இடத்தை கேட்டு ஆயுதங்களால் தாக்கினர்.

    பின்னர் தன்ராஜ் சவுத்ரி, நிகில் ஆகிய இருவரையும் கட்டிப்போட்டு நகை-பணம் இருக்கும் இடத்தை கேட்டுள்ளனர், நகைகள் இருக்கும் இடத்தை அவர்கள் யாரும் சொல்ல மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், தாய்-மகன் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு வீட்டில் நிறுத்தி இருந்த தன்ராஜ் சவுத்ரியின் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் சீர்காழி அருகே உள்ள பட்டவிளாகம் ரோடு பணிக்கிருப்பு என்ற இடத்தில் சென்றபோது கார் பழுதானதால் காரை அங்கேயே நிறுத்தி விட்டு வயல்வெளி வழியாக நடந்து சென்று அந்த பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் பதுங்கி உள்ளனர்.

    கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற தன்ராஜ் சவுத்ரியின் காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் அந்த கார் நின்ற இடம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றபோது கார் மட்டுமே அங்கு நின்றது. காருக்குள் யாரும் இ்ல்லை. போலீசார் அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது காருக்குள் நகைகள் சிதறிக்கிடந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு உள்ள சவுக்கு தோப்பில் 3 பேர் ஓடிச்சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர்.

    கொள்ளையர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்களில் ஒருவன் போலீசாரை தாக்க முயன்றதுடன், தான் வைத்து இருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றான். உடனே போலீசார் அவனை நோக்கி சுட்டனர். இதில் கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரின் என்கவுண்ட்டரில் பலியானான்.

    மற்ற 2 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் கங்காவாஸ் மஜாதேவ்ஜி காளிமேடு பகுதியை சேர்ந்த ஜெகராம் மகன் ரமேஷ் பாட்டில் (27), ஜோத்காபூர் பட்டேல் ராம் மகன் மணிஷ்(23) என்பதும், போலீசாரின் என்கவுண்ட்டரில் பலியானவர் ஜலோர் மாவட்டம் சித்தல்வான் ஊராட்சி அகாலி கிராமம் மோகம் பகுதியை சேர்ந்த சரவன்சிங் மகன் மஹிபால்(28) என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வசித்து வந்த கருணாராம் என்பவரையும் போலீசார் பிடித்தனர்.

    பிடிபட்ட ரமேஷ் பாட்டில், மணிஷ்,கருணாராம் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து 12 கிலோ தங்கம், ரூ.6 லட்சத்து 75 ஆயிரம், இரண்டு டம்மி துப்பாக்கிகள், அரிவாள்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மீட்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 62 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கொள்ளையர்கள் ரமேஷ் பாட்டில், மணிஷ், கருணாராம் ஆகிய 3 பேரும் சீர்காழி போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தியபோது வழுக்கி விழுந்தனர். இதில் 3 பேருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரையும் போலீசார் மீண்டும் சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    கைதான மணிஷ், ரமேஷ் பாட்டில், கருணாராம் ஆகிய 3 பேரையும் போலீசார், சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) அமிர்தம் முன்பு ஆஜர்படுத்தினர். 3 பேரையும் வருகிற 11-ந்் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் சிறைக்கு அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.
    வசதியாக வாழ நினைத்த கொள்ளையர்கள், நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
    சீர்காழி:

    சீர்காழியில், நகைக்கடை உரிமையாளரின் மனைவி-மகனை கொன்று விட்டு 17 கிலோ நகைகளை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். நகைகளுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றான்.

    இதனால் போலீசார் திருப்பி சுட்டதில் கொள்ளையர்களில் ஒருவன், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானான். மேலும் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மஹிபால், மணிஷ், ரமேஷ் ஆகிய 3 பேரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இவர்களில் மணிஷ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிளைவுட் கடையிலும், ரமேஷ் மற்றும் மஹிபால் ஆகிய இருவரும் கும்பகோணம் பகுதியில் உள்ள கடைகளிலும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழியில் நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வரும் தன்ராஜ் சவுத்ரி தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானிற்கு செல்லும்போது அங்கு நடக்கும் விழாக்களில் பெயர் சொல்லும் அளவிற்கு நிதி உதவியும், பொருள் உதவியும் வழங்கி வந்துள்ளார். இதனை வடமாநில கொள்ளையர்களான மஹிபால், ரமேஷ், மணிஷ் ஆகிய 3 பேரும் அறிந்து கொண்டனர்.

