என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது35). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி இலக்கியா (27) 2 குழந்தைகளுடன் அரையபுரத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி உள்ளார். அவ்வப்போது இலக்கியா ஆனாங்கூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

    கடந்த 9-ந் தேதி சென்று வந்தவர் மீண்டும் நேற்றுமுன்தினம் மதியம் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்கியா உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் சங்கிலி, 850 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை காணவில்லை.

    வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இலக்கியா குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    1½ ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறை- திருச்சி இடையே மீண்டும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 1½ ஆண்டுகளாக ரெயில் சேவை நடைபெறாததால் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்வதற்கு பயணிகள் சிரமப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. காலை 8.15 மணி அளவில் மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை வழியாக திருச்சிக்கு காலை 10.40 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு மயிலாடுதுறைக்கு ரெயில் வந்தடையும்.

    தற்போது வார வேலை நாட்களில் மட்டும் இந்த ரெயில் இயங்கும் என்றும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயங்காது என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பெரிதும் உதவியாக இருந்த இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    அதேநேரம் வர்த்தகர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு ஆராயத்தெரு அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் மகன் கலைவாணன்(வயது 27) என்பவரை பிடித்ததுடன் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், கலைவாணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கொள்ளிடத்தில் நாளை(புதன்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.தெற்கு ராஜன்வாய்க்கால் பாசன சங்க தலைவர் இளங்கோவன், செயலாளர் ஆனந்தகுமார், துணைத் தலைவர் ராஜதுரை, பொருளாளர் ராமு, ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் வரவேற்றார்.

    இதில் விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    2020-21-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதிகாரிகள் நிலத்தில் அறுவடை பரிசோதனை எடுப்பதை நில உரிமையாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு முன்பே கொள்ளிடத்தில் இருந்து புத்தூரில் வாடகை கட்டிடத்தில் மாற்றப்பட்டுள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை மீண்டும் கொள்ளிடத்தில் உள்ள அரசு அலுவலக கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து நாளை(புதன்கிழமை) காலை கொள்ளிடம் கடைவீதியில் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மணல்மேடு அருகே உச்சிதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆழ்வார் மனைவி சங்கீதா (வயது35) என்பவர் ஒரு பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு நபர் பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்து கொண்டு அவர் சத்தமிட்டதால் சங்கிலியை விட்டு விட்டு அந்த நபர் அங்கிருந்த தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து சங்கீதா மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சங்கீதாவிடம் சங்கிலியை பறித்த நபர், அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

    இதையடுத்து சங்கிலியை பறிக்க முயன்று தப்பிச்சென்ற நபரின் வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த பொன்னுக்குட்டி மகன் வீரபாண்டி (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சங்கீதாவிடம் சங்கிலியை பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.

    இதை தொடர்ந்து வீரபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த வீரபாண்டி, இன்று(திங்கட்கிழமை) மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.
    2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பணியில் வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தும், சீல் வைத்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.
    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக, கலெக்டர் லலிதா உத்தரவின்படி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் பாலாஜி தலைமையில், வட்டாட்சியர் ராகவன், நகராட்சி ஆணையர் பாலு, நகர்நல அலுவலர் மருத்துவர் மலர்மன்னன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வாகனத்தில் சென்று, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினர். தனியார் மருத்துவமனை, ஜவுளிக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா என ஆய்வு மேற்கொண்டனர்.

    கோட்டாட்சியர் பாலாஜி பேசும்போது, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பணியில் வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தும், சீல் வைத்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திங்கள்கிழமை முதல் வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

    மேலும், கொரோனா விதிமுறைகளை கடை பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ.8400 அபராதம் விதித்தனர்.
    திருக்கடையூரில் நான்கு வழி சாலைக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறையினரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    திருக்கடையூர்:

