என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் தோட்டப்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் சந்தைப்படுகை, நாதல்படுகை, முதலை மேடு திட்டு, திட்டுபடுகை, நாணல் படுகை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, காக்கரட்டான் உள்ளிட்ட மலர் வகைகளும், மிளகாய், வெண்டை, கத்தரி, புடலங்காய், கீரை உள்ளிட்ட காய்கறி வகைகளும் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு தோட்டங்களிலும் காய்கறி, மலர் சாகுபடி செய்து இருந்தனர்.

    மழை வெள்ளத்தால் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்படுவதால் இப்பகுதியில் பெரும்பாலானோர் காய்கறி, மலர் போன்ற தோட்டப்பயிர்களை சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமாக தோட்டப்பயிர்கள் உள்ளன.

    நாள்தோறும் மலர் மற்றும் காய்கறிகளை பறித்து நகர் பகுதிக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடமும் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்வது இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி தண்ணீராலும், இப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும் தோட்டப்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அதிகப்படியான உபரிநீர் திறப்பால் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்கள் பலவற்றில் வெள்ளம் புகுந்தது. ஒரு வாரத்துக்கு மேலாக இந்த பகுதியில் தோட்டப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

    தற்போது தண்ணீர் வடிந்து விட்ட நிலையில் தோட்டப்பயிர்கள் முற்றிலும் அழுகி வீணாகி இருப்பதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மலர் செடிகள் 2 ஆண்டுகள் பராமரிப்புக்கு பின்னர் வருமானம் தரக்கூடியவை. தற்போது மலர் செடிகளில் இருந்து கிடைக்கும் மகசூலுக்காக எதிர்பார்த்திருந்த நேரத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் பயிர்களை பாதித்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘காய்கறி, மலர் செடிகளில் இருந்து வருவாய் கிடைக்கும் நேரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் எப்படி சாகுபடி செய்யப்போகிறோம் என தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் செடிகளை நட்டு பராமரித்து பலன்கள் கிடைக்கும் தருவாயில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், செடிகள் அழிந்து விடுகின்றன. இது தொடர்கதையாக உள்ளது’ என்றனர்.
    திருக்கடையூர் அருகே திருவிடைக்கழி கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அருகே திருவிடைக்கழி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவில் சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். பரிகார ஸ்தலமும் கூட. திருப்பணிகள் முடிந்து இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு மர்மநபர் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் உள்ளிட்ட போலீசார் புகாரின்பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
    நிச்சயித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தியில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரை சேர்ந்த தங்கையன் மகன் சின்னத்தம்பி (வயது28). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை நிச்சயம் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அந்த பெண்ணை திடீரென காணவில்லை. அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு சின்னத்தம்பி பேசியபோது, அவர் தனக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி விட்டதாக கூறி உள்ளார். இதையடுத்து, ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது நிச்சயதார்த்தத்துக்கு செலவு செய்த ரூ.50ஆயிரம், சின்னத்தம்பி வாங்கித்தந்த தங்க சங்கிலி, செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருப்பி தந்துவிடுவதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். ஆனால் பொருட்கள் மற்றும் பணத்தை தராமல் சின்னத்தம்பி குடும்பத்தினரை, பெண்ணின் வீட்டார் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னத்தம்பி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாங்கள் செலவு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு மணல்மேடு போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி புகார் அளித்தனர். இந்த நிலையில் சின்னத்தம்பியை பெண்ணின் உறவினர் ஒருவர் செல்போன் மூலமாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்தும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மணல்மேடு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த சின்னத்தம்பி நேற்று முன்தினம் இரவு எலிமருந்தை (விஷம்) கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள கிராமத்தில் உள்ள குளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை இன்று காலை வனத்துறையினரால் பிடிபட்டது

    சீர்காழி:

