search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காக்கரட்டான் பூ செடிகள் பாதிக்கப்பட்டு இருப்பதை சோகத்துடன் பார்வையிடும் விவசாயிகள்.
    X
    காக்கரட்டான் பூ செடிகள் பாதிக்கப்பட்டு இருப்பதை சோகத்துடன் பார்வையிடும் விவசாயிகள்.

    கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் தோட்டப்பயிர் சாகுபடி பாதிப்பு- விவசாயிகள் கண்ணீர்

    கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் தோட்டப்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் சந்தைப்படுகை, நாதல்படுகை, முதலை மேடு திட்டு, திட்டுபடுகை, நாணல் படுகை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, காக்கரட்டான் உள்ளிட்ட மலர் வகைகளும், மிளகாய், வெண்டை, கத்தரி, புடலங்காய், கீரை உள்ளிட்ட காய்கறி வகைகளும் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு தோட்டங்களிலும் காய்கறி, மலர் சாகுபடி செய்து இருந்தனர்.

    மழை வெள்ளத்தால் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்படுவதால் இப்பகுதியில் பெரும்பாலானோர் காய்கறி, மலர் போன்ற தோட்டப்பயிர்களை சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமாக தோட்டப்பயிர்கள் உள்ளன.

    நாள்தோறும் மலர் மற்றும் காய்கறிகளை பறித்து நகர் பகுதிக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடமும் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்வது இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி தண்ணீராலும், இப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும் தோட்டப்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அதிகப்படியான உபரிநீர் திறப்பால் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்கள் பலவற்றில் வெள்ளம் புகுந்தது. ஒரு வாரத்துக்கு மேலாக இந்த பகுதியில் தோட்டப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

    தற்போது தண்ணீர் வடிந்து விட்ட நிலையில் தோட்டப்பயிர்கள் முற்றிலும் அழுகி வீணாகி இருப்பதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மலர் செடிகள் 2 ஆண்டுகள் பராமரிப்புக்கு பின்னர் வருமானம் தரக்கூடியவை. தற்போது மலர் செடிகளில் இருந்து கிடைக்கும் மகசூலுக்காக எதிர்பார்த்திருந்த நேரத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் பயிர்களை பாதித்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘காய்கறி, மலர் செடிகளில் இருந்து வருவாய் கிடைக்கும் நேரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் எப்படி சாகுபடி செய்யப்போகிறோம் என தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் செடிகளை நட்டு பராமரித்து பலன்கள் கிடைக்கும் தருவாயில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், செடிகள் அழிந்து விடுகின்றன. இது தொடர்கதையாக உள்ளது’ என்றனர்.
    Next Story
    ×