    கொள்ளிடம் முதல் பொறையாறு வரை என்.எச். 45ஏ நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடத்தில் இருந்து பொறையாறு வரை உள்ள நிலம் மற்றும் வீடுகள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், மேல் முறையீட்டிற்கான விசாரணை நடத்தாமலும், குடியிருப்புகளை இடித்து சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பின்றி திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பு போட்ட சாலையில் உள்ள வீடு, மரம் மற்றும் நிலங்களை பொக்லின் எந்திரம் மூலம் அப்புறப்படுத்த வந்தபோது பணியை செய்யவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன், பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மயிலாடுதுறை ஜங்‌ஷனில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ரெயில்வே ஜங்‌ஷனில் தென்னக மேலாளர் ஜான் தாமஸ், திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    புதிதாக அமைக்கப்பட்ட உடல் எடை, உயரம் உள்ளிட்ட பிஎம்ஐ சரிபார்க்கும் எந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மேலும் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்தார்.

    ஆய்விற்கு வந்து பொதுமேலாளரிடம் எம்.எல்.ஏ.ராஜகுமார் திருச்சி-சென்னை சோழன் விரைவு ரெயிலை ஜனசதாப்தி விரைவு ரெயிலாக மாற்றி தினமும் 2 முறை சென்னை சென்றுவர இயக்கவும், நாகூர்- பெங்களூரு பாசஞ்சர் ரெயில், மயிலாடுதுறை- விழுப்புரம், திருச்சி பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் தென்னக மேலாளர் ஜான்தாமஸ் கூறுகையில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை ஆய்வு பணிகளை மேற்கொள்வதாகவும், தொற்று பரவலால் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

    தற்போது ஒமிக்ரான் பரவி வருகிறது. தொற்று குறைந்த பிறகு அவற்றை மீண்டும் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால்-பேரளம் ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 2022-23-ம் ஆண்டு நிறைவு பெறும்.

    திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் வரும் மார்ச் மாதத்தில் பணிகள் முடிவடையும். மயிலாடுதுறை ஜங்‌ஷனில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உடன் ரெயில்வே அதிகாரிகள் இருந்தனர்.
    மயிலாடுதுறையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரஹமத்துல்நிஷா மகன் யூசுப்கான் (வயது 19). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.காம். படித்து வந்தார்.

    அப்பா இறந்து விட்டார். தாயுடன் வசித்து வந்த அவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்தபோது தருமபுரம் பர்மா காலனி அருகே தனியார் பேருந்து யூசுப்கான் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து பஸ் ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் கைது செய்தனர்.
    இளைய மதுக்கூடம் கிராமத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே ராதாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இளைய மதுக்கூடம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் செல்லும் வாய்க்காலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ராதாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அகோரம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவை நேற்று நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இளைய மதுக்கூடம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான வாய்க்கால் பாலம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு, ராதாநல்லூர், சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டித்தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தலைமையாசிரியரின் தொந்தரவால் ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் விலங்கியல் துறையில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில் (36). இவர் நாட்டுநலப்பணி திட்ட அலுவலராகவும் பணியாற்றியும் வருகிறார்.

    செருப்பு அணிந்து கொண்டு தலைமையாசிரியர் அறைக்கு வரக்கூடாது என்ற தலைமை ஆசிரியரின் உத்தரவுக்கு ஆசிரியர் செந்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், செந்தில் சமர்ப்பித்த பாடக்குறிப்பேட்டில் தலைமையாசிரியர் சித்ரா கையெழுத்திடாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆசிரியர் செந்தில் நேற்றுகாலை பள்ளியில் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். அவரை சக ஆசிரியர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    பாதிக்கப்பட்ட ஆசிரியரை நலம் விசாரிக்க தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மருத்துவமனையில் திரண்டனர். தலைமையாசிரியர் சித்ரா மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வதாகவும், செருப்பு அணிந்து கொண்டு ஆசிரியர்கள் தலைமையாசிரியர் அறைக்கு வரக்கூடாது, வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை வேறு பணி செய்ய சொல்வது போன்ற செயல்களால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக சகஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். ஆசிரியர்கள் மீது விரோதப்போக்கை கடைப்பிடிக்கும் தலைமையாசிரியர் மீது கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தலைமையாசிரியரின் தொந்தரவால் ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், நேற்று காலை வந்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு துர்கா ஸ்டாலின் அர்ச்சனை செய்தார். பின்னர் அவர், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதேபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    ×