search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் என்கவுன்ட்டரில்  ஒருவர் உயிரிழப்பு
    X
    போலீசார் என்கவுன்ட்டரில் ஒருவர் உயிரிழப்பு

    தாய்-மகனை கொன்று 17 கிலோ நகை கொள்ளை- என்கவுன்டரில் வடமாநில வாலிபர் சுட்டுக்கொலை

    சீர்காழியில் தாய்-மகனை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவம் மற்றும் கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (வயது50). இவர் தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48), மகன் அகில் (25), மருமகள் நிகில்(24) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இன்று காலை 6.30 மணிக்கு தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் இந்தியில் பேசியுள்ளனர்.

    அதனை கேட்டு தன்ராஜ்சவுத்ரி கதவைத் திறந்தபோது அவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கடுமையாக தாக்கி வீட்டிற்குள் தள்ளி கதவை தாழிட்டனர்.

    இதைக்கண்டு தடுக்க வந்த ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரையும்அந்த கும்பல் அரிவாளால் வெட்டினர். நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதையடுத்து அந்த மர்ம கும்பல் தன்ராஜ் சவுத்ரியிடம் இருந்து சாவியை வாங்கி லாக்கரில் இருந்த 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் இருந்த சி.சி.டி.வி கேமராவில் காட்சிகள் பதிவான ‘ஹார்ட் டிஸ்க் சிடி’ ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் சாவகாசமாக தன்ராஜ் சவுத்ரியின் வீட்டை விட்டு வெளியில் வந்த 3 பேர் கும்பல் வாசலில் நிறுத்தியிருந்த இருந்த தன்ராஜ் சவுத்ரியின் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சீர்காழி டி.எஸ்.பி. யுவபிரியா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மர்ம நபர்கள் தாக்குதலில் காயமடைந்த தன்ராஜ்சவுதரி, அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தாய்-மகனை கொடூரமாக கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கும்பல் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 7 தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    சீர்காழி அடுத்த எருக்கூர் பகுதி சாலையோரம் கொள்ளையர்கள் எடுத்து சென்ற கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் காரை சோதனையிட்டபோது அதில் கொள்ளையடித்த நகைகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் பொருத்தியிருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவியில் அவர்கள் சீர்காழியில் இருந்து புறப்பட்டு வன்னிகோவில் வழியாக வந்திருந்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், தனிப்பிரிவு போலீசார் சதீஷ், இளையராஜா ஆகியோர் டி.எஸ்.பி. யுவப்பிரியா மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அப்பகுதி கருப்பன்தோட்டத்தில் பதிவாகியிருந்த காலடி தடங்களை பின்பற்றி சென்று விசாரித்தபோது அங்குள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில் 3 பேர் பதுங்கி இருப்பதாக கிராம மக்கள் கூறினர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தபோது அதில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதில் ஒரு தனிப்படை போலீஸ்காரர் கையில் குண்டு காயம் ஏற்பட்டது. இதை கண்ட மற்ற தனிப்படை போலீசார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதையடுத்து மற்ற 2 பேரையும் பிடித்து சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மேலும் ஒரு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் மனிஷ் (22), ரமேஷ் (22), மணிபால்சிங் (24) என்பதும், 3 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் மணிபால்சிங் இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இதில் ஒருவர் தன்ராஜ்சவுத்ரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாதால் தன்ராஜ் சவுத்ரி அவரை திட்டி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடை மற்றும் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அந்த நபர் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்த ஒரு பையில் சோதனையிட்டபோது அதில் நகைக்கடை வியாபாரி தன்ராஜ் சவுத்ரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கும்பலை 4 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பாராட்டினார். மேலும் கொள்ளையர்கள் சுட்டபோது காயமடைந்த போலீஸ்காரருக்கு மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறி உரிய சிகிச்சைக்கு உத்தரவிட்டார்.

    தாய்-மகனை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவம் மற்றும் கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×