என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தத்தங்குடி ஊராட்சி மலைக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தத்தங்குடி ஊராட்சி மலைக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கருத்தரிப்பு ஊசி, கர்ப்பப்பை பரிசோதனை, குடற்புழு நீக்கம் மற்றும் இதர கால்நடை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடை டாக்டர் சந்தோஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன், கால்நடை உதவியாளர் கயல்விழி கலந்து கொண்டனர்.
    சீர்காழி உப்பனாற்றங்கரை அருகே மீன் கடை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழியில் பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற தொகுதி இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சீர்காழி இளைஞரணி நகர தலைவர் புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட தலைவர் பாரதிகண்ணன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சீர்காழி நகர தலைவர் அருணாச்சலம், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் வினோத், மாவட்ட பொது செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சுசீந்தர், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கொரோனா சமயத்தில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளின் வாடகைகளை தள்ளுபடி செய்ய நகராட்சிக்கு கோரிக்கை வைப்பது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு ரூ.1000-மும், பெண் குழந்தைக்கு ரூ.500-ம் கட்டாயமாக வசூலிப்பதை கண்டித்து சுகாதாரத்துறைக்கு புகார் மனு அளிப்பது.

    சீர்காழி நுழைவு வாயிலாக உள்ள உப்பனாற்றங்கரை அருகே மீன் கடை அமைப்பதை தடை செய்ய வேண்டும். புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையங்களில் உள்ள சாக்கடைகளை சரி செய்யக்கோரி மனு அளிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே கீழையூர் உடையவர் இருப்பு தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி கொண்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். வரும் வழியில் நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வீரமணி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறையில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கீழபட்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அருள் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு இவர் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள குதிரைகள் கட்டிவைக்கப்பட்டுள்ள கொட்டகையில் தூங்கினார். இன்று காலை அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அருளை தட்டி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திடீரென அந்த கும்பல் அரிவாளால் அருளை சரமாரியமாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருளின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக அருள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது.
    மயிலாடுதுறை:

    மத்திய அரசு சமீபத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை அலோபதி மருத்துவத்துடன் இணைத்து கலப்பு மருத்துவ முறையை அனுமதித்துள்ளது. இந்த மருத்துவ முறைக்கு டாக்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நேற்று இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டம் என்ற தலைப்பில் வாயை மூடி மவுனமாக நின்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு நாகை மாவட்ட பல் மருத்துவ சங்க செயலாளர் சையது அன்வா் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது பல் டாக்டர்கள் முகக் கவசம் அணிந்தபடி தங்கள் வாயை மூடி மவுனமாக நின்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    அரை மணி நேரம் மவுனமாக நின்ற பல் மருத்துவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்

    மயிலாடுதுறையில் 16 வயது சிறுமி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி வீட்டில் இருந்தபோது செல்போனில் பேசிய ஒருவர் சிறுமியை தான் படிக்க வைப்பதாகவும், மேலும் பல ஆசை வார்த்தைகளை கூறியும் அந்த சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குத்தாலம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,100 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஸ்ரீகண்டபுரம் வழியாக புதுச்சேரியில் இருந்து சாராயம் காரில் கடத்தி வரப்படுவதாக பாலையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாலையூர் போலீசார் ஸ்ரீகண்டபுரம் கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1,100 லிட்டர் சாராயம் 11 ஆயிரம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கார் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டிவந்த வழுவூர் நெய்க்குப்பை தோப்பு தெருவை சேர்ந்த நடேசன் மகன் ராம்கி (வயது33) என்பவரை கைது செய்தனர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் அரசு ஊழியர்கள் 6-வது நாளான சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 6-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கலா தலைமை தாங்கினார்.

    போராட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலர் கைதாக மறுத்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு வேனில் ஏற்றினர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கலா, அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க வட்ட செயலாளர் சிவபழனி என அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 10 பெண்கள் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    சாலை மறியல் போராட்டத்தால் கச்சேரி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்திற்கு முன்னதாக அரசு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் ராயர், பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் லலிதா, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது அவர் யாரும் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தினார்.
    மயிலாடுதுறை:

    தமிழகம் முழுவதும் கட்ந்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் லலிதா போட்டு் கொண்டார்.

    தொடர்ந்து வருவாய்த்துறை பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் லலிதா, நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார்.
    மணல்மேடு அருகே வி‌‌ஷம் தின்ற கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அடுத்த சேத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மகள் சினேகா(வயது 18). இவர் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக சினேகா வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது. இதில் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் எலி மருந்தை(வி‌‌ஷம்) தின்று மயங்கி விழுந்தார். 

    பின்னர் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த சினேகாவின் பெற்றோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சினேகாவை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சினேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 22 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 4-வது நாளாக நடந்த இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தின்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்துக்கொண்டு கைதாக மறுத்தனர். இதனையடுத்து சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கொண்டு வேனில் ஏற்றினர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நடராஜன், அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கலா என அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 22 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் கச்சேரி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மயிலாடுதுறையில் 3-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3-வது நாளாக நடந்த இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

    அரசு துறையில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ேபாராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில அவர்களை் தங்க வைத்தனர்.

    ×