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும்போது கரையோர கிராமங்களில் உள்ள குளங்கள், ஊர்களில் முதலை தண்ணீரோடு புகுந்து வந்துவிடுவது வழக்கம். அதன்படி கொள்ளிடம் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்தில் உள்ள பாப்பாகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்க சென்ற பொதுமக்கள் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மக்கள் நடமாட்டத்தால் முதலை உடனடியாக தண்ணீருக்குள் சென்றுவிட்டது. கொள்ளிடம் ஆற்று நீரில் அடித்துவரப்பட்ட முதலை வடிகால், வாய்க்கால் வழியாக புகுந்து குளத்திற்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    குளங்களில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி சப்-கலெக்டர் நாராயணன் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவரின் அறிவுறுத்தலின்படி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு முதலை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குளம் அருகே வலைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதலை வலையில் சிக்கிபிடிபட்டது. பிடிபட்ட முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஆற்று பகுதியில் கொண்டுவிட பணியில் ஈடுபட்டனர்.சோதியகுடி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    மயிலாடுதுறையில் ஆண்டு திருவிழாவையொட்டி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
    மயிலாடுதுறையில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன் அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார். கூறைநாடு பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார், ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், திருத்தொண்டர் பீட்டர் துரைராஜ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணன் “நாளைக்காக கவலைப்படாதீர்கள்” என்ற தலைப்பில் பேசினார்.

    இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு ஆஸ்பத்திரி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
    பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி மணல்மேட்டில், பா.ஜ.க.வினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர். 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மணல்மேட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி பா.ஜ.க.வினர்‌ மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு பா.ஜ.க. விவசாய அணி தலைவர் குஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் தங்க.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில செயலாளர் தங்க.வரதராஜன் கலந்து கொண்டு மாட்டு வண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது அங்கு வந்த மணல்மேடு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி மாட்டுவண்டி ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்றும், மீறி நடத்தினால் கைது செய்வோம் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து மாட்டு வண்டி ஊர்வலத்தை கைவிட்டு பா.ஜ.க.வினர் மணல்மேடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், நகர தலைவர் மோடி கண்ணன், மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் நேதாஜி, தமிழ்வாணன், சுந்தரவடிவேல் மற்றும் 20 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதே பகுதி வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் கார்த்திக் (வயது20) என்பது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் அரவிந்த் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்தும் 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    கொள்ளிடம்:

    கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் குமரக்கோட்டகம், வேம்படி, இருவகொள்ளை, வாடி, கேவர்ஓடை வெள்ளகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலத்துக்கும் மேலாக பெய்து வரும் தொடர் கனமழையால் இந்த பகுதிகளில் பயிரிடப்பட்ட 2 மாதங்களே ஆன சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு கணக்கெடுக்கும் பணிக்கு வந்திருந்தனர்.

    அவர்களை விவசாயிகள் தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகையாக ஒரு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் இடுபொருட்கள் தங்களுக்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தி அழுகிய பயிர்களை கையில் ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் விவசாயிகள் கூறும்போது, முடவன் ஆற்றில் கதவணையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததாலும், இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததாலும் விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. எனவே இப்பகுதி விவசாயிகள் நலன் கருதி நிரந்தரமாக வடிகால் வசதியை ஏற்படுத்தி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
    காப்பீடு மூலம் மட்டுமே சுமார் 100 ஏக்கர் பயிருக்கு ரூ.22 லட்சம் முறைகேட்டில் வி.ஏ.ஓ. ஈடுபட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்ற வகையில் பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ளது முட்டம் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 2020ம் ஆண்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். அந்த பயிர்களுக்கு சிட்டா, அடங்கலுடன் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு என்பவரிடம் சமர்ப்பித்து பயிர் காப்பீட்டினையும் செய்திருந்தனர்.

    அந்த பருவத்தில் பெய்த கனமழை காரணமாக சம்பா பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 68 சதவீத தொகையாக ரூ.22 ஆயிரத்தை காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இந்த காப்பீட்டுத் தொகையானது 4-ல் ஒருபங்கு விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். அவர்களிடம் உழவன் செயலியை பயன்படுத்தி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இதையடுத்து, உழவன் செயலியில் பார்த்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், அதே புல எண்ணில் வேறொரு நபருக்கு தொகை செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர்கள் யார் என பார்த்ததில், அவர்கள் அனைவருமே கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது.

