என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழி அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலதேனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. கட்டிட தொழிலாளியான இவருடைய மகள் இலக்கியா (வயது 18). இவர் பூம்புகார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி கல்லூரிக்கு போகாமல் விடுமுறையில் இருந்து வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இலக்கியா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். நகர, ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் வரவேற்று பேசினார். இதில் கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம் கலந்து கொண்டு பேசினார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தின்போது தி.மு.க.வினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பாதிப்பை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ் ஒன்றை மாட்டு வண்டியில் கட்டி சிறிது தூரம் இழுத்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாலை அணிவிக்கப்பட்ட 2 கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் அன்பழகன், அருள்செல்வன், சத்தியசீலன், பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு தலைவிகள் காமாட்சி மூர்த்தி, நந்தினிஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இமயநாதன் நன்றி கூறினார்.
    குத்தாலம் அருகே சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    குத்தாலம் தாலுகா சின்னகொக்கூர் பீமாராவ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சூரியமூர்த்தி (வயது22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் செண்பகச்சேரி மெயின் ரோட்டில் சென்றார். அப்போது ஒரு வீட்டின் சுற்றுச்சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த சூரியமூர்த்தி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூரியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பூம்புகார் அருகே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவெண்காடு:

    பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தூண்டிக்காரன் (வயது 56). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜு (60) என்பவரும் நேற்று முன்தினம் மாலை சமுதாயக்கூடம் அருகே பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்துக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (35) என்பவர், என்னுடைய சித்தப்பாவிடம் ஏன் சண்டை போடுகிறாய் என தூண்டிகாரனை தட்டி கேட்டுள்ளார். இதனால் தூண்டிக்காரனுக்கும், பாக்கியராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ், தூண்டிக்காரனை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் தூண்டிக்காரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தூண்டிக்காரனை மீட்டு சிகிச்சைக்காக பூம்புகார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தூண்டிக்காரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜு மற்றும் பாக்யராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ரமே‌‌ஷ் குமார் தலைமை தாங்கினார், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கருணாகரன் வரவேற்று பேசினார், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளாராஜ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆகியவை கண்டறியப்பட்டு அவற்றிற்கு மருந்துகள் வழங்கப்பட்டது, முகாமில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர். முகாமில் சிறப்பு மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள எமன் பயம் போக்கும் திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்ய வந்தார்.

    அவருக்கு மாவட்ட கலெக்டர் இரா.லலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் தருமைபுரம் ஆதீனம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பாக ஆதீனம் மீனாட்சி சந்தர தம்பிரான் தலைமையில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் எமன் பயம் போக்கும் சம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி தரிசனம் செய்ய வந்தேன். கொரோனா தடுப்பூசி போட ஊக்கப்படுத்தபட வேண்டும் புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கான நன்மைகள் நிச்சயம் நடக்கும். நியமன எம்.எல்.ஏக்களுக்கு ஓட்டுரிமையை சட்டரீதியாக பார்த்துக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மயிலாடுதுறையில் 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.











    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). கட்டிட தொழிலாளி இவரது வீட்டின் அருகில் உள்ள டியூஷன் சென்டருக்கு வந்த 7-ம் வகுப்பு மாணவியை மூர்த்தி கடந்த 1½ ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். 

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கிருந்து மூர்த்தி தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் மூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    மயிலாடுதுறை அருகே விபத்தில் பைனான்சியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பட்டமங்கல தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது54). கரூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், மயிலாடுதுறை பகுதியில் வட்டி தொழில் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று சண்முகம் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையிலிருந்து சித்தர்காடு நோக்கி சென்றார். மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலம் அருகில் சண்முகம் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், சண்முகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த சண்முகம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம் மீது மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்திய மயிலாடுதுறை மூவலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் பிரேம்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் ராமானுஜம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்பை உடனடியாக வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து துறை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பிச்சைப்பிள்ளை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சிவபழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சீர்காழியில் கணவர் மதுகுடித்து வந்ததால் மனவேதனை அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் ரகுவீர் (வயது 35). இவருக்கும் திருச்சி திருவெறும்பூர் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகள் புவனேஸ்வரி (32) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு ரகுவீர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி புவனேஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புவனேஸ்வரியின் தாயார் மகாலட்சுமி சீர்காழிக்கு வந்து கணவன்-மனைவியை சமாதானம் செய்து விட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் ரகுவீர் நேற்று முன்தினம் மீண்டும் மதுகுடித்து விட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி, இரவில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இவர் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முகநூல் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்த பெண் மேலும் 5 பேரை திருமணம் செய்ததாக கணவர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க டிரைவர் ஒருவர் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரையிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் முகநூலில் என்னோடு அறிமுகம் ஆனார். 6 மாதங்கள் எங்களுக்குள் தொடர்ந்த இந்த நட்பு காதலாகி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.

    நான் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவுடன் எனது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக எனது உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேகமடைந்த நான் அந்த பெண்ணின் செல்போனை சோதனை செய்து பார்த்தேன். அப்போது அந்த பெண்ணுக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அறிந்த நான் அந்த பெண்ணை கண்டித்ததால் அவர், தனது தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றார்.

    அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் அப்பெண் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.

    எனது வீட்டை விட்டுச் செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் சங்கிலி மற்றும் ரூ.70 ஆயிரத்தை அந்த பெண் எடுத்துச் சென்று விட்டார். முகநூல் மற்றும் டிக்டாக்கில் தனது பதிவுகளை பதிவிட்டு அதற்கு பதில் பதிவிடும் இளைஞர்களை குறிவைத்து அந்த பெண் ஏமாற்றி உள்ளார்.

    தற்போது வரையில் 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. எனவே என்னை ஏமாற்றிச் சென்ற அந்த பெண்ணைக் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மணல்மேடு அருகே வைத்தியம்பேட்டை சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே வைத்தியம்பேட்டை மெயின்ரோட்டில் அபாய கரமான பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. அந்த குழாயில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பழுதால் குடிநீர் கசிந்து வெளியேறியது. அதனை சரி செய்ய தோண்டிய பள்ளம் மீண்டும் மூடி தார்சாலை அமைக்கப்பட்டது. அப்படி இருந்தும் அந்த இடத்தில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. அதில் அடிக்கடி வாகனங்கள் சென்று வந்ததால், சிறிய பள்ளம் அபாயகரமான பள்ளமாக மாறிவிட்டது. இந்த பள்ளத்தை கடந்து தான் கும்பகோணம், தஞ்சாவூர், காட்டுமன்னார்குடி, கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், வைத்தீஸ்வரன்கோவில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த அபாயகரமான பள்ளம் சரிசெய்யப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    ×