என் மலர்
செய்திகள்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை ஊழியர் ஒருவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்ற காட்சி
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 6-வது நாளாக சாலை மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் அரசு ஊழியர்கள் 6-வது நாளான சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 6-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கலா தலைமை தாங்கினார்.
போராட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலர் கைதாக மறுத்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு வேனில் ஏற்றினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கலா, அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க வட்ட செயலாளர் சிவபழனி என அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 10 பெண்கள் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தால் கச்சேரி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்திற்கு முன்னதாக அரசு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் ராயர், பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
Next Story