    மேலும் அதிர்ச்சியாக சிலரது புல எண்ணுக்கான காப்பீட்டுத் தொகை கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் பெயருக்கே வரவு வைக்கப்பட்டிருந்தது. மேலும் விவசாயிகளின் நிலத்தின் பேரில் வங்கியில் பயிர்க்கடன் பெற்று அதற்கு விவசாய தள்ளுபடியையும் பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, அவரிடம் சென்று விவசாயிகள் கேட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    அப்புகாரில் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு போலியான சிட்டா, அடங்கல் வழங்கி மறையூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றும், அதன்பேரில் பயிர் காப்பீடு பெற்றும் ஊழல் செய்துள்ளதாகவும், அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

    காப்பீடு மூலம் மட்டுமே சுமார் 100 ஏக்கர் பயிருக்கு ரூ.22 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்ற வகையில் பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    சீர்காழியில் 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சட்டைநாதர் கோவில், அமிர்தகடேஸ்வரர் கோவில்களுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, திருமுல்லைவாசல், கொண்டல், அகணி, எடக்குடி வடபாதி, கடவாசல், விளந்திடசமுத்திரம், அத்தியூர், ராதாநல்லூர், தாழந்தொண்டி, தொடுவாய், ஆமபள்ளம், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருகின்றன.

    இதேபோல வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, கதிராமங்கலம், விளந்திடசமுத்திரம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.

    எடமணல் அருகே பெரிய தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதன் காரணமாக மழைநீர் வடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. எடமணல் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு முழுவதும் மழைநீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய நெடுஞ்சாலைகளில் மழை நீர் வடிய வழியில்லாமல் தேங்கி உள்ளது. திருமுல்லைவாசல் தொடுவாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றம் காரணமாக திருமுல்லைவாசல் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

    சீர்காழியை அடுத்த திருக்கருக்காவூர் கிராமத்தில் உப்பனாற்று கரை உடைந்து வயல்களில் கடல் நீர் புகுந்ததால் 750 ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக கொள்ளிடம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 16 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்து முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத்தொடர்ந்து தண்ணீரை என்ஜின் மூலம் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.

    இதேபோல சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

    திருவெண்காடு அருகே நெப்பத்தூர்-தென்னம்பட்டினம் ஊராட்சியை இணைக்கும் நாட்டுக்கண்ணி மண்ணியாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாலம் பழுதடைந்ததால் அதன் அருகே ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பழைய தரைப்பாலத்தில் போக்குவரத்து நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று தரைப்பாலம் திடீரென உள்வாங்கியதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் பாலத்தை பார்வையிட்டார். இதை தொடர்ந்து இந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
    மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ராஜா தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் தற்போது திருப்பூரில் வேலை இல்லாத காரணத்தால் திவாகர் சொந்த ஊருக்கு திரும்பினார். வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட திவாகரின் சகோதரி பிரபாவதி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழீழ விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் மாவீரர் நாள் நவம்பர் 27-ல் நினைவு கூறப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உயிர்த் தியாகம் செய்த முதல் போராளி லெப்டினன் சங்கர் வீரச்சாவடைந்த நாள் இதுவாகும்.

    மாவீரர் நாளில் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் வீரத் தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி, மாவீரர் கனவை நனவாக்க உறுதியேற்கிறார்கள். தமிழீழம் என்கிற உயர்ந்த லட்சியத்துக்காக உலகிலுள்ள எல்லா தமிழர்களும் தத்தமது பங்கினை ஆற்ற உறுதியேற்கும் நாளாகவும் இந்த நாள் அமைகிறது.

    “இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்” என்று தமது கடைசி (2008) மாவீரர் நாள் உரையில் மாவீரன் பிரபாகரன் தெரிவித்தார்.

    ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை ஆகும். போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்டக் களங்கள் மாறலாம்; ஆனால், தனித் தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வு. தமிழீழம் மலரும் நாள் விரைவில் அமைய பாடுபடுவோம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்... சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடைமழையிலும் ஆவின் பால் தடையின்றி வினியோகம்

    ×