search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் ஆயுதங்கள்
    X
    கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் ஆயுதங்கள்

    தாய்-மகனை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேர் சிறையில் அடைப்பு

    சீர்காழியில், நகைக்கடை அதிபர் வீட்டுக்குள் புகுந்து தாய்-மகனை கழுத்தை அறுத்துக்கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து 12 கிலோ தங்கம், ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ெரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி(வயது 50). இவர், சீர்காழி அருகே உள்ள பூம்புகார் தர்மபுரம் பகுதியில் நகை விற்பனை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இது தவிர நகை மொத்த வியாபாரமும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஆஷா(45). இவர்களது மகன் அகில்(24). மருமகள் நிகில்(21). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் காலை சவுத்ரியின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். காலை 6 மணி அளவில் தன்ராஜ் சவுத்ரி வீட்டுக்குள் நுழைந்த 3 வாலிபர்கள், தன்ராஜ் சவுத்ரி உள்ளிட்ட 4 பேரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி நகை-பணம் இருக்கும் இடத்தை கேட்டு ஆயுதங்களால் தாக்கினர்.

    பின்னர் தன்ராஜ் சவுத்ரி, நிகில் ஆகிய இருவரையும் கட்டிப்போட்டு நகை-பணம் இருக்கும் இடத்தை கேட்டுள்ளனர், நகைகள் இருக்கும் இடத்தை அவர்கள் யாரும் சொல்ல மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், தாய்-மகன் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு வீட்டில் நிறுத்தி இருந்த தன்ராஜ் சவுத்ரியின் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் சீர்காழி அருகே உள்ள பட்டவிளாகம் ரோடு பணிக்கிருப்பு என்ற இடத்தில் சென்றபோது கார் பழுதானதால் காரை அங்கேயே நிறுத்தி விட்டு வயல்வெளி வழியாக நடந்து சென்று அந்த பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் பதுங்கி உள்ளனர்.

    கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற தன்ராஜ் சவுத்ரியின் காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் அந்த கார் நின்ற இடம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றபோது கார் மட்டுமே அங்கு நின்றது. காருக்குள் யாரும் இ்ல்லை. போலீசார் அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது காருக்குள் நகைகள் சிதறிக்கிடந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு உள்ள சவுக்கு தோப்பில் 3 பேர் ஓடிச்சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர்.

    கொள்ளையர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்களில் ஒருவன் போலீசாரை தாக்க முயன்றதுடன், தான் வைத்து இருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றான். உடனே போலீசார் அவனை நோக்கி சுட்டனர். இதில் கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரின் என்கவுண்ட்டரில் பலியானான்.

    மற்ற 2 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் கங்காவாஸ் மஜாதேவ்ஜி காளிமேடு பகுதியை சேர்ந்த ஜெகராம் மகன் ரமேஷ் பாட்டில் (27), ஜோத்காபூர் பட்டேல் ராம் மகன் மணிஷ்(23) என்பதும், போலீசாரின் என்கவுண்ட்டரில் பலியானவர் ஜலோர் மாவட்டம் சித்தல்வான் ஊராட்சி அகாலி கிராமம் மோகம் பகுதியை சேர்ந்த சரவன்சிங் மகன் மஹிபால்(28) என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வசித்து வந்த கருணாராம் என்பவரையும் போலீசார் பிடித்தனர்.

    பிடிபட்ட ரமேஷ் பாட்டில், மணிஷ்,கருணாராம் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து 12 கிலோ தங்கம், ரூ.6 லட்சத்து 75 ஆயிரம், இரண்டு டம்மி துப்பாக்கிகள், அரிவாள்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மீட்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 62 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கொள்ளையர்கள் ரமேஷ் பாட்டில், மணிஷ், கருணாராம் ஆகிய 3 பேரும் சீர்காழி போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தியபோது வழுக்கி விழுந்தனர். இதில் 3 பேருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரையும் போலீசார் மீண்டும் சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    கைதான மணிஷ், ரமேஷ் பாட்டில், கருணாராம் ஆகிய 3 பேரையும் போலீசார், சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) அமிர்தம் முன்பு ஆஜர்படுத்தினர். 3 பேரையும் வருகிற 11-ந்் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் சிறைக்கு அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×