    இதனையடுத்து அவரைப்போல் தாங்களும் வசதியாக வாழவேண்டும் என எண்ணிய 3 பேரும் தன்ராஜ் சவுத்ரி வீட்டில் நகைகள் இருப்பதை அறிந்து அவரது வீட்டில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படியே இவர்கள் 3 பேரும் நேற்று காலை தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் மகனை கொன்று வீட்டில் இருந்த 17 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
    சீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த நகை வியாபாரி தன்ராஜ் என்பவரது வீட்டில், 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தன்ராஜின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) ஆகியோரை கொடூரமாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

    மேலும் இந்த கொடூர தாக்குதலில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கொலையாளிகள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் கொள்ளை கும்பல் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது.

    இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,கடலூர் மாவட்டம் எருகூர் அருகே வட மாநிலத்தை சேர்ந்த மனீஷ், ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ தங்க நகைகள், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளையர்களில் ஒருவரான மஹிபால் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் தப்ப முயன்ற போது என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவரான கருணாராம் என்பவர் தப்பியோடிய நிலையில், அவரை கும்பகோனத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கருணாராம், சீர்காழி அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
    சீர்காழியில் தாய்-மகனை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவம் மற்றும் கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (வயது50). இவர் தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48), மகன் அகில் (25), மருமகள் நிகில்(24) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இன்று காலை 6.30 மணிக்கு தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் இந்தியில் பேசியுள்ளனர்.

    அதனை கேட்டு தன்ராஜ்சவுத்ரி கதவைத் திறந்தபோது அவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கடுமையாக தாக்கி வீட்டிற்குள் தள்ளி கதவை தாழிட்டனர்.

    இதைக்கண்டு தடுக்க வந்த ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரையும்அந்த கும்பல் அரிவாளால் வெட்டினர். நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதையடுத்து அந்த மர்ம கும்பல் தன்ராஜ் சவுத்ரியிடம் இருந்து சாவியை வாங்கி லாக்கரில் இருந்த 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் இருந்த சி.சி.டி.வி கேமராவில் காட்சிகள் பதிவான ‘ஹார்ட் டிஸ்க் சிடி’ ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் சாவகாசமாக தன்ராஜ் சவுத்ரியின் வீட்டை விட்டு வெளியில் வந்த 3 பேர் கும்பல் வாசலில் நிறுத்தியிருந்த இருந்த தன்ராஜ் சவுத்ரியின் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சீர்காழி டி.எஸ்.பி. யுவபிரியா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மர்ம நபர்கள் தாக்குதலில் காயமடைந்த தன்ராஜ்சவுதரி, அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தாய்-மகனை கொடூரமாக கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கும்பல் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 7 தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    சீர்காழி அடுத்த எருக்கூர் பகுதி சாலையோரம் கொள்ளையர்கள் எடுத்து சென்ற கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் காரை சோதனையிட்டபோது அதில் கொள்ளையடித்த நகைகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் பொருத்தியிருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவியில் அவர்கள் சீர்காழியில் இருந்து புறப்பட்டு வன்னிகோவில் வழியாக வந்திருந்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், தனிப்பிரிவு போலீசார் சதீஷ், இளையராஜா ஆகியோர் டி.எஸ்.பி. யுவப்பிரியா மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அப்பகுதி கருப்பன்தோட்டத்தில் பதிவாகியிருந்த காலடி தடங்களை பின்பற்றி சென்று விசாரித்தபோது அங்குள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில் 3 பேர் பதுங்கி இருப்பதாக கிராம மக்கள் கூறினர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தபோது அதில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதில் ஒரு தனிப்படை போலீஸ்காரர் கையில் குண்டு காயம் ஏற்பட்டது. இதை கண்ட மற்ற தனிப்படை போலீசார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதையடுத்து மற்ற 2 பேரையும் பிடித்து சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மேலும் ஒரு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் மனிஷ் (22), ரமேஷ் (22), மணிபால்சிங் (24) என்பதும், 3 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் மணிபால்சிங் இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இதில் ஒருவர் தன்ராஜ்சவுத்ரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாதால் தன்ராஜ் சவுத்ரி அவரை திட்டி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடை மற்றும் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அந்த நபர் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்த ஒரு பையில் சோதனையிட்டபோது அதில் நகைக்கடை வியாபாரி தன்ராஜ் சவுத்ரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கும்பலை 4 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பாராட்டினார். மேலும் கொள்ளையர்கள் சுட்டபோது காயமடைந்த போலீஸ்காரருக்கு மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறி உரிய சிகிச்சைக்கு உத்தரவிட்டார்.

    தாய்-மகனை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவம் மற்றும் கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×